செவ்வாய், ஜனவரி 03, 2012

நாடுகாண் பயணம் - ஈஸ்டர் தீவு



தீவின் பெயர்:
ஈஸ்டர் தீவு(Easter Island)


வேறு பெயர்கள்:
ஐலா தே பஸ்குவா/Isla de Pascua(ஸ்பானிய மொழியில்)


அமைவிடம்:
தென் கிழக்கு பசுபிக் சமுத்திரம் 
*உலகப் படத்தில் சிலி நாட்டிற்கு மேற்குப் பக்கமாகவும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு கிழக்குப் பக்கமாகவும் காணலாம். 


எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் பசுபிக் சமுத்திரம். இருப்பினும் அண்டை நாடுகளாக அருகிலுள்ள ஆயிரக் கணக்கான பொலினேசியத் தீவுகளைக்(Polynesian islands) கூறலாம்.


தலைநகரம்:
ஹங்கா ரோவா(Hanga Roa)


அலுவலக மொழிகள்:
ஸ்பானிஷ் மற்றும் ரபா நுய்(Rapa Nui)


இனங்கள்:
ரபா நுய் இனத்தவர்(Rapa Nui) 60%
ஐரோப்பியர்கள் அல்லது மெஸ்டிசோக்கள்(Mestizo) 39%
அமெர் இந்தியர்கள் 1%


ஆட்சி முறை:
சிலி நாட்டின் சிறப்பு ஆட்சிப் பிரதேசம் 


மாகாண ஆளுநர்:
கார்மன் கர்தினாலி(Carmen Cardinali) *இது 03.01.2012 அன்று உள்ள நிலவரமாகும். 


தீவிற்கான மேயர்:
லுஷ் ஷாஷோ பெளாவா (Luz Zasso Paoa) *இது 03.01.2012 அன்று உள்ள நிலவரமாகும். 


சிலி நாட்டுடன் இணைக்கப்பட்ட தேதி:
09.09.1888  


பரப்பளவு:
163,6 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
5,034 (2011 மதிப்பீடு)


இணையத் தளக் குறியீடு:
.cl 
*(இத் தீவு சிலி நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் அந்நாட்டின் இணையத் தளக் குறியீடே ஈஸ்டர் தீவிற்கும் பொருந்தும்)


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 56 32 
*(இத் தீவு சிலி நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் அந்நாட்டின் தொலைபேசிக் குறியீட்டைக் கொண்டே இத்தீவின் தொலைபேசிக் குறியீடும் ஆரம்பிக்கிறது)


விவசாய உற்பத்திகள்:
கிழங்குகள், வாழை, தென்னை.


பிரதான வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத் துறை 


இயற்கை வளங்கள்:
மிகச் சிறிய அளவில் வைரக் கற்கள்.


தீவைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • 1722 ஆம் ஆண்டு டச்சு (ஒல்லாந்து) மாலுமியாகிய ஜாக்கப் ரொக்கிவீன்(Jacob Roggeveen) என்பவரால் உயிர்த்த ஞாயிறு(Easter Sunday) தினத்தில் கண்டுபிடிக்கப் பட்டதால் இத் தீவிற்கு 'ஈஸ்டர் தீவு' எனும் பெயர் ஏற்பட்டது.
  • 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களால் இத் தீவு கண்டுபிடிக்கப் பட்டாலும் இத் தீவின் ஆதிக் குடிகளாகிய 'ரபா நுய்' இனத்தவர் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத் தீவில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து, எவ்வாறு இத் தீவிற்கு வந்து சேர்ந்தார்கள்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஏனெனில் இத் தீவிற்கும் கிழக்குப் பகுதியில் உள்ள சிலி நாட்டிற்கும் இடையில் உள்ள கடற் பரப்பின் தூரம்(பசுபிக் சமுத்திரம்) 3510 கிலோ மீட்டர்கள் ஆகும். மேற்கில் உள்ள பிட்கன் தீவுகளுக்கும்(Pitcairn islands) இத் தீவுக்கும் இடையில் உள்ள கடற் பரப்பின்(பசுபிக் சமுத்திரம்) தூரம் 2075 கிலோ மீட்டர்கள் ஆகும். 
  • இத் தீவுக்கு வந்திறங்கிய டச்சு மாலுமி இத் தீவின் மக்களில் ஒருவர் கூட வெளி உலகோடு, மேற்கத்திய நாடுகளோடு, தொடர்பில்லாமல் பல ஆயிரக் கணக்கான வருடங்களாக வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டார். இவரது குழுவினர் இத் தீவு மக்களோடு தொடர்பை ஏற்படுத்துவதில் மிகப்பெரிய சிரமத்தை எதிர்கொண்டனர். இத்தீவு மக்களின் மொழி உலகில் வேறெங்கும் புழக்கத்தில் இல்லாத மொழியாக இருந்தது. இத் தீவு மக்கள் மேற்கத்திய நாட்டு மொழிகளை அறியாதவர்களாக இருந்தனர். இதனால் இத் தீவின் உண்மையான பெயர் என்னவென்று அறிவதற்குப் படாத பாடு படவேண்டி இருந்தது. இறுதியில் அம்முயற்சியில் தோல்வி கண்ட டச்சு (ஒல்லாந்து) மாலுமியாகிய ஜாக்கப் ரொக்கிவீன்(Jacob Roggeveen) இத் தீவிற்கு டச்சு மொழியில் Paasch Eyland(உயிர்த்த ஞாயிறு தீவு) எனப் பெயரிட்டார். காலப் போக்கில் அப்பெயர் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு உட்பட்டு Easter Island(ஈஸ்டர் தீவு) எனப் பெயர் பெற்றது.
  • குடிநீர் வசதி குறைந்த, எரிமலைகள் நிறைந்த இத் தீவு உலகப் புகழ் பெற்றமைக்குக் காரணம் இத்தீவைச் சுற்றியுள்ள கடற்கரை முழுவதும் இத் தீவு மக்கள் கட்டி எழுப்பிய மோவாய்கள் எனப்படும் உருவச் சிலைகள் ஆகும். இச் சிலைகளைச் செய்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? எவ்வாறு இத்தகைய மாபெரும் சிலைகளை அவர்களால் உருவாக்க முடிந்தது? என்பன போன்ற கேள்விகள் வரலாற்று ஆசிரியர்களை உலுப்பும் கேள்விகள் ஆகும்.
  • இத் தீவைச் சுற்றிலும் 12 ஆம் நூற்றாண்டளவில் ரபா நுய் இனத்தவர்களின் மூதாதையர்களால் எழுப்பப் பட்டதாக கருதப்படும் 887 கருங்கற் சிலைகள் உலகப் பிரசித்தம் வாய்ந்தவை மட்டுமல்லாமல் ஐ.நாவின் 'யுனெஸ்கோ'(UNESCO)/ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் பாதுகாக்கப் பட்டு வரும் 'அரும் பெரும் பொக்கிசங்களுள்'(World Heritage)/உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்று ஆகும்.
  • மனித முகங்களைப் போலத் தோற்றமளிக்கும், கருங்கல்லால் ஆன ஒவ்வொன்றும் 20 தொன்(இருபதினாயிரம் கிலோ) தொடக்கம், 80 தொன்(எண்பதினாயிரம் கிலோ) எடையுள்ள மேற்படி உருவச் சிலைகள் இம் மக்களின் மூதாதையர்களால் வணங்கப்பட்ட 'தெய்வங்களின்' உருவச் சிலைகளாக இருக்கலாம். ஒரு சில சிலைகள் 250 தொன்(இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் கிலோ) எடை கொண்டவை.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்திய விடயம் யாதெனில் ஒரே கல்லில் எவ்வாறு இத்தகைய 'இராட்சத' உருவச் சிலைகளை இத் தீவு மக்களால் செதுக்க முடிந்தது என்பதாகும்.
  • தூக்கி(crane) வசதி இல்லாத 12 ஆம் நூற்றாண்டில் இத் தீவின் பழங்குடி மக்கள் எவ்வாறு இப் பாரமான 'இராட்சதச்' சிலைகளை தீவின் கடற்கரை ஓரங்களுக்கு தூக்கிச்/நகர்த்திச் சென்றார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. இதுவே ஆராய்ச்சியாளர்களின் புருவங்களை உயர்த்தும் 'மில்லியன் டாலர்' கேள்வியாகும்.
  • 'மோவாய்கள்' எனப்படும் மேற்படி இராட்சதச் சிலைகள் இத் தீவைச் சுற்றிலும் கடற்கரை ஓரங்களில் நூற்றுக் கணக்கில் காணப் படுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி மேற்படி சிலைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பு என்பதுடன் இவை இத் தீவு மக்களின் மூதாதையர்கள் வழிபட்ட 'காவற் தெய்வங்களாக' இருக்கலாம் எனவும் இத் தீவில் ஆரம்ப காலங்களில் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும், அவர்கள் அனைவரும் சேர்ந்து இச் சிலைகளை செதுக்கி இருக்காலம் என்பதுடன், பல ஆயிரம் மக்கள் சேர்ந்து தறித்து(வெட்டி) வீழ்த்திய மரங்களின் உதவியுடன் மேற்படி காவற் தெய்வங்களின் சிலைகளை கடற்கரை நோக்கி உருட்டி/இழுத்து/நகர்த்திச் சென்றிருக்கலாம் என நம்பப் படுகிறது.
  • தீவைச் சுற்றிலும் மேற்படி சிலைகள் காணப்படுவதைக் குறிக்கும் முகமாக இத் தீவின் வரைபடத்தில் கரையோரப் பகுதிகளில் கறுப்பு உருவங்களால் அடையாளமிடப்படுவது வழக்கம். மேலேயுள்ள வரைபடத்தில் மேற்படி சிலைகள் மிகச்சிறிய கறுப்பு உருவங்களால் அடையாளம் இடப்பட்டிருப்பதைக் காண்க.
  • 17 ஆம் நூற்றாண்டுவரை இத் தீவு மக்கள் வெளி உலகோடு தொடர்பில்லாமல் வாழ்ந்ததாலும், இத்தகைய ஒரு தீவும், மக்கட் கூட்டமும் உலகில் இருப்பது 17 ஆம் நூற்றாண்டுவரை அறியப்படாததாலும் இத் தீவானது பூமியில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம்(Planet) என்று அழைக்கப் படுகிறது. 
  • ஐரோப்பியர்கள் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காலப் பகுதியில் இத் தீவிலிருந்தும் பலர் அடிமைகளாக மேற்கிந்தியத் தீவுகளுக்கும், அமெரிக்காவிற்கும் கொண்டு செல்லப் பட்டனர்.
  • இத் தீவின் பூர்வீக இனமாகிய 'ரபா நுய்' இனம் உலக மயமாக்கலால் மெல்ல, மெல்லத் தனது அடையாளத்தை இழந்து வருகிறது. இத் தீவின் பூர்வீகக் குடிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெரு நிலப் பரபாகிய சிலியில் குடியேறி விட்டனர். தீவின் பெரும்பாலான மக்கள் சிலி நாட்டின் தேசிய மொழியாகிய 'ஸ்பானிய' மொழியையே பேசுகின்றனர். தீவின் மொழியாகிய ரபா நுய் மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 800 ஆக குறைவடைந்து விட்டது. அவர்களின் பழமையான மொழியைக் கற்கும் ஆர்வம் இளைய தலைமுறையினரிடையே வெகுவாகக் குறைந்து விட்டது. அவர்கள் 'ஸ்பானிய' மொழியைக் கற்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுடைய மொழியும் வெகு விரைவில் உலகில் அழிந்து போகும் மொழிகளில் ஒன்று என மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். 
  • சிலி நாட்டிலிருந்து விமான மூலம் பயணம் செய்தால் இத் தீவை 5½ மணி நேரத்தில் சென்றடையலாம். கப்பலில் செல்வதானால் ஒரு மாத காலமும், விரைவுப் படகில் செல்வதானால் மூன்று வாரங்களும் எடுக்கும். இடையில் தங்கிச் செல்வதற்கு ஒரு தீவுகளும் இல்லை என்பதால், அத்தகைய பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால் எவரும் கடற் பயணத்தை நாடுவதில்லை.
  • இத் தீவு வாசிகளுக்கு ஏதாவது ஆபத்து நேரும் பட்சத்தில் விமானம் தவிர்ந்த வேறு மார்க்கங்களில் உதவிகள் சென்றடையப் பல வாரங்கள் எடுக்கும்.

3 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

''..இத் தீவின் உண்மையான பெயர் என்னவென்று அறிவதற்குப் படாத பாடு படவேண்டி இருந்தது. இறுதியில் அம்முயற்சியில் தோல்வி கண்ட டச்சு (ஒல்லாந்து) மாலுமியாகிய ஜாக்கப் ரொக்கிவீன்(Jacob Roggeveen) இத் தீவிற்கு டச்சு மொழியில் Paasch Eyland(உயிர்த்த ஞாயிறு தீவு) எனப் பெயரிட்டார்....''
Thank you....I like this Island shape....(in your photo..)vaalthukal.

vetha (kovaikkavi) சொன்னது…

''..மேலேயுள்ள வரைபடத்தில் மேற்படி சிலைகள் மிகச்சிறிய கறுப்பு உருவங்களால் அடையாளம் இடப்பட்டிருப்பதைக் காண்க...''
Yes I saw this...That picture is beautiful....

anthimaalai@gmail.com சொன்னது…

சகோதரி அவர்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள்.

கருத்துரையிடுக