ஞாயிறு, மே 27, 2012

தாரமும் குருவும் பகுதி 7.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 7.3
ஒன்பதாம் வகுப்பு நினைவலைகள்
திடீரென்று பாலர் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பை நோக்கித் தாவி விட்டேன் என நினைக்காதீர்கள். எல்லாம் காரணத்தோடுதான். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய இத்தொடரில் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தில் வகுப்பில் \மாணவர் தலைவர்\ ஆவதற்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் நான் ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் படித்த பள்ளியாகிய யாழ்/புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் மாணவர் தலைவன் ஆவதற்குரிய தகுதிகளைப் பற்றியும் சில வரிகள் கூற விரும்புகிறேன். நான் முன்னமே குறிப்பிட்டதுபோல் அது ஆண்கள் மட்டுமே கல்வி கற்கும் ஒரு தனியார் பாடசாலை. அது மிகவும் பிரபலமான வரலாற்றைக் கொண்ட பாடசாலை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.அந்தப் பள்ளியில் 1980 களில் வகுப்பில் மாணவர் தலைவன் ஆவதென்றால் பின்வரும் தகுதிகள் மேற்படி மாணவனுக்கு இருத்தல் வேண்டும்.
  • மாணவன் சிறு வயது முதலே அக்கல்லூரியில் கல்வி கற்றவனாக இருத்தல் வேண்டும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • மாணவன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.
அல்லது
  • அந்தக் கல்லூரியில் புகழ்பெற்ற மாணவனாக விளங்கிய ஒரு தந்தையின் மகனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த, அந்தக் கல்லூரியின் நிர்வாகத்துடன் சம்பந்தப் பட்ட குருவானவர்கள், கன்னியாஸ்திரிகளுடன் ஏதாவது ஒரு வகையில் அறிமுகம் உள்ள ஒரு மாணவனாக இருத்தல் வேண்டும்.
அல்லது
  • உயர்ந்த பதவிகளை வகிக்கும் பெற்றோர்களின் பிள்ளையாக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு தகுதிப் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். நிலைமை இவ்வாறு இருக்கையில் மேலே குறிப்பிட்ட எந்தத் தகுதிகளும் இல்லாத நான், அந்தப் பள்ளியில் சேர்ந்து மூன்றே மாதங்களில் வகுப்பில் மாணவர் தலைவன் ஆகி விட்டேன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அல்லது நான் பழுகுகிறேன்/பொய் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணக் கூடும். ஆனால் நான் சொல்வது சத்தியமான வார்த்தைகள்.
நீங்கள் கேட்கலாம் "மேலே குறிப்பிட்ட தகுதிகளில் நீல நிற எழுத்துக்களில் எழுதப்பட்ட தகுதிகூட உன்னிடம் இருக்கவில்லையா? என்று கேட்டால் எனது பதில் "இல்லை" என்பதுதான். காரணம் அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில் எனது வகுப்பில் படித்த மாணவ, மாணவிகளோடு ஒப்பிடுகையில் நான் மிகவும் கெட்டிக்காரனே தவிரவும் யாழ்/சம்பத்திரிசியார் கல்லூரியில் என்னோடு கல்விகற்ற கல்விச் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்,பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள், பரம்பரைக் கோடீஸ்வரர்கள் போன்றோரின் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் நான் வெறும் சராசரி மாணவன்(Average Student) மட்டுமே. அப்படியிருக்கையில் நான் எவ்வாறு 'மாணவர் தலைவன்' ஆக முடிந்தது? என்பதுதானே உங்கள் கேள்வி. மேலே நான் குறிப்பிட்ட எல்லாத் தகுதிகளை விடவும் விசேடமாக ஒரு தகுதி என்னிடம் இருந்தது.(இப்போதும் இருக்கிறது) அது வேறொன்றும் இல்லை என்னிடம் இருந்த/இருக்கின்ற 'தமிழ்ப்புலமை' தான் அது. ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு தனியார் பாடசாலையில் தமிழ்ப் புலமைக்கு மதிப்புத் தரப்பட்டதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா? எனது விளக்கத்தை அறிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டும் பொறுத்திருங்கள்.
(தொடரும்)

1 கருத்து:

vettha.(kovaikavi) சொன்னது…

OH! nalvaalthu. thodarunghal.....

கருத்துரையிடுக