ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

லண்டனில் ஒரு யாழ்ப்பாணம்

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது.
தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல
வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெருத்த வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்தப் பாடசாலைக்கு நிர்வகிக்கின்ற நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை அப்படியே திரும்ப நினைவுபடுத்துகின்றனர். அதுவும் 80களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்றனர். ஆண் வாத்தியார்களுக்குப் பிரம்பையும், பெண்களுக்கு சுடுதண்ணிப் போத்தலையும் களட்டிவிட்டால் யாழ்ப்பாண வாத்திமார்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது.
பெரும்பாலானவர்கள் "பாட்டி வடை சுட்டு விற்ற" கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை "ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா"? என்று நான் கேட்டு வைத்தேன். "கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும்" என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.
அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் 'பிளாஷ் பாக்கில்' வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.
இன்னொரு குழந்தை தீபாவளி நாளில் எப்படி எல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்று கூறி வைத்தது. இன்னும் ஒரு குழந்தை தமிழின் பெருமையையும், ஆறுமுக நாவலரையும் பற்றிப் பேசியது.
குழந்தைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்ட ஒரு சூழலை அவர்கள் மீது திணித்து அவர்களை 'யாழ்ப்பாணத் தமிழர்களாக்கி' மகிழும் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் திமிருக்கு 'தமிழ்க் கல்வி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
  நாம் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளில் கூட, அரச பாடசாலைகளில், கல்வி கற்பதற்கு நவீன முறைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். 'நவீனமொழிகள்' என்று அழைத்துக்கொள்ளும் ஐரோப்பிய மொழிகளை அந்த மொழி பேசாத குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு ஐரோப்பியர்கள் நாளந்தம் புதிய உக்திகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மொழி மீதான விருப்பை உருவாக்கும் வகையில் புதிய வழிமுறைகள் எல்லாம் கையாளப்படுகின்றன.
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கூட ஆங்கிலம் கற்பிக்கும் போது லண்டனிலிருந்து ஈலிங்கிற்கு தாமதமாக வந்த புகையிரதத்தைப்பற்றிப் போதிப்பதில்லையே.
ஐரோப்பிய நாடுகளில் சந்திக்கும் நாளந்தப் பிரச்சனைகளைக் கூட தமிழ் மொழியில் கதைகளாக மாற்றி குழந்தைகளுக்குப் போதிப்பது போன்ற சிறிய உக்திகளைக் கூட இவர்கள் கையாளாத 'பழமைவாதிகள்'.
தமிழ் கற்பித்தல்தான் இப்படி என்றால் அவர்களின் அடுத்த கனவு 'கர்நாடக சங்கீதம்'. பாடுவதற்கு ஆர்வமற்ற குழந்தைகள் கூட பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க தெலுங்குக் கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.
யாழ்ப்பாண உயர்குடிகளின் 'மையவாதம்' தான் இந்தப் பாடசாலைகளும் அவற்றில் 'துன்புறும்' ஒன்றுமறியாக் குழந்தைகளும்.
அண்மையில் கொரிய பாடசாலை ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. சனிக்கிழமைகளில் நடக்கும் அந்தப் பாடசாலையில் மொழி கற்பிக்க ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள், முதலில் ஆங்கிலத்திலெயே கொரிய கலாச்சாரம் உட்பட ஏனைய நாடுகளின் கலாச்சரங்களையும் கற்பிக்கிறார்கள். சிந்து வெளி நாகரீகம் எல்லாம் கூட கற்பிக்கிறார்கள். பின்னர் மாணவர்களுக்கு ஒரு விருப்பு ஏற்பட்டதும் கொரிய மொழிகளின் சில பகுதிகளை அவர்களே உருவாக்கிய கதைகளின் ஊடாகக் கற்பிக்கிறார்கள்.
இது முழுமையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் ஒரு 'திட்டமிடல்' இருக்கிறது என்பதே இங்கு உண்மை.
யாழ்ப்பாணத்தைப் பெயர்த்துவைத்து அழகு பார்க்க எண்ணினால் தமிழை அல்ல தமிழில் பொதிந்திருக்கும் 'அழுக்குகளையே' நமது சிறார்கள் கற்றுக்கொள்வார்கள்.

நன்றி:இனிய விழம்பன், ஐக்கிய இராச்சியம்

1 கருத்து:

viyasan சொன்னது…

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாடுகளில், யாழ்ப்பாணத்தில் தமிழ் கற்ற முறையில், “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி” போன்ற பாட்டுக்களையும் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்று யாழ்ப்பாணம் சோமசுந்தரப்புலவரின் பாடல்களை மட்டுமல்ல, பாரதியாரின் பாடல்களையும் தான் கற்பிக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில், ஈழத்தமிழ்ச் சிறுவர்களுக்கு தமிழ் கற்பிப்பதன் நோக்கமே, அவர்களின் தாய்நாட்டில்- ஈழத்தில், அதாவது உங்களின் கருத்துப்படி அவர்களுக்கு முன்பின் தெரியாத “யாழ்ப்பாணத்தில்” ஒரு ஆவலை, ஏற்படுத்தி, அதைப் பற்றிய உணர்வுகளைத் தூண்டி விடுவதற்காகத் தான்.. உதாரணமாக, வேலை முடிந்து வந்து, என்னுடைய மருமகனை நான் தான் தமிழ் வகுப்புகளுக்கு, கூட்டிக் கொண்டு போய் விட்டு, மீண்டும் போய் ஏற்றி வருவது வழக்கம். அவன் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆவலில், நான் அதைச் செய்கிறேன். தமிழ் வகுப்பு முடிந்து திரும்பி வரும்போது, அவன் கேட்கும் கேள்விகள், மாமா, இலங்கையில் உங்களின் வீட்டில எத்தனை ஆடிருந்தது, மாடிருந்தது, தென்னைமரம் இருக்கிறது, மாமரம் இருக்கிறதா, இப்பவும் இருக்கா என்னும் போதெல்லாம், எனக்கே அது பழைய நினைவுகளை மனதுக்குக் கொண்டு வருகிறது. “லண்டனிலிருந்து ஈலிங்கிற்கு தாமதமாக புகையிரதம் வந்ததைப்” பற்றி, அவர்கள் தொலைக்காட்சியில், இணையத்தில், ஏன் நண்பர்களிடமிருந்து ஏற்கனவே பகல் நேர ஆங்கிலப் பாடசாலையில் கேள்விப்பட்டிருப்பர்கள். இரண்டாவது, மூன்றாவது தலைமுறை ஈழத்தமிழ்க் குழந்தைகளும், பிஜி, மலேசிய, மொரீசியஸ், கரீபியன் போன்ற தீவுகளுக்குப் போன தமிழ்நாட்டுத் தமிழர்கள் போல், தமது தாயகத் தொடர்புகளை, மொழியை இழந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், ஈழத்தமிழர்கள் தமது குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கிறார்கள்.

கருத்துரையிடுக