வியாழன், பிப்ரவரி 23, 2012

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்!


ஆக்கம்:செ.சஞ்சயன் , நோர்வே . 
வயதுக்கு வராதவர்களை கட்டாயமாக வெளியேறும் படி மிகுந்த கண்டிப்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்..

சில நாட்களுக்கு முன் நடந்த கதை இது. கணணி திருத்த அழைத்தார் என்னை.
நானும் தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல கடும் குளிரில் அவர் வீடு தேடிப்போய் கணணி திருத்தி வீடு திரும்பினேன். அன்றிரவு மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இப்பவும் கணணிப் பிரச்சனை என்ற போது நான் சூடாகத் தொடங்கியிருந்தேன். அய்யா! இப்போ தானே திருத்தித் தந்தேன் என்றேன். "ஆம் நீ போன பின் அது வேலை செய்யவில்லை" என்றார். யோசித்துப் பார்த்தேன்.. அவருக்கு பிரச்சனையை விளக்கிக் கூறத் தெரியவில்லை. ஆண்டவனும் எனக்கு ஞானக்ககண்ணை இன்னும் தரவில்லை. எனவே அவரின் பிரச்சனை அடுத்த நாள் வரை தீர்க்கப்படாமல் போனது.

மறுநாள் மீண்டும் கடும் குளிரில் நனைந்தபடியே அவரிடம் போய் பிரச்சனையைச் சொல்லுங்களய்யா என்றேன். பிரச்சனையை விளக்கினார். பிரச்சனை விளங்கியதும் நான் சொன்ன மாதிரி நீங்கள் செய்யவில்லையே என்றேன். நீ என்ன சொன்னாய்?, எப்ப சொன்னாய்? என்றார். எனது காதுக்குள் நம்ம வடிவேல் அண்ணண் ”ஆகா” சொல்வது போலிருந்தது.

இப்பொழுது நான் அவரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவருக்கு வயது 80ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கண்பார்வை சற்று மங்கல். வீடு முழுவதும் அழகிய வடிவங்களில் மதுபான போத்தல்கள் இருந்தன. அவற்றை விட அதிகளவில் பழங்காலத்து பொருட்கள் பலவற்றைக் கொண்டு அவரின் வீட்டை அலங்கரித்திருந்தார். அவர் என்னிலும் அகலமாயும், பாரமாயுமும், நிறைமாத கர்ப்பிணியின் வயிறு போன்ற அல்லது அதைவிட சற்று பெரிய வண்டியுடனும்(தொப்பை) இருந்தார்.

மனிதரின் நகைச்சுவைகள் ரசிக்கத்தக்கதாக இருந்தன. ”ஏ” ஜோக்குகளுக்கும் குறைவிருக்கவில்லை. வயதுக்கும் அவரின் மனதுக்கும் சம்பந்தமில்லாதது போல இருந்தது எனக்கு. தனது தற்போதைய காதலிகளைப் பற்றி கண்ணடித்துக் கதைத்தார். என்னைப் பார்த்து உனக்கு காதலி இருக்கிறாளா? என்ற போது பயந்து போய் தலையை தேவைக்கு அதிகமான வேகத்துடன் ஆட்டினேன்.  திருமணமாகிவிட்டதா என்றார். ஆம் என்றேன். தன் வாழ்க்கையில் விடாத பிழை அது ஒன்றுதான் என்று சொல்லியபடியே  சிரித்தார். நான் மௌனித்திருந்தேன்.

அவருக்கு மீண்டும் கணணியை எப்படி இயக்குவது என்று சொல்லிக்கொடுத்த பின் வீடு நோக்கிப் புறப்பட்டேன். அவரின் வீட்டின் அருகில் இருந்த பஸ் தரிப்பிடத்திற்கு நான் வந்த சேர முதலே மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். இப்பவும் "நீ போன பின், நீ போன பின் அது வேலை செய்யவில்லை" என்றார். எனக்கு வாயில் நல்ல நல்ல வார்த்தைகள் வந்த போயின. காதுக்குள் இருந்து ஆவி பறந்தது. வயோதிபர் என்பதால் அடக்கி வாசித்தேன். "சரி வருகிறேன்" என்று மீண்டும் அங்கு போய் "என்ன பிரச்சனை? என்றேன். அதே பிரச்சனையை மீண்டும் கூறியபோது எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.

அவருக்கு விளங்கும் முறையில் மீண்டும் ஒரு தரம் விளக்கிக் கூறிய அதேவேளை, படங்கள் மூலம் விளக்கும் ஒரு ஆவணத்தைத் தயாரித்து அதை print எடுத்துக் கொடுத்தேன். மகிழ்ந்து போனார் மனிதர்.

தொலைக்காட்சியில் பனிச்சறுக்கு உலகக்கிண்ணப் போட்டிகள் நோர்வேயில் நடந்து கொண்டிருப்பதை காட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் நானும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். "வா.. வா வந்திருந்து பார். இப் போட்டி முடிந்த பின் நீ வீடு போகலாம், அது வரை நீ எனது விருந்தினன்" என்றார். நானும் விருந்தினனாக மாறிக்கொண்‌டேன்.

"குடிக்க ஏதும் வேண்டுமா? என்றார். 'தண்ணீர்' என்றேன். தந்தார். அவர் கையில் மதுக்கிண்ணத்துடன் வந்தமர்ந்து கொண்டார்.

பேசிக்கொண்டிருந்தோம்.  "இந்தப் பெரிய வீட்டில் தனியாகவா இருக்கிறீர்கள்? என்றேன். "குழந்தைகள், உறவினர்கள் இல்லையா? என்றேன். "நான் தனிக்காட்டு ராஜா" என்று சொல்லிச் சிரித்தார்.

பின்பு அவரே, "கடந்த ஆண்டு வரை எனக்கு குழந்தைகள் இருக்கவில்லை, இப்போது ஒரு மகன் இருக்கிறார்" என்றார். நான் உண்மையிலேயே ஆடிப்போய்விட்டேன். "என்னடா இது?.. "அவர் நடக்கவே முடியாத அளவுக்கு இருக்கிறார்.. இவருக்கு எப்படி குழந்தை? என்று மண்டையை உடைத்தாலும்.. "குழந்தை பெறுவதற்கு உங்கள் வயது கொஞ்சம் அதிகமில்லையா? என்றேன். அவரும் "ஏன் என் வயதுக்கும், அழகுக்கும் என்ன குறை? என்று சொல்லி மேலும் என்னைக் குழப்பி ஒரு ‌மோசமான ”ஏ” ‌ஜோக்கும் அடித்தார்

பின்பு சிரித்தபடியே "எனது குழந்தைக்கு 55 வயதாகிறது" என்ற ‌போது "உங்களுக்குத் தானே குழந்தைகள் இல்லை என்றீர்களே? என்று மடக்கினேன் அவரை. "ஆம் கடந்த ஆண்டு வரை எனக்கு குழந்தைகள் இருப்பது எனக்குத் தெரியாது", ஆனால் திடீர் என்று ஒரு நாள் ஒரு பாதிரியாரிடம் இருந்து வந்த ஒரு கடிதத்தில் உங்கள் குழந்தை உங்களை சந்திக்கவிரும்புவதாக எழுதியிருந்ததாகவும் அதன் பின்பு தான் "குழந்தை" எனப்படும் தனது மகனைச் சந்திக்க அனுமதி வழங்கியதாகவும் சொன்னார்.

அவரின் மகன் வந்த போது ஒரு அழகிய வயதான பெண்மணியையும் அழைத்து வந்ததாயும். அப்பெண் தன்னைத் தெரிகிறதா என்று கேட்டபோது இவர் இல்லை என்றிருக்கிறார். "ஒரு நாள் என்னுடன் படுத்த உனக்கு எங்கே என்னை ஞாபகம் இருக்கும்? என்றாராம் அந்தப் ‌பெண்மணி. அப்போது தான் புரிந்ததாம் அவர் 'தீராத விளையாட்டுப்பிள்ளையாக' விளையாடித்திரிந்த காலத்தின் கோலம் தான் இந்த 'மகன்' என்று.

இப்போ என்னைப் பார்த்துக் கேட்டார்.. "இவை ஏறத்தாள 50 - 55 வருடங்களுக்கு முன் முறுக்கேறியிருந்த காலத்து விளையாட்டுக்கள். இவை யாருக்காவது ஞாபகம் இருக்குமா? என்று.. நான் யதார்த்தமாய் "இருக்கமுடியாது தான்" என்று இழுத்தேன்.  அது ஒரு ”பொற்காலம்” எத்தனை எத்தனை அழகிகள் என் பின்னால் அலைந்தார்கள்...  ம்..ம் என்று பெருமூச்செறிந்தார்.

இப்படி எத்தனை குழந்தைகள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றேன்? "யாருக்குத் தெரியும்? என்றார்..  மிகவும் கூலாக. அத்துடன் தானும் மகனும் DNA பரிசோதனை மூலம் தான் தான் தகப்பன் என்பதை உறுதி செய்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.

அந்தக் காலத்தில் ”பாதுகாப்பு”ச் சாதனங்கள் கிடைப்பது கடினம். அது தான் இப்படியாகிவிட்டது என்றும் ஆனால் அதுவும் நல்லதற்கே என்றும்., பின்பு அவரே.. இந்த வயோதிபக் காலத்தில் ”மகன்” என்று உரிமையுடன் பழக ஒருவர் கிடைத்திருப்பது தனது மனதுக்கு இதமாக இருகிறதென்றார்..

"55 வருடங்களின் பின் உன்னை உனது குழந்தை தேடிவருகிறது என்றால் அதை விதி என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது? என்றாரு தத்துவத்தையும் உதிர்த்து... மீண்டும் மதுக்கிண்ணத்தை நிரப்பிக்கொண்டார்.

விடைபெற்று வீடு வந்தேன். வரும் வழியெல்லாம் அவர் மீண்டும் என்னை உதவிக்கழைப்பாரோ என்று  பயந்துகொண்டிந்தேன். அவர் அழைக்கவில்லை. இன்று அழைத்தார். என்னய்யா பிரச்சனை என்றேன்?. பிரச்சனையை விளக்கினார். நான் கூறிய விதத்தில் பிரச்சனையை தொலைபேசியினூடாக தீர்த்துக்கொண்டார்.

"இன்று மாலையுணவருந்துவதற்கு எனது மகன் அழைத்திருக்கிறான், அங்கு போகவேண்டும்" என்று துள்ளல் கலந்த குரலில் சொன்னார். "உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன்" என்றேன். சிரித்தபடியே விடைபெற்றார்.

இன்றைய நாளும் நல்லதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக