ஞாயிறு, மே 13, 2012

தாரமும் குருவும் - பகுதி 7.2

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 7.2
அல்லைப்பிட்டி 1977
ஏறத்தாழ ஒரு மாத இடைவெளியின் பின்னர் தொடர்கிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் என்னை மன்னியுங்கள். எல்லாம் நேரப் பற்றாக்குறைதான் காரணம். கடந்த மாதம் எட்டாம் தேதி எழுதிய மேற்படி தொடரின் அல்லைப்பிட்டி பற்றிய குறிப்பில் 'அல்லி' மலர் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மேற்படி அல்லி மலர் அதிகமாகக் காணப்பட்டதால் 'அல்லிப் பிட்டி' என பெயர் வந்து, அதுவே பின்னர் 'அல்லைப் பிட்டியாக' மருவி இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு ஆனால். அல்லைப்பிட்டியில் உள்ள மூன்று குளங்களும் மகா பராக்கிரம பாகுவின் காலத்தில் அல்லது எல்லாள மன்னனின் காலத்தில் வெட்டப் பட்டவை என்று நம்பப் படுகிறது.இக்குளங்களில் இரண்டில் மட்டும் அல்லிக் கொடிகள் ஒன்றிரண்டு காணப்படுகின்றன. ஆனால் அல்லிக் கொடிகளை விடவும் 'தாமரைக் கொடிகள்' அதிகமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு பார்த்தால் எமது கிராமத்திற்குத் 'தாமரைப் பிட்டி' என்றல்லவா பெயர் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆகவே இந்த அல்லிப் பூ அல்லது 'அல்லிப் பிட்டி' சமாச்சாரமும் ஏற்கக் கூடிய ஒன்று அல்ல.
அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தில் நான் படித்த காலத்தில் அங்கு பணியாற்றிய ஆசிரியர்களில் அரைவாசிப் பேர் அல்லைப்பிட்டியைப் பூர்வீகமாவோ அல்லது வசிப்பிடமாகவோ கொண்டவர்களாயிருந்தனர். மீதி அரைவாசிப் பேர் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் பணியின் நிமித்தம் அல்லைப்பிட்டிக்கு வந்து போயினர். இவர்களில் ஒரு ஆசிரியையின் பெயர் 'கொன்செப்ட்ரா'(கிறிஸ்தவப் பெயர்) என்பதாகும். நான் ஆறாம் வகுப்பில் படித்த காலத்தில் இவர் தமிழ்,சுகாதாரக் கல்வி மற்றும் பெண் பிள்ளைகளுக்கான 'மனையியல்'(Home science) போன்ற பாடங்களைக் கற்பித்து வந்தார். சரி, அவர் பற்றிய அறிமுகத்தை அப்படியே விட்டுவிட்டு, தீவகத்தில் பெண்கள் வெளியே செல்கையில் கடைப்பிடித்த நடைமுறையைப் பற்றியும் கூறி விடுகிறேன். அதாவது ஒரு பெண் தனது அயல் தவிர்ந்த தொலை தூரத்திற்குப் போவதானால் ஒரு ஆணின் துணையுடனேயே செல்வது வழக்கம். அது தனது கணவனாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம், தனது சகோதரனாக இருக்கலாம் ஆகக் குறைந்தது தனது குடும்ப உறவில் உள்ள ஒரு சிறுவனாகவும் இருக்கலாம். இவ்வாறு ஒரு ஆணின் துணையுடனேயே தொலை தூரத்திற்குச் சென்று வருவது வழக்கமாக இருந்தது. இதை 'வழித்துணை' என்றோ 'ஆம்பிளைத் துணை' என்றோ கிராமியத் தமிழில் அழைத்தனர்.இதே நடைமுறையே இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது
என்பதையும் நான் அறிவேன்.
சரி மீண்டும் 'கொன்செப்ட்ரா டீச்சரின்' விடயத்திற்கு வருகிறேன். அவருக்கு திடீரென்று ஒரு நாள் அரை நேரத்துடன் (நண்பகல் 12 மணியுடன்) விடுப்பு(லீவு) எடுக்க வேண்டிய நிலை. அவர் யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்கு 'அல்லைப்பிட்டிச் சந்திக்குச்' செல்ல வேண்டும். அவர் 'வழித்துணையாக' என்னை அழைத்துச் செல்வதற்கு அதிபரிடம் அனுமதி பெற்றிருந்தார். அது எனக்கு அந்தக் காலத்தில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம் நண்பகல் 12 மணிக்கு எனக்கு(2 மணித்தியாலங்கள் முன்னதாகவே) பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கிறது அல்லவா? அது எவ்வளவு ஆனந்தமான விடயம். அதை விடவும் நான் வசித்த எனது பேர்த்தியாரின் வீடும் அல்லைப்பிட்டிச் சந்திக்கு அருகிலேயே இருந்தது. அது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. டீச்சருடன் பேசிக்கொண்டே அல்லைப்பிட்டிச் சந்தியை நோக்கி நடந்துகொண்டு இருந்தபோது திடீரென்று அல்லைப்பிட்டி என்று பெயர் வரக் காரணம் என்ன? என்ற பேச்சு எழுந்தது. உடனே டீச்சரும் எங்கள் அல்லைப்பிட்டி மக்களில் பெரும்பாலானவர்கள் கூறுவது போன்றே "அல்லிப்பிட்டி என்று முதலில் இருந்து பின்னர் மருவியதால் அல்லைப்பிட்டி என்று ஆனது" என்ற வாதத்தை முன் வைத்தார். 'அல்லிப்பிட்டி' என்பது சிங்களப் பெயர் என்றும், தனக்கு சிங்கள மொழியை எழுத, வாசிக்க, பேசத் தெரியும் என்றும் கூறினார்.
அல்லைப்பிட்டிச் சந்தியில் இருந்த திசைகாட்டிக்(வழிகாட்டும் கல்லில்) கல்லில் 'அல்லைப்பிட்டி' என்று மூன்று மொழிகளில் எழுதப் பட்டிருக்கும் அதில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் என்னால் வாசிக்க முடிந்த மொழிகள். உடனே டீச்சர் மூன்றாவதாக சிங்களத்தில் எழுதப் பட்டிருந்ததைத் தொட்டுக் காண்பித்து "இதோ பார் இங்கு 'அல்லிப்பிட்டி' என்றுதான் எழுதப் பட்டுள்ளது" என்றார். டீச்சரின் வார்த்தைக்கு மறு வார்த்தை கூறும் அளவிற்கு அப்போது எனக்குச் சிங்கள மொழியில் தேர்ச்சி இருக்கவில்லை. நான் வளர்ந்தபின் ஒரு இருபது வருடங்கள் கழித்து 'கொன்செப்ட்ரா டீச்சர் கூறியது' பொய் என்று அறிந்து கொண்டேன். எனது தாயார் உட்பட அல்லைப்பிட்டியில் பிறந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்து விட்டேன். அதில் அல்லைப்பிட்டி எனும் பெயரின் சிங்கள உச்சரிப்பை 'அலபிட்டிய'(අලපිටිය Alapitiya)என்றுதான் எழுதியிருப்பார்களே தவிர 'அல்லிப்பிட்டி' என்று எழுதவில்லை என்பதை நான் நன்கறிவேன். ஒரு புதிய மொழியைத் தெரியாத ஒரு மாணவனை டீச்சர் நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு 20 வருடங்கள் எடுத்தது. "கொன்செப்ட்ரா டீச்சர் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு அற்ப விடயத்திற்காக உங்களைப் போன்ற ஆசிரியர்கள் எவ்வாறு 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை பொய் சொல்லி சமாளித்து ஏமாற்றுகிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்".
(இன்னும் சொல்வேன்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

