அந்திமாலையின் வாசகரும், நலன் விரும்பியும், பிரபல மாயாஜாலக் கலைஞரும், நடிகரும், அறிவிப்பாளரும் ஆகிய டென்மார்க் 'ஒல்போ' நகரத்தில் வாழ்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி இராஜகோபாலன் அவர்களின் 31 ஆவது நாள் நினைவு தினம் இன்று ஆகும். அன்னாருக்கு அந்திமாலை இணையம் தனது இதய அஞ்சலிகளை மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறது. அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வகையில் டென்மார்க்கில் வாழும் நண்பர் 'கரவைதாசன்' என அழைக்கப்படும் சத்தியதாஸ் அவர்கள் 06.01.2014 அன்று அமரர் இராஜகோபாலன் அவர்களின் இறுதி யாத்திரையின்போது பகிர்ந்த உரையை உங்களுக்காகத் தருகின்றோம்.
எனக்குள் அண்ணன் கொக்குவில் கோபாலின் கடக்க முடியா நினைவுகள்
எனக்குள் அண்ணன் கொக்குவில் கோபாலின் கடக்க முடியா நினைவுகள்
அண்ண! இது கண்ணீர் அஞ்சலி செலுத்தித் தீர்க்கக் கூடிய துயரல்ல, உன் பிரிவுத்
துயர்.உனது அர்த்தமுள்ள வாழ்வின் பக்கங்களில் சுமார் பதினேழு வருடங்களுக்கு
முன்பாக உன்னை நான் சந்தித்தேன். அதற்கு முன்பாகவே உன்னைப் பற்றி
அறிந்து வைத்திருந்தேன். எல்லோருக்கும் கிட்டும் நாடகம், இலக்கியம்,
அரசியல் சமூகச்செயற்பாடு, மாயஜாலம் வானொலி இயக்குனர் எனப் பன்முகம்
கொண்ட உன்னைச் சந்தித்து பழகும் அனுபவம் தான் முதலில் எனக்கும்
எட்டியிருந்தது. அதனிடையே, யாழ்பாணத்தின் சராசரித்தமிழர்களில்
ஒருவராகத்தான் உன்னையும் எண்ணியிருந்தேன், பின்னாளில் உனது செயற்பாடுகளை
அவதானித்த போதுதான் வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் உன்னை இணைத்துக் கொண்டு பிரக்ஞை பூர்வமாக இயங்கும் உன்
சிந்தனைப் போக்கும், துடிப்பும் "அநீதியை எதிர்த்து நிற்பதில் நீயும்
நானும் ஒரே மன உறுதி கொண்டவர்கள் என்றால் நீயும் நானும் தோழர்களே " என்ற
சேயின் பிரசன்னம் உன்னிடம் தெறிப்புக்கொள்வதைக் கண்டேன்.
முதலில் என்னை நீ 'தம்பி' என அழைத்தாய், பின் 'தாசர்' என்பாய், கேட்டால் "எனக்கு
நீதான் அயோத்தி தாசர்" என்றாய். என் தந்தையைப் பற்றி எனக்கு நீ சொன்னாய்,
எனது பெரியப்பா உனக்கு உறவு என்றாய். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்ற
வாசகத்தை அப்படியே தலை கீழாகப் புரட்டிப் போட்டாய். "அண்ணன் உடையான்
ஆருக்கும் அஞ்சான்" என்றுதான் வலம் வந்தேன்.
உனது வானொலியில் 'தேடல்' நிகழ்ச்சி செய்யும் வாய்ப்புக்கொண்டேன். வானொலிக்கு
'வான்பதி' மலர் செய்தோம், இலங்கையில் வறிய மாணவர்களின் துயர்
துடைக்க எம்மோடொத்த நண்பர்களுடன் சேர்ந்து 'டன்ரமி' அமைப்பு, 'டன்ரமி
அஞ்சல் சஞ்சிகை' எனக் கடந்து வந்தோம். சின்ன சின்னதாய் செய்த முயற்சிகளில்
தோன்றலில் கற்றலும் மறைதலில் அனுபவமும் கண்டோம்.
இரத்த வெடிலும், பிணங்களின் குவியலும், பிஞ்சுகளின் விம்மலும், பெண்களின்
கதறலும், வேர்கொள்ள முடியாமல் விரட்டி வீழ்த்தப்பட்ட மக்களின் குரலும்
கொலைக்களமாகவே மாறிவிட்ட அர்த்தமற்ற பிறந்த பூமியின் அமைதி வேண்டி உச்சமாக
மக்களுக்காய் மறைமுக அரசியல் செய்தோம்.
