சனி, பிப்ரவரி 11, 2012

சிந்தனைச் சிதறல்கள்

அந்திமாலையின் வாசகப் பெருமக்களுக்கு அன்பார்ந்த வணக்கம். இன்றைய தினம் இவ் இணையத்தின் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் எழுதிய நூற்றுக் கணக்கான பழமொழிகள், பொன்மொழிகள் போன்றவை என்னைத் தவிர வேறு யாராலும் படிக்கப் படாமல், என் புத்தக அலமாரியில் நோட்டுப் புத்தகங்களின் வடிவில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை கடலில் விழுந்த கற்பூரம்போல் ஆகிவிடாமல், என்னை விடவும் இன்னும் பலரையும் சென்றடைய வேண்டும் எனும் ஆவலின் காரணமாக அவற்றில் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

மிக்க அன்புடன் 
ப. மோகன்ராஜா 
திருமங்கலம், மதுரை 
தமிழ்நாடு, இந்தியா


உன் பெயர் 'வெற்றி' இடமாக இருப்பதும், வெற்றிடமாக இருப்பதும் உன் கையில்தான். 
***
ஆணின் அற்புத வருமானத்தில் நடத்த முடியாத குடும்பத்தை பெண் தனது 'அற்ப' வருமானத்தில் அழகாக நடத்துவாள். 
***
வாழ்ந்த பிறகும் வாழ்பவன் 'சரித்திரம்' கண்டான். வாழும்போதும் வாழாதவன் தரித்திரம் கண்டான்.
***
பிறர் துன்பத்தில் சிரிப்பவன் கபடன். தன் துன்பத்திலும் சிரிப்பவன் அறிஞன்.
***
கடன் வாங்கிப் பழகியவனுக்குக் கடமை செய்யத் தெரியாது. கடமை செய்து பழகியவனுக்கு கடன் வாங்கத் தெரியாது.
***
கடமை செயபவனுக்குக் கடிகாரமுள்தான் ஆசிரியன்.
***
வாழ்ந்து வீழ்ந்தோம் என சோர்வடையாதே! வீழ்ந்தும் வாழ்வோம் என ஓய்வடையாதே!
***
இறை வணக்கம் மட்டும் உன்னைச் செல்வந்தன் ஆக்கும் என்றால், கோயில் வாசலில் கிடக்கும் ஆண்டியும் அரசனாகியிருப்பானே?
***
பல புள்ளிகளுக்கிடையே வளைந்து செல்லும் கோடுதான் 'கோலம்' எனும் அழகைத் தரும். பல உறவுகளுக்கு இடையே வளைந்து கொடுக்கும் குணம்தான் உயர்வு என்ற புகழைத் தரும்.
***
முயல் ஆமையால் தோற்றது என்று கூறவேண்டாம். 'முயலாமையால்' தான் தோற்றது.
    ***

    5 கருத்துகள்:

    Paransothinathan சொன்னது…

    மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    பெயரில்லா சொன்னது…

    நல்ல கருத்துடைய வரிகள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    vinothiny pathmanathan dk சொன்னது…

    கருத்துள்ள வரிகள். தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம் .பாராட்டுக்கள்

    Maha Denmark சொன்னது…

    Excellant.

    P.Mohanraja, Tirumangalam, Madurai. சொன்னது…

    பாராட்டுத் தெரிவித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள்.

    கருத்துரையிடுக