ஞாயிறு, ஜூன் 17, 2012

நடுத் தெருவில் நிர்வாணமாக...


“என்னிடம் பென்ஸ் கார் இருக்கிறது; என் வீட்டில் குக்கூ கடிகாரம் இருக்கிறது; என் வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு, பாமரேனியன்னு ரெண்டு மூணு நாய்கள் இருக்கு” என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்வது போல சிலர், “எனக்கு பி.பி., இருக்கு; கொலஸ்ட்ரால் இருக்கு; ஷுகர் இருக்கு” என்றெல்லாம் நோய்களைக் கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். “போன வாரம்தான் பைபாஸ் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்” என்பார்கள் சிலர். ஏதோ விலை உயர்ந்த பட்டுப்புடவை வாங்கியது போன்ற பெருமிதம் அவர்கள் குரலில் தொனிக்கும்.

எனக்கு அப்படியெல்லாம் ‘பெருமை’யாகச் சொல்லிக் கொள்ள எந்த நோயும் இல்லை. சின்ன வயதிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தீராத வயிற்று வலி இருந்தது. பிறரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான வியாதி இல்லை அது.

நான் பள்ளி மாணவனாக இருந்த சமயம்... வாரத்துக்கு இரண்டு நாளாவது வயிற்று வலியால் துடிக்காமல் இருந்ததில்லை. பாடத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், கணக்கைச் சரியாகப் போடவில்லை என்றால், என் வகுப்பு ஆசிரியர் பிரம்பால் என்னை வெளு வெளு என்று வெளுத்துவிடுவார். முழங்காலுக்குக் கீழே ரத்தக் கோடுகள் தென்படும். வாத்தியார் அடித்துவிட்டார் என்று என் அப்பாவிடம் போய்ப் புகார் செய்ய முடியாது. காரணம், வகுப்பு ஆசிரியரே என் அப்பாதான்!

அப்பா அடிக்கப் போகிறார் என்று தெரிந்தால், ஒரு பயம் வந்து அடி வயிற்றைச் சுருட்டி இழுக்கும். உடனே வயிற்று வலி வரும். கட்டுப்பாட்டை மீறி நம்பர் டூ வெளியேறும். பேதியாகும். இதையெல்லாம் கட்டுப்படுத்திக் கொள்ள நான் படாத பாடு படவேண்டியிருக்கும்.

பொதுவாகவே எனக்குச் செரிமானத் திறன் குறைவு. எது சாப்பிட்டாலும் செரிக்காது. ஏப்பம் வரும். வாழைக்காய் பஜ்ஜி தின்றால், அன்று இரவு காஸ் டிரபிள் ஏற்பட்டு, படுக்கையில் படுக்கவே முடியாமல், தூக்கம் கெட்டு, விடிய விடிய திக்கித் திணறுவேன். சீரகத் தண்ணி, இஞ்சி மொரப்பா, பிஸ்லேரி சோடா என்று சகல ஆயுதங்களையும் பிரயோகித்தும், ஒன்றும் நடக்காது. ஈனோ குடித்தாலும், நோ நோ என்று போக மறுத்துவிடும் என் வயிற்று வலி.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் என் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டு, வயிற்று வலி வராமல் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். வெறும் ரசம் சாதம், தயிர் சாதம், இட்டிலி, ஆசையாக இருந்தால் அதிகம் எண்ணெய் விடாமல் ஒன்றிரண்டு தோசை, ரஸ்க்... அவ்வளவே என் உணவு. மற்றபடி வீட்டிலோ, கடையிலோ பஜ்ஜி, போண்டா, சமோசா, பூரி என எதையாவது உள்ளே தள்ளினால், அன்றைக்கு ராத்திரி என் வயிறு தன் வேலையைக் காட்டிவிடும். இதைப் பரீட்சார்த்தமாகவே சோதித்துப் பார்த்துவிட்டேன். அவ்வளவு ஏன்... எண்ணெயில் பொரித்த அப்பளம்கூட எனக்கு ஆகாது!

சின்ன வயதில் நான் வசித்ததெல்லாம் கிராமப்புறங்களில்தான்! நடு இரவில் வயிற்றைச் சுருட்டி வலிக்கும். அட்டேச்டு பாத்ரூம், டாய்லெட், ஃப்ளஷ் அவுட்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கென்றும் தனி கக்கூஸ் கூடக் கிடையாது. வீட்டுக்கு வெளியே வந்து தெருக்கோடிக்குப் போய், வீடுகள் இல்லாத பகுதியில் ஒரு ஓரமாக, குப்பை மேட்டில் போய் மல ஜலம் கழித்துவிட்டு வரவேண்டியதுதான். புழு, பூச்சி, மரவட்டை... சமயங்களில் நட்டுவாக்கிலி கூடக் காலில் ஊரும்.

ஏதோ ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் பரவாயில்லை... வயிற்று வலி வந்தால், அன்றைய இரவு எனக்குச் சிவராத்திரிதான். விடிய விடிய சுமார் இருபது முப்பது தடவைக்கு மேல் எழுந்து எழுந்து ஓடிக்கொண்டு இருப்பேன். சில சமயம் வயிற்றைச் சுருட்டி வலிக்கும். போய் உட்கார்ந்தால், வருகிற மாதிரி இருக்குமே தவிர, வரவே வராது. இந்த அவஸ்தையில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக்கூட அந்த இருட்டில் உட்கார்ந்திருந்ததுண்டு.

1967-ம் ஆண்டு - நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம்... பள்ளியில் ஆசிரியர் மும்முரமாகச் சரித்திரப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். என் வயிற்றில் ஒரு பிரளயம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாவதை உணர்ந்தேன். சடுதியில், வயிற்றில் ஒரு கலவரம் வெடித்தது. வயிற்றுக்குள் ஏற்பட்ட அந்த யுத்தத்தில், ஆசிரியர் நடத்திய பானிப்பட் யுத்தம் என் மண்டைக்குள் ஏறவே இல்லை. ஒரு கட்டத்தில் தாங்கவே முடியாமல் எழுந்து, வலது கையால் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டியபடி, இடது கையை வயிற்றோடு மடித்துக் கட்டிக்கொண்டு பவ்வியமாக நின்று, வெளியே செல்ல அனுமதி கோரினேன். குரல் கொடுக்கக் கூடாது. ஆசிரியராக எப்போது திரும்பி நம்மைப் பார்க்கிறாரோ, அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். அன்றைக்குப் பள்ளிகளில் இதுதான் எழுதப்படாத ஒழுங்குமுறை.

கரும்பலகையில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்த சரித்திர ஆசிரியர் திரும்பியதும், என்னைப் பார்த்துக் கடுப்பானார். “என்ன, வயித்து வலியா? வெளியே போகணுமா? ஹூம்... உங்களுக்கெல்லாம் இது ஒரு சாக்குடா! சரி, பானிப்பட் யுத்தம் எந்த ஆண்டு நடந்தது?” என்றார். என்னவோ ஒரு வருடத்தைக் குத்துமதிப்பாகச் சொன்னேன். தன் கையில், சீடை போன்று சின்ன உருண்டையாக மாறியிருந்த சாக்பீஸ் துண்டால் என்னைக் குறிபார்த்து அடித்தார். “ஒழி! போய்த் தொலை! ஹூம்... இதெல்லாம் எங்கே உருப்படப் போகுது!” என்று எனக்கு அனுமதி வழங்கியவர், மீண்டும் கரும்பலகைக்குத் திரும்பி எழுதத் தொடங்கிவிட்டார்.

நான் வகுப்பறையை விட்டு வெளியேறி மேலும் 

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனுபவப் பதிவு அருமை
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக