ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

குறளுக்கு மரியாதை

சகோதரர் துரைடேனியல் அவர்களின் பாராட்டுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி (துரைடேனியல் அவர்களின் கருத்தைக் காணஇங்கே அழுத்தவும் *பார்க்க* ).தங்கள் ஒருவரது பாராட்டு மட்டும் பல ஆயிரம் வாசகர்கள் எங்கள் சேவையைப் பாராட்டி மலர்க்கொத்து அனுப்பியதைப் போன்ற உணர்வைத் தருகிறது. இதுவரை எமது தளத்திற்கு வருகை தந்த வாசகர்கள் குறிப்பிட்ட குறளைப் பற்றிய தமது கருத்தை மட்டும் பதிவு செய்வார்கள். ஆனால் தாங்கள் ஒருபடி மேலே போய் எங்கள் சேவையையும் பாராட்டியிருக்கிறீர்கள். கடந்த 274 நாட்களாக நாங்கள் ஆற்றி வரும் தமிழ்ப் பணிக்கு ஒரு மணிமகுடம் கிடைத்ததாகவே இதைக் கருதுகிறோம். 
எமது இந்தச் சேவைக்குக் 'காரண கர்த்தாக்களாக' விளங்குபவர்கள் நால்வர். அவர்களில்முதலிடம் சிவநெறிப் புரவலர்.சிவதர்ம வள்ளல்.திருக்குறட் காவலர்.சமாதான நீதவான்.திரு.க.கனகராஜா அவர்கள்.யாழ் மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக 'மில்க்வைற்'(Milkwhite) எனும் சோப்பைத் தயாரித்து, மக்களிடம் கொண்டு சென்று வெற்றியீட்டியவர். அவர் தனது தமிழ்ப் பணியின் ஓர் அங்கமாக ஒவ்வொரு சோப் உறையிலும் ஒரு குறளை அச்சிட்டார். இச் சேவை 1960 தொடங்கி 1990 கள் வரை தொடர்ந்தது. கணணி வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு உறையிலும் ஒரு குறளை அச்சிடுவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை மேற்படி பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் 'சாந்தி அச்சகத்தாரிடம்தான்' கேட்க வேண்டும்.திரு.கனகராஜா அவர்கள் எமக்கு திருக்குறளின் மகிமையை உணர்த்தினார்.அந்த சோப் உறையில் அச்சடிக்கப்பட்ட திருக்குறளைப் படித்தே நாங்கள் வளர்ந்தோம்.
இரண்டாவதாக எமக்கு உந்து சக்தியாக இருந்தவர் திருக்குறளின் மகிமையை மக்களுக்கு உணர்த்தியவர், திருக்குறளின் சாரத்தை மக்களுக்கு அறியத்தரும் விதத்தில் 'குறளோவியம்' படைத்தவர், பேருந்துகளில் திருக்குறளை எழுதுமாறு பணித்து சாதாரண மக்களிடமும் திருக்குறளை கொண்டு சென்றவர், விமானத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் விதத்தில் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்தவர், நான்கு முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தவர், டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எமது நன்றியறிதல் உரித்தாகுக.(இவ்வாறு கூறுவதால் தி.மு.க வின் அரசியல் கொள்கைகளை நாம் பாராட்டுகிறோம் என இந்தப் 'பாராட்டு மொழிக்கு' அரசியல் வர்ணம் பூசி விடாதீர்கள்)
மூன்றாவதாக அந்திமாலையின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் உழைத்துவரும் எங்கள் தம்பி திரு.சதீஸ்வரன் சொர்ணலிங்கம்,அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம் அவர்கள் 'தினமும் ஒரு குறள்' திட்டத்தை ஆரம்பத்தில் முன்மொழிந்தார். அவருக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகுக.நான்காவதாக டென்மார்க்கில், ரணாஸ் நகரில் வாழும் அந்திமாலையின் வாசகர் கரன் பாலராஜா நடராஜா அவர்கள் இந்த முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தார். அவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
வாருங்கள் "ஒன்றுபட்டு உயர்வோம்"


அன்புடன்

இ.சொ.லிங்கதாசன்

ஆசிரியர்

அந்திமாலை
www.anthimaalai.dk

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

Thank you. congratz to all.

கருத்துரையிடுக