உன்னிடம் ஒரு ரேஸ்மோடல் 'கொண்டா' கார் இருந்தது. என்னிடமும் ஒரு 'நிசான்' கார்
இருந்தது. அதிலும் ஒரு ஜனநாயகத்தினைப் பேணினாய். மாறி மாறி இந்த ஐரோப்பிய
தெருக்களிலெல்லாம் உருண்டு திரிந்தோம். நான், நீ, கந்தசாமி மாமா இன்னும்
சிலர், எத்தனை குழுக்களைச் சந்தித்தோம், எத்தனை அரசியல் தலைவர்களைச்
சந்தித்தோம்.
இலக்கியச்சந்திப்பு, மாநாடு, குறும்பட விழாக்கள், நூல் அறிமுக விழாக்கள் பல
செய்தோம், தமிழ்ச்சேவை வானொலி செய்தோம் இன்னும் பலப்பல........
இப்போ கந்தசாமி மாமாவுக்கு வயசேறிப்போச்சு, நீ மலையேறிப் போனாய், நான் மனம்
ஏறிப்போய் நிற்கிறேன். சோகமாகிப் போன சூழலில் நான் எனது கனவுகளில் பயம்
கொண்டுள்ளேன், என்பதே உண்மை.
அண்ண, என்னிடம் நீ எதைக் கேட்டாய், நட்புக்காக 'நடிகவிநோதனுக்குப்' பொன் விழாச்
செய்ய வேண்டும் எனக் கேட்டாய். செய்தோம். அங்கு தான் உன்னை நல்ல மனிதனாகக்
கண்டேன். சக கலைஞனைத் தன்னைப் போல் காணும் உன் நல்ல பண்பினைக் கண்டேன்.
நான் கோயில், குளம் எல்லாம் 'பிழை' என்றேன். நீ அங்கும் நிற்பாய் என்றாய்.
"சர்ச்சுக்குள் சவம் சொர்க்கம் சேர்கிறது! மசூதிக்குள் பிணம் புனிதம்
ஆகிறது! கோவிலுக்குள் மனித பிண்டம் தீட்டாகிறது!" என்ற புரிதல் உன்னிடமும்
இருந்தது. ஆயினும் வெளியில் நின்று எதுவும் செய்ய முடியாது என்பது உன்
வாதம். இந்த முரண்களுக்கு உள்ளும் நாம் உறவாகவே இருந்தோம்.
அண்ண, பேதங்கள் நிறைந்த தமிழ்ச் சமூகப் பண்பாட்டுத்தளத்திலே புதிதாய் ஒரு
'பொறி' செய்தாய். உன் பிள்ளைகள் வழி, உன் பேரப்பிள்ளைகள் அவ்வழியே
சுதந்திரக் காற்றினை சுவாசிப்பார்கள். நீ! நடைமுறையில் எதையும் செய்யும்
நல்ல மனிதன்.
அண்ண, இனி உன்னை யாரும் காண முடியாது. இனி யாரும் உன்னுடன் பேச முடியாது.
ஆயினும் உன் கதைகளுடன் நான் பேசிகொண்டிருப்பேன். உன் செயல்களுடன் நான்
பயணித்துக் கொண்டிருப்பேன்.
அண்ண, எனது ஊர் உனக்கு மிகவும் பிடிக்கும் என்றாய். "சங்கானையில் மழை
பெய்தால், 'கன்பொல்லையில்' தடிமன் கட்டும்" என்று கதைகதையாச் சொல்வாய். சென்ற
ஆண்டு எனது ஊரை நானும் சென்று பார்த்தேன். அங்கு பனந்தோப்பெல்லாம் 'செல்'
அடிபட்டு தோப்பிழந்துபோய் தனி மரங்களாய் நிற்கின்றன. தப்பிய பனை மரத்தில்
நல்ல இளம் சார்வு கொய்து வீசி எறிந்து வழி விடுகிறேன். என் சகோதரனே!
உனக்கென் வணக்கம்!
(நன்றி: 'இனி' 02.02.2014)
ஆசிரியர் குறிப்பு: தமிழகத் தமிழில் குறிப்பாகப் பேச்சுத் தமிழில் 'அண்ணே' என்று அழைப்பதை இலங்கைத் தமிழில் பெரும்பாலும் 'அண்ணை' என்றோ அல்லது 'அண்ண' என்றோ அழைப்பது வழக்கம். நண்பர் அவர்கள் எழுதிய உரையின் இயற்கைத் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தை மாற்றப்படாமல் இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது என்பதனைத் தமிழக வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக