ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.1


ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.1
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
ஏனைய தீவகக் கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'அல்லைப் பிட்டியில்' ஒழுங்கைகள்(சந்துகள்) குறைவு. இருப்பினும் தன்னந் தனியே மூன்றாம் வட்டாரத்தில் இருக்கும் பாலர் பள்ளியை சென்றடைவது 'வாஸ்கோட காமாவின் ஆபிரிக்கப் பயணம்' போல எனக்குத் திகிலை ஊட்டியது. இருப்பினும் ஓரளவு துணிவை வரவழைத்துக் கொண்டு ஓடத் தொடங்கினேன்.
தினமும் டீச்சரோடு பாலர் பாடசாலைக்குச் சென்று வரும்போது, மதிய நேரத்தில் பெரும்பாலும் தகிக்கும் வெயிலாக இருக்கும். அவ்வாறான தருணங்களில் எல்லாம் டீச்சர் தன்னிடமிருந்த சிறிய குடையை எடுத்து விரித்து, அதன் நிழலில் என்னையும் சேர்ந்து நடந்து வரும்படி கூறுவார். அத்தகைய 'தாய்மையுள்ளம்' கொண்ட டீச்சர்களை நான் வளர்ந்தபின் மிகவும் அரிதாகவே கண்டேன். அதேபோல் காலையில் டீச்சரோடு பள்ளிக்குச் செல்லும்போதும், டீச்சரின் மிதமான வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்து செல்வது என் மனதிற்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. 
காலையும், மாலையும் டீச்சரோடு நடந்து செல்கையில் என்னவெல்லாம் செய்தேன் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். சில வேளைகளில் டீச்சருக்கு முன்பாக ஓடி, நடந்து சென்று, நான் நின்றுகொண்டிருக்கும் இடத்தை டீச்சர் நெருங்கியதும் மறுபடி ஓடத் தொடங்கி விடுவேன். அப்போதெல்லாம் "பாத்து ஓடப்பு" என்று ஒரு அன்புக் கட்டளை டீச்சரிடமிருந்து பிறக்கும். டீச்சர் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்பது எனக்குப் புரிவதில்லை. சில வேளைகளில் நான் ஓடிக்கொண்டிருக்கையில் டீச்சர் என்னிடம் "கவனம், கவனம்" என்று சத்தம் போட்டுக் கூறுவார். நாங்கள் செல்லும் வீதியில் வரும் வாகனங்களில் நான் மோதுப்பட்டு விடக் கூடாது என்பது தான் டீச்சரின் கவனமாக இருந்தது. ஒரு கிராமத்தில் உள்ள வீதியில் ஒரு சில சைக்கிள்களையும், ஒரு சில மணல் ஏற்றும் டிராக்டர்களையும், ஓலை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிகளையும் தவிர வேறென்ன வாகனம் இருந்துவிடப் போகிறது? ஆனாலும் டீச்சரின் கவனத்திற்கும் "கவனம்" என்று என்னை எச்சரிக்கும் பாங்கிற்கும் குறைவே இருந்ததில்லை.
இதேபோல் பாலர் பாடசாலை நோக்கிய எனது தினசரிப் பயணத்தின்போது, டீச்சர் என்ற அந்தத் தேவதையின் அழகை ரசிப்பதற்கும், அதே தேவதையை கேள்விகளால் துளைத்து எடுப்பதற்கும் நான் தவறுவதேயில்லை. அழகை ரசித்தேன் என்று கூறியதால் 'தவறாக' எண்ணி விடாதீர்கள். நான் நினைத்ததெல்லாம் இதுதான்: "எங்கள் அம்மாவோ,சித்திகளோ, எங்கள் அயலில் வாழும் பெண்களோ ஏன் டீச்சர் போல நல்ல நிறமாக இல்லை? ஊரில் பெரும்பாலானவர்கள் பொது நிறமாக இருக்க, டீச்சரும், ஊரில் உள்ள ஒரு சில பெண்களும் ஏன் 'வெள்ளை' நிறம்? இப்படிப் பல சிந்தனை ஓட்டங்கள் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
டீச்சருடன் நான் பள்ளிக்குச் சென்ற ஒரு வருடத்தில் நான் டீச்சரிடம் கேட்ட நூற்றுக் கணக்கான கேள்விகளில் சில பின்வருமாறு.
  1. டீச்சர் காலம என்ன சாப்பிட்டிட்டு வந்தனீங்கள்?
  2. டீச்சர் நீங்கள் எந்தப் பள்ளிக்குடத்தில படிச்சனீங்கள்?
  3. டீச்சர் நீங்கள் கட்டியிருக்கிற சீல(புடவை) எங்க வாங்கினது?
  4. டீச்சர் நீங்க பிறந்து வளந்ததுக்கு எத்தின தரம் யாழ்ப்பாணம் போனனீங்கள்? 
  5. டீச்சர் உங்கட வீட்ட ரேடியோ இருக்கா?
*மேலேயுள்ள கேள்விகள் இலங்கைத் தமிழின் பேச்சு வழக்குத் தமிழில் உள்ளன என்பதைத் தமிழக வாசகப் பெருமக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு நான் தொணதொணத்துக் கொண்டு செல்வதை ஒரு 'தொல்லையாகக்' கருதாமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளிக்கும் கமலினி டீச்சரின் பொறுமை அந்தக் காலத்தில் எனக்கு வெறுப்பையும், சலிப்பையும் தந்தது என்னவோ உண்மைதான், இப்போது 34 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில் அவரின் பொறுமையை நினைந்து, அவர் இருக்கும் திசை நோக்கிக் கைகூப்பித் தொழவேண்டும் போல் தோன்றுகிறது. "டீச்சர் உங்கள் சேவைக் காலத்திலேயே உங்களிடம் அதிக கேள்விகள் கேட்டுத் தொல்லைப்படுத்திய மாணவன் நானாகத்தான் இருப்பேன். என்னை மன்னியுங்கள். நான் எழுதும் இந்தத் தொடரின் மூலம் வீண் வாதப் பிரதிவாதங்கள்(Controversy) ஏற்படாமல் தடுக்கும் முகமாகவே இத்தொடரில் உங்கள் பெயரை மாற்றியுள்ளேன். இருப்பினும் உங்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நடந்து செல்லும் வழியில் நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் "பள்ளிக்குடம் போனதும் பதில் சொல்லுறன், இப்ப ஓடி நடவப்பு" என்று சிரித்துக் கொண்டே கூறிய நீங்கள் கடைசிவரைக்கும் பதில் சொல்லவே இல்லையே! உதாரணமாக நீங்கள் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று பதிலளிக்கக் கூடிய கேள்விகளாகிய "டீச்சர் உங்களுக்கு *புழுக்கொடியல் விருப்பமா?, டீச்சர் உங்களுக்கு *பினாட்டு(பனாட்டு) விருப்பமா? என்ற கேள்விகளுக்குக் கூட இன்றுவரை எனக்குக் கிடைத்த பதில் உங்கள் 'புன்னகை' மட்டும்தானே. 
*புழுக்கொடியல் என்பது பனங்கிழங்கினை அவித்து வெயிலில் காயவைத்துப் பெறப்படும் ஒரு உணவு.
*பினாட்டு என்பது பனம்பழத்தின் களியை(சாற்றை) வெயிலில் காயவைத்துப் பெறப்படும் ஒரு உணவு.
#########################################
தினமும் டீச்சருடன் 'வாயாடித் தனமாக' பேசிக்கொண்டு சென்று வந்ததால் பள்ளிக்கூடம் செல்லும் பாதையைச் சரியாகக் கவனித்து, ஞாபகத்தில் வைக்கத் தவறி விட்டேன் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் நடந்துகொண்டிருக்கும் பாதை எனக்கு முன்பின் பரிச்சயமில்லாத பாதையாகத் தென்பட்டது. இனம்புரியாத 'பயம்' என்னைக் கவ்விக் கொண்டது. எவ்வளவு தூரம் நடந்தும் பள்ளிக்கூடம் தென்படாததால் அழத் தொடங்கினேன்.
(தொடரும்)

3 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

ஆகா! பிறகு என்ன செய்தீர்கள் ? எங்கு போய்த் தொலைந்தீர்களா?...அறிய ஆவல்!...தொடரட்டும்....

vinothiny pathmanathan dk சொன்னது…

நன்றாக இருந்தது தொடர் .அது சரி நிறைய கேள்விகள் கேட்கும் மாணவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கின்றேன் .நீங்கள் எப்படி ?

Lingathasan சொன்னது…

சகோதரி கோவைக்கவி அவர்களின் கருத்துக்கும், சகோதரி வினோதினியின் கருத்துக்கும் நன்றிகள்.
சகோதரி 'கோவைக்கவி' அவர்களின் கேள்விக்கான பதில்:- அதற்குப் பிறகு என்ன நடந்தது? என அறிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டும் பொறுத்திருங்கள். ஏனெனில் ஒரு வாரம் என் பள்ளி அனுபவத்தைப் பற்றி எழுதினால் அடுத்த வாரம் 'அல்லைப்பிட்டியைப்' பற்றி எழுதுவது எனும் ஒழுங்கின்படி இத்தொடரை நகர்த்திச் செல்கிறேன்.
சகோதரி வினோதினி அவர்களின் கேள்விக்கான பதில்:- நான் அல்லைப்பிட்டியில் படித்த எட்டு வருடமும் வகுப்பில் முதலாம் அல்லது இரண்டாம் பிள்ளையாக வந்தேன். அதன் பின்னர் கல்விகற்ற யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில்(St.Patrick's College) வகுப்பில் எத்தனையாமிடம் என்று தேர்ச்சி அறிக்கையில் எழுதும் வழக்கம் கிடையாது. அது ஆங்கில மொழியில் இயங்கிய தனியார் பாடசாலை என்பதால் பிரித்தானிய முறைப்படி மாணவன் பெறும் புள்ளிகளுக்கு(மதிப்பெண்கள்)ஏற்ப 1.Excellent,2.Honours, 3.Good, 4.Fair, 5.Satisfactory, 6.Un-satisfactory ஆகிய தராதரங்களை(Grade) வழங்குவார்கள். மேற்கூறியவற்றில் பலவற்றை மாறி மாறி அடியேன் பெற்றதாக ஞாபகம்.பல்கலைக் கழகத்திலும் நான் பெற்ற புள்ளிகள்(மதிப்பெண்கள்)பாராட்டும் விதத்தில் அமைந்திருந்தன.
மேற்கூறியது உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்கும் என நம்புகிறேன். இத்தொடருக்கு நீங்கள் இருவரும் கொடுத்துவரும் ஊக்குவிப்பிற்கு உளமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்

கருத்துரையிடுக