திங்கள், ஆகஸ்ட் 06, 2012

காற்றில் ஓர் சருகு

ஆக்கம்:செ.சஞ்சயன்,  நோர்வே
”காற்றில் சருகு” இந்த வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் ஒருவர். ஒரு முறை நாம் பேசிக் கொண்டிருந்த போது ஏகாந்த மனநிலையில் இருப்பதை எப்படி எழுதுவது என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ”காற்றில் சருகாய் நான்” அன்றில் இருந்து நான் இவ் வார்த்தைகளை மிகவும் ரசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

ஆனால் அப்படியானதோர் மனநிலை எனக்கு இன்னும்  அண்மைக் காலங்களில் கிடைக்கவில்லை. ஆனால் எனது கடந்த காலங்களை நினைத்தப் பார்த்தால் நானும் காற்றில் சருகாய் இருந்திருக்கிறேன் பல தடவைகள்.  இனிமையானதோர்  உணர்வு அது. உடலின் பாரத்தை இழந்து, சுற்றாடலின் இருப்பை மறந்து, கடமை மறந்து, கட்டுப்பாடு இழந்து பஞ்சு போன்ற மனத்துடன் ஒரு வித உற்சாகத்துடன் பறப்பது போன்றதோர் உணர்வு அது.

எனது நண்பர் கூறிய அவ் வார்த்தைகள் அப்படியே மேற்கூறிய உணர்ச்சி வடிவங்களுக்குப் பொருந்துகிறது. பெரும்பாலும் இது ஒரு வித மகிழ்ச்சியின் நிலையே. 

இன்றுஒரு கடையினுள் சென்றிருந்த  போது சில காலங்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரைக் கண்டேன்.

அவரின் முகத்தில் செழுமை கூடியிருந்தது, சற்று சதை பிடித்திருந்தார். பார்த்ததும் புரிந்தது தம்பிக்கு கலியாணம் ஆகியிருக்கிறது, அதுவும் அண்மையில் என்று. அவரை சற்று தள்ளியிருந்து அவதானித்தேன். கடையில் எம்மைத் தவிர வேறு எவருமில்லை என்றே கூறலாம். அவர் ஏகாந்த உலகத்தில் நடந்து திரிவதை உணர்ந்தேன். அவரது உலகம் வேறேதோவாய் இருந்தது. என்னையும் அவர் கவனித்ததாய்  இல்லை. அவருக்கு எத்தனை இனிமையான அனுவங்களை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கும் என்பது புரிந்ததால் அமைதியாய் சற்று நேரம் நின்றிருந்தேன். அப்பொழுதும் அவர் காற்றில் சருகாய் நின்றிருந்ததனால் அருகில் சென்று ”  எப்படி இருக்கிறீர்கள் என்றேன்” அண்ணை நீங்களோ? என்றார்.

என்ன கலியாணம் முடிஞ்சுது போல என்றேன். ஏகத்துக்கும் வெட்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன் தான் கலியாணம் நடந்தது என்றார். உங்களைப் பார்த்தாலே தெரிகிறது... பூக்கள் வாட முதல் அழகாக இருப்பதில்லையா .. அது மாதிரி என்று சொல்ல நினைத்தேன் எனறாலும் அடக்கிக்கொண்டு சற்று உரையாடி விடை பெற்றேன்.  அவர் காற்றில் சருகாய் தெருவில் நடந்து போனார்.

