சனி, மே 12, 2012

ஓரம்போ.. ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது


கிராமங்களில் எல்லாப் பருவத்திலும் விளையாட ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதில் கிடைக்கும் நிறைவு இதமான ஒன்று. ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் உருவாக்க ஒரு குறிப்பிட்ட யுக்தியும், உழைப்பும் தேவைப்படும்.

வெயில்காலம் துவங்கும் காலத்திற்கு முன்பே, பனை மரங்களில் குறும்பைகள் விடத் துவங்கியிருக்கும். அப்போதே ஆளாளுக்கு இது என் மரம், இது உன் மரம் என்று நானும் அண்ணனும் பங்கு பிரித்துக்கொள்வோம். அடிக்கடி பார்த்துப் பார்த்து எத்தனை குலை விடுகிறது என்பது குறித்து தோராயமாக ஆராய்ச்சி நடக்கும்.

நாட்கள் நகர ஒரு சுபயோக சுப ஞாயிற்றுக்கிழமை நொங்கு வெட்ட நிர்ணயிக்கப்படும். காலையிலிருந்தே கூடையோடு பரபரப்பாக காத்திருந்து, ஆள் மேலே ஏறி வெட்டிப்போடும் போது தூரமாய் ஒதுங்கி நின்று, கீழே விழுந்தவுடன் குலையிலிருந்து சிதறியோடும் நொங்குளைப் பொறுக்கி, இப்படியாக ஒவ்வொரு குலைக்கும் சிதறிய காய்களை கூடையில் சேர்க்க, பெரியவர்கள் குலைகளைச் சுமந்து வர, அதிக குலை, இளம் நொங்கு என யார் மரம் சிறந்தது என்று ஒரு தீர்ப்பு வழங்கப்படும்.

வாகாய் ஒரு இடத்தில் எல்லாவற்றையும் குவித்து, பளபளவென தீட்டிய அரிவாளால்,பதமான நொங்கை எடுத்து, சரக்கென சீவித் தர, கைகள் பரபரக்கும். கட்டை விரலால் வேகமாய் பளபளக்கும் நொங்கை குத்த வெதுவெதுப்பா தண்ணீர் பீச்சியடிக்கும் முகம் முழுதுக்கும். அப்படியே உதட்டோடு ஒட்டி உறிஞ்சி, அடுத்த சில மணி நேரங்களில் வயிறு கனக்க அடுத்த பணி ஆரம்பிக்கும்.

சீவிப் போட்டு, உறிஞ்சி வீசிய காய்களில் இது உனக்கு, இது எனக்கு” கையகப்படுத்துவதில் போட்டி நிலவும். ஒரு வழியாய் வட்டமாய், அழகாய் சீவப்பட்ட நொங்கை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, அரிவாளாடு நொச்சி மரத்துக்கோ, கொய்யா மரத்துக்கோ ஓடி ஒரு நீளமான, அதுவும் மிக நேர்த்தியாக கிளை பிரியும் குச்சியை வெட்டி அதை அழகாக கத்தரித்து, கூடவே ஒரு அடி நீளத்திற்கு ஒரு குச்சியை வெட்டி எடுத்துக்கொண்டு வருவோம்.

அடுத்து வண்டி தயாரிக்கும் பணி சிரத்தையாக நடைபெறும். சமமான அளவில், ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு காலி நொங்கு காய்களை எடுத்து, அந்த ஒரு அடி குச்சியை அச்சாக வைத்து இரண்டு நொங்குகளின் முதுகில் இரு சிறு துளை போட்டு, அச்சின் இரண்டு பக்கமும் சக்கரமாக பொருத்தப்படும்.
அடுத்து கவட்டியாக இருக்கும் நீண்ட குச்சியின் தலையில் ஒரு நொங்கு ஸ்டியரிங்காக பொறுத்தப்படும். அடுத்து ஸ்டியரிங் பொறுத்தப்பட்ட குச்சியின் மறுமுனையிலிருக்கும் கவட்டி அச்சின் மையத்தில் வைக்கப்பட்டு, கவட்டி பிரியாமல் இருக்க சின்ன கம்பியின் துணையோடு கட்டப்பட்டவுடன் நொங்கு வண்டி தயாராகிவிடும்.

அடுத்த விநாடி முதல் வீடு, வாசல், காடு மேடு, களத்து மேடு என எங்கு சென்றாலும் நொங்கு வண்டி முன்னே செல்ல, பின்னால்தான் பயணம். சில சமயம் வீட்டில் கிடக்கும் பழைய இரும்பு முறத்தையோ அல்லது தகரத்தையோ முறம் போல் வளைத்து ஒரு கம்பியால் கட்டி வண்டிக்கு ட்ரெய்லர் செய்வதும் உண்டு.

வீட்டில் எப்போதும் வேலை சொன்னால் பிடிக்காது, ஆனால் நொங்கு வண்டி செய்த பின் வண்டியோடு சென்று செய்யும்படியான வேலைகள் மிகவும் பிடித்ததாக மாறிவிடும். நொங்கு வண்டியின் வாழ்நாளும் சில நாட்கள்தான். அடுத்த சில நாட்களில் நொங்கு காய்கள் சுருங்க ஆரம்பிக்க, அச்சில் இருந்து சக்கரம் கழண்டு போக ஆரம்பிக்கும். மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த வாரம் வெட்டப்படும் நொங்கிற்காக காத்திருக்க ஆரம்பிக்கும்..

நொங்கு வண்டியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வெறும் ஒரு பிம்பமாக மட்டுமே நினைவில் புகைபடிந்த உருவமாய் இருக்கின்றது. கிராமத்தில் குலையாய் வெட்டி வந்து சீவிச்சீவி வயிறு புடைக்க நொங்கு தின்று எத்தனை வருடம் ஆகிறது என்பதுவும் நினைவில் இல்லை.
நெடுஞ்சாலைகளில் சாலையோரம் கேரி பேக்குகளிலோ அல்லது பச்சை பனை ஓலைகளிலோ தொல்லியோடு (நொங்கு ஓடு) தோண்டி எடுத்து விற்பனையாகும், முற்றிய நிலையில் இருக்கும் கடுக்காய் நொங்குகளை வாங்கித் தரும் போது, ஒரு மாதிரியாக சுவைத்துத் தின்னும் குழந்தையை பார்க்கும் போது, கொஞ்சம் குற்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆசையாய் வாங்கி அடுத்த சில நாட்களில் திகட்டிப் போகும் விளையாட்டுப் பொருட்களைக் காணும் போதெல்லாம் சுயமாய், இயந்திரவியலோடு உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நொங்கு வண்டிகள் மனதுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடுவதை என்ன செய்தாலும் நிறுத்த முடிவதில்லை.
நனறி: இதயபூமி

3 கருத்துகள்:

Seetha சொன்னது…

தாசன் எங்களுக்கு நுங்கு சாப்பிடவேணும். போல விருப்பமாய் இருக்கு சிறு பிள்ளைகள் போல அதை வேண்டிதங்கோ, என்று கேட்க நினைவு வந்தது,

Suthan France சொன்னது…

Nice. i like too much. nunku

Saro germany சொன்னது…

very sweets, when if i going to srilanka i like eat nunku. Thanks ethayapumi

கருத்துரையிடுக