சனி, ஏப்ரல் 26, 2014

எங்கள் வீட்டின் நடுவே புத்தர் இருந்தார்

ஆக்கம்: அமலதாஸ் பிரான்சிஸ் , பிரான்ஸ்

எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டே எங்கள் வீட்டில் புத்தர் படம் இருந்தது . புத்தர் படம் மட்டுமல்லாது காந்தி, நேரு, நேதாஜி, பாரதியார், கண்ணன், திருவள்ளுவர் என நிறையப் படங்கள் வீட்டினுள் வரிசையாக இருந்தன. நட்ட நடுவாய் பெரிய  இருதய ஆண்டவர் படம்மும் அதற்கு அடுத்தடுத்து மற்றப் படங்களும் இருந்தன.வீடு படங்களால் நிறைந்திருந்தது. வலது கோடியில்தான் கண்மூடித் தியானத்திலிருக்கும் புத்தர் படம் இருந்தது.
 நான் "புத்தரின் காது ஏன் நீண்டிருக்குது? புத்தருக்கு ஏன் கொண்டை இருக்குது?" என்று அம்மா தொடங்கி வீட்டுக்கு வரும் அனைவரையும் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் யாரும் பதில் சொன்னதே இல்லை.

எனக்கு ஐந்து வயது வந்து பள்ளிக்குச் செல்லும் வரை இந்தப் படங்களில் இருக்கும் பெரியவர்களோடுதான் என் பொழுது போகும். இருதய ஆண்டவரிடம் செபிப்பதும். வள்ளுவர் ஏன் ஆணி வச்சிருக்கிறார்? என்று ஆராய்வதும், சேட் இல்லாத காந்தியைப் பற்றிக் கவலைப் படுவதுமாய் இருந்த என்னையும் எங்கள் வீட்டின் அழகையும் ஒரு வேலி  கெடுத்தது.
எல்லாக் கிராமத்திலும் வரும் வேலிச் சண்டையும் பங்காளிச் சண்டையும் ஆக்களை மட்டுமல்ல உடைமைகளையும் தாக்கியது.அப்பாவின் சார்பில் இருதய ஆண்டவர் நெஞ்சிலே குத்துப் பட்டார். காமராஜருக்கு ஒரு கண்ணில்லை. நேருவின் தொப்பி தனியே கிடந்தது.

அந்தப் பேரிடரில் இருந்து தப்பியவர்கள் வெண்ணை உண்ணும் 'பால கிருஷ்ணனும்', புத்தரும் மட்டுமே. அப்போதுதான் நான் பள்ளிக்குப் போகத் தொடங்கியதால் படிப்பும் பள்ளி நண்பர்களும் பாடல்களும் கதைகளும் படங்களின் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன.

சில நாட்களின் பின் திருமணம் முடித்து விருந்துக்கு வந்திருந்த ஒரு தம்பதிக்குப் பாலகிருஷ்ணர் பரிசாகப் போனார் .புத்தர் தனியாகவே இருந்தார் . வேறு படங்களை மாட்டி வைக்க அம்மா விரும்பவும் இல்லை .அதற்கான சூழலும் இல்லை.

நான் பள்ளி இறுதி வகுப்பு  படிக்கும் காலத்தில் இனப் பிரச்சினை உச்சத்திலிருந்தது எல்லா இயக்கங்களும் இயங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் அயலவருக்கும் புத்தர் படம் ஆச்சரியம் தந்தது."  புத்தர ஏன் வச்சிருக்கிறியள்?" என்ற கேள்விக்கு நாங்கள் யாரும் பதில்சொல்வதில்லை.




எல்லா ஊர்களும் இனப் பிரச்சினையில் இடம் பெயர்ந்தன. ஆனால் எங்கள் ஊரில் பெரிதாய்ப் பிரச்சினை வரவில்லை. இந்திய ராணுவம் வந்தபோதும் உரும்பிராய், கோண்டாவில் பக்கம் போல் எந்த அழிவும் இல்லை. நாங்கள் நல்லாய்த் தான் இருந்தோம்.புத்தரும் எங்களுடன் இருந்தார்.
 தொண்ணூறில் தீவுப் பகுதியில் ராணுவம் இறங்கியபோதுதான் முதலும் கடைசியுமாய் நாம் இடம் பெயர்ந்தோம் .புத்தரை எங்களுடன்  எடுத்துச் செல்லலாம் என்ற என் யோசனையை அப்பா நிராகரித்து ,புத்தரை நடு வீட்டில், 'வீடு பூரும் சிங்கள ஆமி'க்குத் தெரியும் வண்ணம் எங்கள் வீட்டின் காவல் தெய்வமாய் வைத்து விட்டு இடம் பெயர்ந்தோம்.

அதன் பின் நான் எங்கள் வீட்டுக்குப் போனதில்லை. எங்கள் அயலில் மற்ற வீடுகள் சூறையாடப் பட்டாலும் எங்கள் வீடு முற்றாக எரிக்கப் பட்டதாம் யாரோ சொல்லிக் கேள்விப் பட்டபோது  "  ம்ம் ..புத்தரும் போயிற்றார்"  என்ற ஆதங்கம் தான் வந்தது.

பிறகொரு நாள் இந்தியாவில் அப்பாவைச் சந்தித்தபோது அப்பா கேட்டார்  "ஆமிக்காரன் புத்தரைக் கண்டதால்தான் எங்கட வீட்டக் கொளுத்தினானா ? இல்லக் காணாமல் கொளுத்தினானா? சில வேளை புத்தரை ஒரு ஆமி எடுத்துக் கொண்டு போயிருப்பானோ?"  என்று பல கேள்விகளை என்னிடம் கேட்டார். எனினும் என்னிடமிருந்து அவர் பதிலை எதிர்பார்க்கவில்லை.

இன்று அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன். பரிசின் புறநகர்ப் பகுதியில் வசித்துவரும் அவர் வீடு மாறி இருந்தார் .புது வீடு எப்படி இருக்கிறது எனப் பாக்கப் போனேன் .

அண்ணன் வீட்டின் நடுவிலும் ஒரு புத்தர் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக