ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

வயதான உயிரணுக்களை நீக்கினால் எல்லோரும் 100 வயது வரை வாழலாம்!

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினாலே" இது, போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை தீயிலிட்டு அழித்து, புதிய பொருட்களை வாங்குவதற்காகச் சொல்லும் பழமொழி.
இந்தப் பழமொழி, நுகர்பொருட்களுக்கு மட்டுமல்லாது மனித உடலின் உயிரணுக்களுக்கும் பொருந்தும் என்கிறது அமெரிக்காவின் மேயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் சமீபத்திய ஆய்வு ஒன்று. இது உண்மைதான் என்கிறார், ஆராய்ச்சியாளர் டேரன் பேக்கர். 

வேகமாக வயதாகும் தன்மையுள்ள ஓர் எலியின் ஆயுட்காலத்தில் பல முறை உடலின் முதிர்ந்த, சேதமடைந்த உயிரணுக்களை நீக்கினால் அந்த எலிகளுக்கு கண்புரை நோய், விரைவாக முதிர்ந்துவிடும் தோல் மற்றும் தசை இழப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர். 

வயதான உயிரணுக்களை நீக்கினால் உடல் ஆரோக்கியத்தில் எவ்வித மாற்றமிருக்கும் என்பதை விரைவாகத் தெரிந்துகொள்ள இச்சோதனை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு விரைவாக வயதாகும்படி மருந்துகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனித உடலின் இயல்பான வளர்ச்சியின்போது உடலின் உயிரணுக்களுக்கு வயதாக வயதாக அவற்றில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்றுநோய்கூட ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதால் அந்த உயிரணுக்களை நம் உடலானது செயலிழக்கச் செய்துவிடும். 

இவ்வாறு செயலிழந்துபோகும் வயதான செல்களுக்கு இரண்டு விதமான முடிவுகள் உண்டு. ஒன்று இறந்து போவது. மற்றொன்று செயலிழந்த நிலையிலேயே பிற ஆரோக்கியமான உயிரணுக்களுடன் ஒட்டிக்கொண்டு காலம் கழிப்பது!

Les rats sont des bons animaux modèles d'une grande variété de maladies et de conditions, dont l'amnésie. © DR
சரி இறந்துபோகாத இந்த வயதான உயிரணுக்கள் சும்மா இருந்து விட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அவை சும்மா இருப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே. இறக்காமல் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரணுக்கள் தங்கள் பங்குக்கு தேவையில்லாத, உடலின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய 'தவறான புரதங்களை' உற்பத்தி செய்கின்றனவாம். 

இந்த உயிரணுக்களிலிருந்து அனுப்பப்படும் ரசாயன சமிக்ஞைகள் சுற்றியிருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை மோசமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்பு மூப்படைதலுடன் தொடர்புடைய பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒவ்வொரு திசுவும் முதிர்ச்சியடையும்போது, வயதான உயிரணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. திசுக்களிலுள்ள இவற்றின் எண்ணிக்கை சுமார் 15 விழுக்காடு இருக்கும் என்கிறார்கள். ஆனால் இது வெறும் 15 சதவீதம்தானே என்றும் அலட்சியப்படுத்த முடியாது. ஏனென்றால் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கக்கூடுமாம். உதாரணமாக வயதான இந்த உயிரணுக்கள் ஒரு திசுவின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையே தடைசெய்யும் திறனுள்ள தவறான மரபணுக்களை தூண்டிவிட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆய்வில், விரைவாக வயதாகிவிடும் வகையில் எலிகள் வளர்க்கப்பட்டன. அவற்றுக்கு 10 மாதமாகும்போது கண்புரை நோய், சக்தியிழந்த தசைகள் மற்றும் கொழுப்பு படிவதில் குறைவு போன்ற நோய்கள் இருந்தது மட்டுமில்லாமல் அவை இருதய நோயால் இறந்துவிட்டன. 

ஆனால் சில எலிகளுக்கு மட்டும் மூன்றாவது வாரத்தில் வயதான உயிரணுக்கள் உயிரணு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகும் வண்ணம் ஒரு மருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும்இதே மருந்து சிகிச்சை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்படாத எலிகளுடன் ஒப்பிடுகையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு உறுதியான தசைகள், குறைந்த எண்ணிக்கையில் கண்புரை நோய் மற்றும் சுருக்கம் குறைந்த தோல் (தோலில் கொழுப்பு படிதல் சரியாக இருப்பதால்) போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

சோதனைக்குட்படுத்தப்பட்ட எலிகளில் மற்றொரு பிரிவுக்கு 5 மாதங்கள் வரை மருந்துச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்த எலிகளுக்கு 5-வது மாதத்தில் கண்புரை உள்ளிட்ட மூப்படைதலுடன் தொடர்புடைய நோய்கள், தசை இழப்பு மற்றும் கொழுப்புச் சத்தில் குறைவு ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் மருந்துச் சிகிச்சையை தொடர்ந்தபோதும் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்க முடியவில்லை. ஆனால், குறைபாடுகள் மேலும் தொடராத வண்ணம் தடுக்க முடிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வயதான உயிரணுக்களைத் தற்கொலைக்குத் தூண்டும் மருந்துச் சிகிச்சையால் மூப்படைதலுடன் தொடர்புடைய மாற்றங்கள் நிறுத்தப்படவுமில்லை, ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. ஆனால் ஆரோக்கியமான ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நோய் நொடியில்லாமல் 50 வருடம் வாழ்வதற்கும், நோய் நொடியுடன் 100 ஆண்டு காலம் வாழ்வதற்குமான வித்தியாசம்தான் ஆரோக்கியமான ஆயுட்காலத்துக்கும், ஆரோக்கியமற்ற ஆயுட்காலத்துக்குமான வித்தியாசம். 

வயதான உயிரணுக்களை நீக்குவதால், மனித உடலில் இறப்பை உண்டாக்கும் வயதான உயிரணுக்களின் பாதிப்புக்கு அப்பாற்பட்ட பிற ரசாயன மாற்றங்கள் மற்றும் உடலியல் நிகழ்வுகளை தடுக்க முடியாது என்பதாலேயே இச்சிகிச்சையால் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை மட்டுமே நீட்டிக்க முடியும் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

இதே வகையான ஆய்வை சாதாரண எலிகளைக்கொண்டும் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அதன் முடிவை அறிய சில ஆண்டு காலம் பிடிக்கும். காரணம் சாதாரண எலிகளின் ஆயுட்காலம் சுமார் 3 வருடங்கள். மேலும் இச்சோதனை எலிகளின் மீது நடத்தப்பட்டது என்பதால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மருந்துச் சிகிச்சையை மனிதர்களுக்கு மேற்கொள்ள வெகு காலம் பிடிக்கும். இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள ஒரு பிரத்தி யேகமான மரபணுவை மனித சிசுக்களின் உடலினுள் வெற்றிகரமாகச் செலுத்தியாக வேண்டும் என்பதும் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

ஆனாலும் கவலையில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் பேக்கர். ஏனென்றால் இச்சிகிச்சையை மனிதர்களுக்கு மேற்கொள்ள வெகுகாலம் பிடிக்கும் என்பதால் இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவுகள் மற்றும் புரிதல்களைக்கொண்டு வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, வயதான உயிரணுக்களை தாக்கி அழிக்கும் வண்ணம் மனித உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம்.

1 கருத்து:

anwar basha சொன்னது…

நம் உடலில் உள்ள வாழும் உறுப்புகளின் ஆயுள் 120 ஆண்டுகள். நம்முடைய முறையற்ற உணவு மற்றும் ஒய்வு முறைகள் யாவும் மாறியதால் ஆயுளும் மாறிவிட்டது. மாறிவிட்டது என்று சொல்வதை விட மாற்றிவிட்டோம் என்று சொல்வதே சரி.

கருத்துரையிடுக