நானும் காற்றில் சருகாய் பறந்து திரிந்த காலம் ஒன்று இருந்தது. 30 வருடங்களுக்கு முன் காதலை அறிவித்து, அதற்கு சம்மதம் கிடைத்த நாட்கள் அவை. எவரை சைக்கிளில் ஏற்றினாலும் எல்லோரும் பஞ்சு போல் இருந்தார்கள். அவர்கள் எதோதோ பேசினார்கள். நான் எதோதோ நினைத்தபடி அநிச்சையாய் பதிலளித்தேன். சைக்கில் தன்பாட்டில் ஓடிக்கொண்டேயிருந்தது. பசி, தூக்கம், அம்மா, தம்பி, தங்கை மட்டுமல்லாமல் 'எம்மி' என்று எங்கள் வீட்டில் இருந்த நாய் எல்லோரும் எனது சுற்றாடலில் இருந்து மறைந்து போயினர். நான் உடற் பாரம் இழந்தேன், கண்களில் ஏதோ மயக்க நிலை தெரிந்தது, அவள் மட்டுமே இந்த உலகத்தில் இருந்தாள். நித்தமும் என்னை நோக்கி சிரித்தபடியே உலாவினாள். சில நாட்கள் பூமியைத் தொடாத ”காற்றில் சருகாய்” இருந்திருந்தேன்.

எனது நண்பர்களும் காற்றில் சருகாய் இருந்த‌தை காலங்களில் அவர்களிடம் எதையும் சாதித்துக் கொள்ளும் ரகசியத்தையும் அறிந்திருந்தேன். கணிதம் கற்பிக்கவென சென்ற நண்பன் தன் மாணவியுடன் காதலாகி கசிந்து உருகி நின்ற போது அவனே தினமும் படத்துக்கு டிக்கட்டும்,  உண்பதற்கு மரவள்ளி சீவலும், கீரை வடையும் வாங்கித் தந்தான். வெய்யில் மண்டையை பிழக்கும் போது அவளை,  அவளை அவனுக்கு நினைவூட்டுவேன்.. அடுத்த 10 நிமிடத்தில் சா்பத் வாங்கித் தந்தபடியே அவளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பான். நானும் கேட்பது போல் நடித்தடிபடியே சர்பத்தை ருசித்துக் கொண்டிருப்பேன். அவனை மறக்காமல் கணிதம் கற்பிக்க அழைத்துப் போய் அழைத்து வருவதை மட்டும் நான் மறக்கவில்லை. (தொழில் நேர்மையாகவும் இருக்கலாம் அது).

இப்போதெல்லாம் காற்றில் சருகாய் நான் என்பது சாத்தியப்படாமலே இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. காதலித்தால்தானா காற்றில் சருகாகலாம்?  இருக்கலாம். இனியும காதல் வருமா? வரலாம் வராமலும் போகலாம்.

அது இப்படியிருக்க அன்றொரு நாள் உற்ற நண்பர் என்னை வீட்டுக்கழைத்தார். பலதையும் பேசியபடியே இருந்ததால் நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மாலையாகி இருட்டவும் தொடங்க மழையும் பெய்தது. நண்பர் மிகவும் குசியாகிப் போனார். டேய் ரெண்டு 'கொன்யாக்' எடுப்போம் மழை நேரத்துக்கு "தூக்கும்" என்றார். நண்பனை மறுத்துப் பேசுவதா? எனவே நானும் மறுக்கவில்லை.  'கொன்யாக்' வந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என்று உள்ளே போக நண்பர்களாய் இருந்த நாம் உற்ற நண்பர்களானோம்.  சற்று நேரத்தின் பின் விடைபெற்றுக்கொண்டோம். நான் வீடு நோக்கி நடக்கலானேன்.

மழை நின்று போயிருந்தது. நள்ளிரவுச் சூரியன் சற்றே தூரத்தில் நின்றிருந்தான். எனது மனம் ஏகாந்தத்தில் இருந்தது. உடலின் பாரத்தை இழந்து, சுற்றாடலின் இருப்பை மறந்து, கடமை மறந்து, கட்டுப்பாடு இழந்து பஞ்சு போன்ற மனத்துடன் ஒரு வித உற்சாகத்துடன் பறப்பது போன்றதோர் உணர்வினை உணர்ந்தேன். ஓ .. நானும் காற்றில் பஞ்சாகியிருக்கிறேனோ?


இன்றைய நாளும் நல்லதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக