புதன், ஜூன் 13, 2012

குண்டுக்கு பின்னணி விளம்பரம்! : எச்சில் ஊற வைக்கும் விளம்பரங்கள் !


நீண்டகாலமாக இருந்துவந்த சந்தேகம்தான் அது. அதைத் தற்போது ஆய்வாளர்கள் உண்மையென்று நிரூபித்திருக்கிறார்கள்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? உடல் பருமன் பிரச்சினை பரவுவதற்கு, எச்சில் ஊற வைக்கும் விளம்பரங்கள் ஒரு முக்கியக் காரணம் என்பதே ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கும் விஷயம்.

மாக்ஸ் பிளாங்க் உளவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அப்போது ருசிக்கத் தூண்டும் உணவு விளம்பரங்கள், நம் உடலில் கிரெலின் ஹார்மோன் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்த ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் அளவு மாற்றத்தால், பசி தூண்டப்படுகிறது.

இந்த ஹார்மோனின் தாக்கம் ரொம்பவே தீவிரமானது. நீங்கள் காலை உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திலேயே ஒரு கேக் விளம்பரத்தைப் பார்த்தவுடன் அதை ருசிக்கச் சொல்வது இதுதான். எனவே, உடல் எடை குறைய வேண்டும் என்று கவலைப்படுபவர்கள்உமிழ்நீரை ஊறச் செய்யும் விளம்பரங்களை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது என்று ஆலோசனை கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

உணவு குறித்த படங்களை ஆரோக்கியமான மனிதர்கள் பார்க்கிறபோது என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட நபர்களுக்கு, சுவையான உணவுகளின் படங்கள் காட்டப்பட்ட அதே வேளையில் அவர்களின் ஹார்மோன் அளவு அளவிடப்பட்டது. உணவுப் படங்களைப் பார்த்த நபர்களின் கிரெலின் ஹார்மோன் அளவு கூடியது என்பதே இறுதிக் கண்டுபிடிப்பு.

உணவு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக கிரெலின் ஹார்மோன் ரத்தத்தில் கலக்கச் செய்யப்படுகிறது. அந்த ஹார்மோனை வெளிக் காரணிகளும் கட்டுப்படுத்துகின்றன என்று நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். உணவின் படங்கள் போன்ற காட்சித் தூண்டல்கள் மூளை மூலமாக நமது பசியைத் தூண்டுகின்றன என்று மேற்கண்ட ஆய்வுக்குத் தலைமை வகித்த பெட்ரா சுஸ்லர் கூறுகிறார்.
நன்றி: இதயபூமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக