ஞாயிறு, டிசம்பர் 16, 2012

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன் 
நாடு: பூட்டான்
மொழி: ஸொங்கா(Dzonga)
பாடல்: யாஸரீ ஷேலே
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: The Rose
நடிகர்கள்: கெல்ஷாங் ரொப்டென்(Kelzang Tobden) மற்றும் ஷாங்கே சோடென் டென்சின்(Sangay Choden Tenzin)

பாடலாசிரியர்: டெக்கென் டோர்ஜி(Dechen Dorjee)
பாடியோர்: டெக்கேன் பெம்(Dechen Pem) மற்றும் ஜிக்மே ஞேல்ட்ருப்(Jigme Ngeldrup)
இசை: ரண்டின் டோர்ஜி(Tandin Dorji) மற்றும் கர்மா ஜாம்ஸுக் (Karma Jamtshok)

காணொளி உதவிக்கு நன்றி/Video clip courtesy: bhutaneseman

பாடல் பற்றிய குறிப்பு: பாடலின் அர்த்தம் புரியாததையிட்டு யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த மொழியாக இருந்தாலும் 'காதலர்கள்' எதைப்பற்றிப் பாடுவார்கள் என்பது நாம் அறிந்ததே. இவர்களுடைய இசையானது நமது தமிழ் இசையைப் போல் தாரை, தப்பட்டைகள் முழங்காமல் மிகவும் அமைதியாக இருப்பதையும், கிராமத்தில் காதலித்துக்கொண்டிருக்கும் நமது தமிழ்க் கதாநாயகனும் கதாநாயகியும் பாடல் காட்சியென்றவுடன் ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து என்ற நாடுகளுக்குச் செல்வது போல் இல்லாமல் இப்பாடற் காட்சி அவர்களுடைய சொந்த நாடாகிய 'பூட்டானிலேயே' படமாக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. மேற்படி பாடற் காட்சியில் கதாநாயகனும், கதாநாயகியும் அவர்களது பாரம்பரிய உடையிலேயே தோன்றுவதையும் கவனத்தில் கொள்க.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்பு: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடுவில் உள்ள சிறிய நாடு என்பதால் இரு நாடுகளின் கலாச்சரத் தாக்கங்களையும் காண முடியும். நீண்ட காலமாக இந்திய, சீன மற்றும் நேபாளித் திரைப்படங்களையே இந்நாட்டு மக்கள் ரசித்து வந்தார்கள். கடந்த 2000 ஆவது ஆண்டு தொடக்கம் சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். சுமார் 7 லட்சம் மக்களை மட்டுமே பார்வையாளர்களாகக் கொண்ட சிறிய நாட்டில் அம்முயற்சிகள் பெரிய வெற்றியளிக்கவில்லை. கடந்த 12 வருடங்களில் மொத்தம் 24 திரைப்படங்களை இந்நாட்டு இயக்குநர்கள் தயாரித்துள்ளனர். கதாநாயகன் கதாநாயகியை தொட்டு நடிக்கும் கலாச்சரம் இன்னமும் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை.

பூட்டான்+எங்கே +எப்போது+ஏன்: இந்நாடு உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருப்பினும் "கிடைப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழும் கலை" அறிந்தவர்கள். மன மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் பணத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை உலகிற்கு நிரூபித்தவர்கள். இவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் டென்மார்க் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழ் ஊடகங்களில் பூட்டான்: இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முதன் முதலில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வெளியே நடைபெற வேண்டும் என இலங்கை அரசாங்கமும், தமிழ்ப் போராளிகளும் விரும்பியதால் முதல் பேச்சுவார்த்தைகள் 1985 ஆம் ஆண்டு பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றன. இதன் காரணமாக இப் பேச்சுவார்த்தைகள் தமிழ் ஊடகங்களில் 'பூட்டான் பேச்சுவார்த்தைகள்' என்றோ அல்லது 'திம்பு பேச்சுவார்த்தைகள்' என்றோ குறிப்பிடப் படுகின்றன.

"நாடுகாண் பயணம் பூட்டான்" எனும் தலைப்பில் கடந்த 29.03.2011 இல் உங்கள் அந்திமாலையில் வெளியாகிய விளக்கக் குறிப்பை வாசிப்பதற்குக் கீழே உள்ள இணைப்பில் அழுத்தவும்.

நாடுகாண் பயணம் - பூட்டான் 

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக