ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தாரமும் குருவும் பகுதி - 6.2


ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 6.2 
அல்லைப்பிட்டி 1977

"மேற்படி தீவுகள் ஒரு பூமாலையில் பல பூக்கள் தொடுக்கப் பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் 'மாலை தீவுகள்' எனப் பெயர் பெற்றது. இவ்வாறு நாட்டின் பெயர் 'மாலைதீவு' என முழுக்க முழுக்க தமிழ்ப் பெயராக இருந்து பின்னர் அராபியர்களின் ஆட்சிக் காலத்தில் 'திவேஹி' மொழியில் 'திவேஹி ராஜ்யஹே ஜும்ஹூரியா'(தமிழில் மாலைதீவுக் குடியரசு) என மாற்றம் பெற்றது".
எனும் கருத்துடன் கடந்த இரு வாரங்களுக்கு முந்திய எனது இந்தத் தொடரை நிறைவு செய்திருந்தேன். இன்றைய இந்தத் தொடரை எழுதுவதற்கு முன்பாகவே கடந்த வாரத்தில் மாலைதீவு அரசியல் கொதிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவை பற்றி விரிவான செய்திகளை உங்களுக்குத் தருவதற்குப் பல இணையங்களும், பத்திரிகைகளும் இன்னபிற ஊடகங்களும் இருப்பதால் அவற்றை இங்கு விபரிப்பதைத் தவிர்த்து விடுகிறேன்.
இருப்பினும் நான் கூறவந்த விடயங்களை சுருக்கமாக கூறி விடுகிறேன். அதாவது இன்னும் 47 வருடங்களில் மாலைதீவுகள் முற்றாகக் கடலில் மூழ்கி விடும் என்று முன்பு கூறியிருந்தேன் அல்லவா? மாலைதீவுகள் மட்டுமன்றி உலகிலுள்ள முக்கியமான தீவுகளில் 200 இற்கும் மேற்பட்ட தீவுகள் அடுத்த நூற்றாண்டுக்குள் கடலில் மூழ்கி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இவற்றில் பல முக்கியமான சுற்றுலாத் தீவுகளும் அடக்கம். இந்தத் தீவுகளின் அழிவுக்கு நீங்களும் நானும்தான் காரணம் என்று கூறினால் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்தான். ஆனால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் 'புவி வெப்பமடைவதற்கு' யாரெல்லாம் காரணமோ அவர்கள் யாவருமே இந்தத் தீவுகளின் அழிவுக்கும், இத் தீவு மக்களின் அழிவுக்கும் காரணமாகின்றனர். கொஞ்சம் ஜீரணிக்க முடியாத விடயமாயினும் அறிவியல் ரீதியாகச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.
சரி, இத் தீவுகளின் அழிவுக்குக் காரணம் என்ன? கடலின் நீர் மட்டம் அதிகரிப்பு. கடலின் நீர் மட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? ஆர்டிக், அந்தார்டிக் கண்டங்கள், கனடாவின் வடக்குப் பகுதி, கிரீன்லாந்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றில் காணப்படும் 'பனி மலைகள்' உருகுதல். பனி மலைகள் உருகுவதற்குக் காரணம் என்ன? வரலாற்றில் என்றுமில்லாதவாறு பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு. பூமியின் வெப்பநிலை 'கண்மண்' தெரியாமல் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? மனிதர்கள் தங்கள் 'அலட்சியமான' செய்கைகளால் பூமியை அளவுக்கு அதிகமாகச் சூடாக்குகின்றனர் என்பதே. இவ்வாறு ஒரு 'விடுகதை' போல இந்தச் சுழற்சியைப் பற்றிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இருப்பினும் உங்களுக்குப் புரியும் விதத்தில் சுருக்கமாக் கூறியுள்ளேன்.
பூமி சூடாகுவதற்குக் காரணமான செய்கைகளை நூற்றுக் கணக்கில் பட்டியலிடலாம். இருப்பினும் ஒரு சிலவற்றைப் பட்டியலிடுகின்றேன். பட்டியலைப் பார்த்து அதில் உங்கள் பெயரும், எனது பெயரும் இருக்கிறதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  1. அணு உலைகள், அணு மின்சாரத் தயாரிப்பு, ராக்கெட் தொழிற்பாடு, ஏவுகணைகள் பயன்படுத்தல், தொழிற்சாலைகள், ஆயுதத் தயாரிப்பு, உலோகங்களை உருக்கும் தொழிற்சாலைகள்.
  2. விமானப் பயணங்கள், கப்பல் பயணங்கள், புகையிரதப் பயணங்கள், வாகனப் பயணங்கள் செய்வோர் மற்றும் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர். 
  3. வீட்டில் மின்சார அடுப்பு, எரிவாயு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்போர்.வீட்டில் இறைச்சியை, மீனை, காய்கறியை அவித்து உண்போரை விடவும் 'பொரித்து' (வறுத்து) உண்போர் பூமியை அதிகம் சூடாக்குகின்றனர் என்பதை அறிவீர்களா? இவ்விடத்தில் முட்டையை, மீனைப் பொரித்து உண்போர்.மற்றும் கத்தரிக் காயைப் பொரித்துக் 'குழம்பு' வைக்கும் நம்மவர்கள் என் நினைவில் வந்து போகின்றனர்.
  4. கட்டற்ற மின்சாரப் பயன்பாடு, வெப்பமேற்றிகளின்(Heater) பயன்பாடு, இணையப் பயன்பாடு, கணனிப் பயன்பாடு, தொலைக்காட்சி, வானொலிப் பயன்பாடு.
  5. இந்தப் பூமியில் கைத் தொலைபேசி(mobile) உபயோகிக்கும் ஒவ்வொருவரும் இப் பூமி வெப்பமடைதலுக்குக் காரணம் ஆகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 
இவ்வாறு பூமியை வெப்பமடையச் செய்வோரைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். உங்களின் புரிதலுக்காக ஒரு சிலவற்றைப் பட்டியலிட்டேன். மேற்படி செயல்களைச் செய்து பூமியை வெப்பமடையச் செய்வோரின் பட்டியலில் உங்களுடைய பெயரும் என்னுடைய பெயரும் நிச்சயமாகப் பல இடங்களில் இருக்கும் என்பது உறுதி. "இல்லை" என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நீதிக்குப் புறம்பாகப் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்.

என்ன செய்யலாம்?
விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியின் பயனாக நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ நவீன தொழிநுட்பக் கண்டு பிடிப்புகளை உபயோகிப்பதையோ, அவற்றின் மூலம் பயன் பெறுவதையோ, பூமியைச் சூடாக்குவதையோ தவிர்க்கவோ, நிறுத்தவோ முடியாத ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் அவற்றை எல்லாம் குறைப்பதற்கு நம் அனைவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன் வருவதற்குத்தான் யாரும் தயாராக இல்லை. இது இந்த நூற்றாண்டின் 'சாபக் கேடு' அடுத்த தடவை 'புவி வெப்பமடைவதற்குக்' காரணமான ஒவ்வொரு செயலிலும் இறங்கும்போதும், மாலைதீவு மக்களையும், இந்தப் பூமியில் அடுத்த நூற்றாண்டுக்குள் அழிவைச் சந்திக்க இருக்கின்ற 200 இற்கு மேற்பட்ட தீவு வாழ் மக்களையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்கின்ற 'பூமித் தாயைச் சூடாக்குகின்ற' கெடுதலான செயலைக் குறைப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உங்கள் கைளில் உள்ளன.நீங்களும் நானும் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் செய்தால் பூமித் தாயை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். 

நான் சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகி விட்டன. அப்ப நீங்க?
(தொடரும்)

2 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்ல விடயம்.நானும் முயற்சிக்கிறேன் .ஆனால் முடியவில்லை .இருந்தாலும் உங்களின் இந்த ஆக்கத்தினை வாசித்த பின் ஒன்று இரண்டு விடயத்திலாவது செயற்படுத்த எண்ணுகிறேன்.நன்றி

vetha (kovaikkavi) சொன்னது…

முடிந்ததைச் செயற்படுத்துவோம்.

கருத்துரையிடுக