15 கருத்துகள்:

amalathas சொன்னது…

வணக்கம் தாசன் ! நீங்கள் எழுதிய தாரமும் குருவும் 7 .2 .பார்த்தேன்.
அல்லைப்பிட்டியை பற்றி எழுத வந்திற்று, மீண்டும் 'வாத்திமார் முற்றுகையை'த் தொடங்கியிருக்கிறீர்கள்.
போற்றும்போது புனைபெயரிலும் தூற்றும்போது உண்மைப் பெயரிலும் எழுத முனைகிறீர்களா?.
ஐடென்ட்டி காட்டில வாசிச்சு அவ அல்லிப்பிட்டி என்று சொல்ல இல்ல. அவ சந்தியில நின்ற பேர் பலகைக் கல்லிலதான் வாசிச்சவ
தயவு செய்து அதை செக் பண்ணவும்.(கல்லில பெயர் எழுதினவர் பிழையாய் எழுதியிருக்கலாம்தானே)
உங்கட கருத்தை வாசிச்சால் அவவிட பேரப்பிள்ளைகள் கூட அவவை ஏளனமாய்ப் பார்க்கும். (நீங்கள் சொன்னது போல் அவ செய்தது பிழையாய் இருந்தால், இது அதி உச்ச பட்ச தண்டனை.)

மனையியல் ரீச்சர் "நான் மனையியல் மட்டும்தான் படிப்பிபேன்" என்று நிற்காமல் பல பாடங்களிலும் கவனம் செலுத்தினார். ஆசிரியர் இல்லாத வகுப்புகளை ஆவலாய்ப் பார்த்துக் கொண்டார். வேதபாட ஆசிரியையாகவும் இருந்திருக்கிறா.அவரிடம் நானும் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு,உடற்பயிற்சி,சங்கீதம்,கலைநிகழ்ச்சிகள் என எல்லாத் துறைகளிலும் தேர்ச்சியுள்ளவர். நாங்கள் நாடகம் போட்டால் ஒப்பனை செய்ய உதவி செய்திருக்கிறா. பெரிய வகுப்பு மாணவர்களுடன் சற்றே நட்புடன் பழகிய ஆசிரியர்களில் அவரும் ஒருவர் எமது கிராமத்தின் மூட நம்பிக்கைகளுடனும் அறியாமைகளுடனும் இருந்த வயது வந்த பெண்பிள்ளைகளுக்கு அவவின் நகரத்து அறிவுரைகள் மிகவும் பயனுடையதாய் அமைந்திருக்கிறது.நான் O/L பரீட்சைக்குப் படிக்கும்போது சங்கீத பாடத்திற்காய் அவ எனக்கொரு சரஸ்வதி இராக கீர்த்தனை சொல்லித்தந்தா (அது அவவின்ர வேலையில்ல. ஆர்வமாய் சொல்லித் தந்தா). நேர்முகப் பரீட்சையில் அவ சொல்லித்தந்த 'சரஸ்வதி தயைநிதி நீ கதி' என்ற கீர்த்தனையையும் பாடினேன். பரீட்சை முடிவில் அந்தக் கீர்த்தனை மிக நன்றாய் அமைந்திருந்ததை நடுவர் பாராடினார். நன்றி ரீச்சர் இன்றைக்கும் அந்தப் பாட்டையும் நீங்கள் கற்றுத்தந்ததையும் நான் மறக்கவில்லை.

Seelan germany சொன்னது…

Very good, article following like this

Kanthan, Denmark சொன்னது…

Oh.... Mr. Amalathas.. You tell how great the teacher in two lines, and then why this loooooooong boring details. why this kolaveri? and please check your comment before posting.. Short and sweet are 4ever good and acceptable, but .... :-(

Seetha சொன்னது…

ஒரு செய்தியை சொல்லவருபவன், உம்மையாக நடந்ததை தான் பகிரங்கமாக சொல்லலாம், அதோடு 4 வகுப்பில் படிபித்த ஆசிரியர். அதோடு நிக்க மாணவன் டாக்டர் ஆகிறான். அவனுக்கு தான் படிக்கும் போது
ஆசிரியர்மார் காட்டிய அன்பு , அதோடு அந்த மாணவனை கெட்டிகரனக்க பாடுபட்ட நாட்களை நினைப்பது. ஒன்றும் புதுமையல்ல, அதை உணரவேண்டும். அதை ஏன் நீங்கள் நினைகிறிங்கள்/

என்பதை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. என் கருத்து என்னவென்றால், நாம் எல்லாம் எத்தனை
கஷ்டம் துன்பங்களை, தண்டி வளர்ந்தோம், இங்கும் வந்துவிட்டோம். எங்களுக்கு படம் பாத்தது. போல siல விசியம். மனதோடு இருக்கும், அதை சந்த்தப்பம் வந்தால் மற்றவர்களுடன் சொல்லுவதாலும், நின்மதி கிடைக்கும்,

amalathas சொன்னது…

நன்றி காந்தன் உங்கட அறிவுரைக்கு.
இதில என்னத்தவெட்டுறது? என்னத்த சுருக்கிறது?
தாசனின் மிகவிரிவாய் நீண்டுகொண்டு போகின்ற தொடருக்கு இப்பிடி விரிவாய்த்தான் எழுதவேண்டியுள்ளது.
தொடருக்கு கருத்துரைதான் எழுதச்சொன்னது. 4 வரியிலதான் எழுதவேணும் எண்டால் அதை ஆசிரியரே முடிவெடுப்பார்.
இப்பிடி comment க்கு comment அடிச்சு திசை திருப்பிற ஆக்களாலதான் பலர் comment எழுதிறதையே விட்டுவிடுகினம்.
தயவு செய்து எங்களைக் கடந்து போங்கோ.
நன்றி.(இதுல என்னத்த வெட்டிச் சுருக்க?)

Allaipiddy old Student சொன்னது…

Hats off to your courage to write about teachers and their "misdeeds". I follow in this post .. Very well written. They say that without knowing anything with certainty, one must not give an uncertain statement, especially a teacher to a pupil. I remember the teacher who boasted that he could be all 3 languages ​​(Singala, Tamil & English) and when a boy asked for help to translate something Singala, well ... I can guess the rest, right?

Amalathas: What about writing an article on your teacher who has taught you so much, instead of typing it in the comments. You're little brother of Sobha Sakthy & Tharmini, famous writer, so you must of course also have talent like that.

Suthan France சொன்னது…

Thanks, for you nice story.

amalathas சொன்னது…

நன்றி நண்பரே!
எழுத்தக் கலைஎல்லாருக்கும் கை கூடுவதில்லை.
நமக்கு வாசிப்பு மட்டும்தான்.

Seetha சொன்னது…

Amalathas, அவர்களுக்கு உங்களை commentஎழுத வேண்டம். என்று சொல்லவில்லை
ஆனால், ஒரு உண்மையையை ஒருவன் சொன்னால் அவனுக்கு, அதை ஏன் சொல்லுகிற
என்பதை விட சில வேளைகளில். எனக்கு யாரும் ஒன்றும் சொல்ல கூடாது, நான் சொன்னால்
நீங்கள் ஏற்று கொள்ளவே வேணும், என்பதுதான் பிழை. comments எழுதினால் தான் ஒரு மனிதன் தான் உரிமையை கட்டுகிறான் என்பதற்கு அறிகுறி. அது அவனது உரிமையும் கூட. u can wriet from urs comment.

Lingathasan சொன்னது…

அனைவருக்கும் வணக்கம்,
எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தைக் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. நான் எனது தொடராகிய 'தாரமும் குருவும்' என்ற அனுபவப் பகிர்வை எழுத ஆரம்பித்து முதல் தடவையாக இன்றைய தினம் இத்தொடருக்கு ஒன்பது கருத்துரைகள் இடப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பாவில் நேரம் இரவு 21.46. நாளை ஒரு வேலை நாளாக இருப்பதால் இன்றைய தினம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதிலளிக்க நேரம் பற்றாக்குறையாக உள்ளது.இருப்பினும் நண்பர்கள் அமலதாஸ், காந்தன் டென்மார்க், சீலன் ஜேர்மனி, சுதன் பிரான்ஸ், அல்லைப்பிட்டி பழைய மாணவன்/மாணவி, சகோதரி சீதா அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றிகள். ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட பதிலை நாளைய தினம்(14.05.2012) எதிர்பாருங்கள்.
உங்களன்புள்ள
இ.சொ.லிங்கதாசன்

Balan சொன்னது…

Very good, all the best.

Malar சொன்னது…

We want happy no body want pain, this story make me sad and happynes.

Lingathasan சொன்னது…

அன்புள்ள நண்பர் அமலதாஸ் அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தங்கள் குற்றச்சாட்டுக்களுக்கான எனது பதிலை முடிந்த வரையில் சுருக்கமாக முன்வைக்க விழைகிறேன்.
1.அல்லைப்பிட்டியைப் பற்றி எழுத வந்த நான் "வாத்திமார் முற்றுகையில்" ஈடுபட்டதாக கூறுகிறீர்கள். மேற்படி தொடரில் அல்லைப்பிட்டியின் பெயர் சம்பந்தமான ஆய்வில் மேற்படி ஆசிரியையுடன் நடந்த உரையாடலும் ஒரு முக்கியமான புள்ளி. அவ்வளவுதான்.
2.போற்றும்போது புனை பெயரிலும், தூற்றும்போது உண்மைப் பெயரிலும் எழுத முனைகிறீர்களா? எனக் கேட்டிருந்தீர்கள். பாரதூரமான குற்றத்தை ஒரு ஆசிரியர் செய்திருந்தால் அவரின் உண்மைப் பெயரை அப்பட்டமாக போட்டு உடைக்க மாட்டேன். இந்த ஆசிரியை அப்படியொன்றும் பெரிய குற்றம் செய்து விடவில்லையே. உண்மைப் பெயரைக் குறிப்பிட்டதனாலன்றோ அவரது நல்ல இயல்புகளைப் பட்டியலிடும் 'அமலதாஸ்' என்ற ஒரு பழைய மாணவனை வெளியே கொண்டுவர முடிந்தது. அது மட்டுமன்றி எனது தொடரில் நான் 'அதிபர்' என்று மட்டும் குறிப்பிட்டு எழுத, அத்தொடருக்குக் கருத்துரை எழுத வரும் 'அமலதாஸ்' மேற்படி அதிபரின் பெயரை நாற்சந்தியில் போட்டு உடைத்தபின் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நான் ஒரு புனை பெயர் கொடுப்பதில் அர்த்தமில்லையே.
3.அடையாள அட்டையில் எழுதியவரும், பெயர்ப் பலகைக் கல்லில் எழுதியவரும் வேறு வேறாக அல்லது இருவரில் ஒருவர் தவறாக எழுதியிருக்கலாம் என்பது உங்கள் ஊகம். நான் அல்லைப்பிட்டியில் பிறந்த ஒருவரது அடையாள அட்டையை வைத்துக்கொண்டு சிங்களத்தில் படித்த ஒருவரிடம் உறுதிப் படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் அதே அடையாள அட்டையையும் அல்லைப்பிட்டிச் சந்தியில் எழுதப் பட்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டும் ஒரே மாதிரி எழுதப் பட்டுள்ளது.'அலபிட்டிய' என்றே எழுதப் பட்டுள்ளது.
4.பெயர்ப் பலகைக் கல்லை எழுதியவர் பிழையாக எழுதியிருக்கலாம் என்பது உங்கள் ஊகம். அடியேனின் கருத்து என்னவெனில் மேற்படி கல்லில் எழுதுபவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் மட்டுமன்றி சிற்பக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர்.அந்த எழுத்துக்கள் வெறுமனே வர்ணத் தூரிகை கொண்டு எழுதப் படுவதில்லை. ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில் பெயர்ப் பலகைக் கல்லில் 'ஊரின் பெயர்' செதுக்கப்பட்டு அதன் பின்னரே அவ் எழுத்துக்களின் மீது வர்ணம் தீட்டப்படும். மேற்படி பெயர்ப் பலகையை அவர் செதுக்கும்போது PWD யைச் சேர்ந்த ஒரு அதிகாரி உடனிருப்பார்.இது 1970 களில் இருந்த நிலை. உங்கள் ஊகத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்.
5. "நீங்கள் சொன்னது போல் அவ செய்தது பிழையாய் இருந்தால், இது அதி உச்ச பட்ச தண்டனை" இது உங்கள் கருத்து. ஆனால் 'அதி உச்ச பட்ச தண்டனை' என்ற சொல்லாடலையும், குற்றச்சாட்டையும் முற்று முழுதாக நிராகரிக்கிறேன். எங்கள் கிராமத்தில் வாழ்ந்த, "மும்மொழிகளிலும் புலமை உண்டு" எனப் புழுகித் திரிந்த(புருடா விட்ட), கொழும்பில் இருந்து அயல்வீட்டு இளைஞனுக்கு சிங்கள மொழியில் வந்த கடிதத்தை வாசித்து விளக்கம் கொடுக்க முடியாது அல்லாடி, அவஸ்தைப்பட்ட 'பம்மாத்துப் பேர்வழிகள்' வரிசையில் எங்கள் டீச்சரும் சேர்ந்து கொண்டார் என்று எனக்கு ஆத்திரமே தவிர, அவரிடம் இருந்த நல்ல இயல்புகளையோ, ஆளுமையையோ, கல்வித் தகைமையையோ நான் விமர்சிக்கவில்லையே.
6. இறுதியாக உங்கள் கருத்தில் உள்ள நேர்மையைச் சந்தேகிக்கிறேன். காரணம் மேற்படி ஆசிரியை 1985 ஆம் ஆண்டிலேயே மாற்றலாகிச் சென்று விட்டார். நீங்கள் O/L பரீட்சை எடுத்த 1986 ஆம் ஆண்டில் அவர் எங்கள் பள்ளியில் பணி புரிந்தார் என நீங்கள் கூறுவது எங்கோ இடிக்கிறதே!!!

அன்புடன்
உங்கள் நண்பன்
இ.சொ.லிங்கதாசன்

anthimaalai@gmail.com சொன்னது…

அன்புமிகு வாசகர்கள் காந்தன் மற்றும் அமலதாஸ் இருவருக்கும் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் அனைவருக்குமே பொதுவானது. இதில் தனிமனிதத் தாக்குதல்கள் தவிர்க்கப் பட வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட தனி மனிதத் தாக்குதல் பொதிந்த கருத்துரைகளை மீண்டும் ஒரு தடவை வாசித்துப் பாருங்கள். அவ்விரு கருத்துக்களும் எந்த வகையில் கருத்துச் சுதந்திரத்திற்கு முரணானவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

அன்புடன்
ஆசிரியர்
அந்திமாலை
www.anthimaalai.dk

Selvam சொன்னது…

Hallo Old student Allaipitty:,,it dant mean authors are only wrieting booka. so we can wriet comment from tham books too. it not a proplem littel boy or big.

கருத்துரையிடுக