புதன், ஏப்ரல் 04, 2012

நாடுகாண் பயணம் - பிரான்சு. நேற்றைய தொடர்ச்சி...

நாட்டின் பெயர்:
பிரான்ஸ்(France)


தலைநகரம்:
பாரீஸ் (Paris)


அலுவலக மொழி:
பிரெஞ்சு(French)


ஆட்சி முறை:
ஒற்றையாட்சிக் குடியரசு 


ஜனாதிபதி:
நிக்கலஸ் சர்கோசி(Nicolas Sarkozy) *அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதியைப் போல நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்.
*இது 04.04.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரதமர்:
பிராங்கொயிஸ் பிலொன்(Francois Fillon)*இது 04.04.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பரப்பளவு:
674,843 சதுர கிலோ மீட்டர்கள் (உலகில் பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவுகளின் நிலப் பரப்பையும் சேர்த்து வரும் பரப்பளவு இது. இலங்கையைப் போல் சுமாராக பத்து மடங்கும் தமிழ் நாட்டை விடவும் சுமாராக ஐந்து மடங்கு பெரிய நாடு)


சனத்தொகை:
65,350,000 (2012 மதிப்பீடு) * தமிழ் நாட்டை விடவும் பரப்பளவால் பல மடங்கு பெரிய நாடாக இருப்பினும் சனத்தொகை தமிழ்நாட்டை விடவும் குறைவாகும். தமிழ்நாட்டின் சனத்தொகை 7 கோடியே 20 லட்சம் ஆகும்.


இனங்கள்:
பிரான்சில்:-செல்டிக், லத்தீன்,டியூட்டேனியர், ஸ்லேவிக், வட ஆபிரிக்கர், இந்தோ சீனர், மற்றும் பாஸ்க் சிறுபான்மையினர்.
பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில்:-கறுப்பர், வெள்ளையர், முலேட்டோ இனத்தவர், கிழக்கு இந்தியர், சீனர், அமெர் இந்தியர்.


மொழிகள்:
பிரான்சில் நூற்றுக்கு நூறு வீதம் பிரெஞ்சு மொழி(சிறிய மாற்றங்களுடன் கூடிய வட்டார மொழிகளுடன்)
கடல் கடந்த பிரதேசங்களில்:-பிரெஞ்சு, கிரியோலி, படோயிஸ்,மஹோரியன்(பிரதேச வழக்குடன் கூடிய ஸ்வாஹிலி)

சமயங்கள்:
பிரான்சில்- ரோமன் கத்தோலிக்கம்88%, புரட்டஸ்தாந்துகள்2%, யூதர்1%, முஸ்லிம்கள்5% ஏனையோர் 4%
கடல் கடந்த பிரதேசங்களில்- ரோமன் கத்தோலிக்கர்,புரட்டஸ்தாந்துகள், இந்துக்கள், முஸ்லீம்கள், புத்த சமயம், பகான்.

நாணயம்:
யூரோ 


இணையத் தளக் குறியீடு:
.fr


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 33 (பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசங்களுக்குத் தனித்தனியே சர்வதேசத் தொலைபேசிக் குறியீடுகள் உள்ளன)


வேலையில்லாத் திண்டாட்டம்:
9%(2011 மதிப்பீடு)


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
6,2%


இயற்கை வளங்கள்:
நிலக்கரி, இரும்பு, ஈயம், பொக்சைட், ஸிங், யுரேனியம், ஆர்சனிக், அன்டிமோனி, பொட்டாஷ், பெல்ட்ஸ்பார், புளோரைட், ஜிப்சம், மரம், மீன்.


விவசாய உற்பத்திகள் மற்றும் பண்ணை உற்பத்திகள்:
கோதுமை, தானியங்கள், சீனிக் கிழங்குகள், உருளைக் கிழங்கு, திராட்சை, மாட்டிறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள், மீன்.


தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள், வாகனங்கள், உலோகங்கள், விமானங்கள், மின்சார உபகரணங்கள்(எலெக்ட்ரானிக்), துணி வகைகள், உணவுகள் பதனிடல்.


பெரிய அளவில் வருமானம் தரும் ஏனைய தொழிற்துறை:
சுற்றுலாத்துறை. 
*****கடந்த 2007 ஆம் ஆண்டுவரை உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடாக அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் பிரான்சும் இருந்தன. ஆனால் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றுலாப் பயணிகளின் வரவில் பிரான்ஸ் முதலிடத்தை வகிக்கின்றது. 2007 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 19 லட்சமாகும். இரண்டாவது இடத்தை ஸ்பெயின் பெற்றுக் கொண்டது. ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 85 லட்சம் பயணிகள் ஆகும். அமெரிக்கா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. அமெரிக்காவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 11 லட்சம் ஆகும்.


ஏற்றுமதிகள்:
இயந்திரங்கள், வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், விமானங்கள், பிளாஸ்டிக், இரசாயனங்கள், மருந்து மற்றும் மாத்திரைகள், இரும்பு, உருக்கு, மது பானங்கள் விசேடமாக திராட்சை இரசம்(வைன்), மற்றும் மின்சாரம்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

 • உலக மொழிகளில் பிரெஞ்சு மொழிக்கு சில சிறப்புக்கள் உள்ளன. உலக மொழிகளில் ஒரு நிமிடத்தில் அதி வேகமாக பல வார்த்தைகள் பேசக் கூடிய மொழியில் முதலாமிடத்தில் இருப்பது பிரெஞ்சு மொழி ஆகும். இருப்பினும் உலக மொழிகளில் கற்பவர்களுக்கு மிகவும் கடினமான மொழியும் பிரெஞ்சு மொழியே ஆகும்.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் பிரெஞ்சு மொழி 9 ஆவது இடத்தில் உள்ளது. முதாலாம் இடத்தில் சீன மொழியும்(மண்டரின்), இரண்டாம் இடத்தில் ஆங்கிலமும் மூன்றாம் இடத்தில் ஸ்பானிய மொழியும் இருப்பது நீங்கள் அறிந்ததே. உலகில் 12 கோடியே 80 லட்சம் மக்கள் பிரெஞ்சு மொழியில் பேச வல்லவர்களாக அல்லது பேசினால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.உலக மொழிகளில் பக்தியின் மொழி தமிழ் என்றால் தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால் தூதின் மொழி 'பிரெஞ்சு' என்பர் மொழியியல் அறிஞர்கள். ஒரு நாட்டுத் தூதுவனுக்கு இருக்க வேண்டிய அறிவில் 'பிரெஞ்சு மொழி அறிவு' மிக முக்கியமானதாகும். ஐக்கிய நாடுகள் சபையில்(UNO) விவாதம் நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள 6 மொழிகளில் பிரெஞ்சு மொழி ஒன்றாகும்.
 • உலகில் அணு ஆயுதம் வைத்திருக்கும் எட்டு வல்லரசுகளில் பிரான்ஸ் நாடு ஒன்றாகும்.
 • ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் முக்கிய தீர்மானங்களை 'தடுப்பாணை' மூலம்(வீட்டோ அதிகாரத்தின் மூலம்) தடுக்கும் வல்லமை கொண்ட மொத்தம் ஐந்து நாடுகளில் பிரான்ஸ் நாடு ஒன்றாகும். ஏனைய நான்கு நாடுகளும் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா ஆகும்.
 • பிரான்ஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது நினைவுக்கு வரும் பெயர் மாவீரன் நெப்போலியனின் பெயர் ஆகும். ஐரோப்பாவை மட்டுமல்லாது ஆபிரிக்க, ஆசியக் கண்டங்களையும் கலங்கடித்த மாவீரன் நெப்போலியன் போனபார்ட்(Napoleon Bonaparte) வாழ்ந்த காலம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் ஆகும். இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் என்றென்றைக்கும் அழியாத புகழை மாவீரன் நெப்போலியன் சேர்த்துள்ளான். இங்கிலாந்து மற்றும் ரஷ்யப் படைகளால் சிறைப் பிடிக்கப் பட்ட நெப்போலியன் 'செயின்ட் ஹெலேனா' தீவில் தனிமைச் சிறையில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இவர் தனது காதலியாகிய ஜோஸபீனவுக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. இவர் தனது ஆட்சியில் பிரெஞ்சு மக்களை நோக்கி "கல்வியால் உலகை வெல்லுங்கள்" என்று அறை கூவல் விடுத்தார்.
 • உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரான்ஸ் நாடு முன்னணியில் உள்ளது.
 • இந்நாட்டின் பொருளாதாரம் ஐரோப்பாவின் 2 ஆவது இடத்திலும், உலகின் பொருளாதாரத்தில் 5 ஆவது இடத்திலும் உள்ளது. உலகில் வாங்கும் சக்தி உள்ள மக்களின் வரிசையில் பிரெஞ்சு மக்கள் 9 ஆவது இடத்தில் உள்ளனர்.
 • மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ள நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் நாடு முன்னணியில் உள்ளது.இந்நாட்டின் கல்வித் திட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.
 • உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பின்படி பிரெஞ்சு மக்களின் சுகாதாரம்/மருத்துவ வசதி போன்றவை முதலாவது இடத்தில் உள்ளன.
 • உலகின் 13 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு.
 • ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்புறச் சூழலை மதிக்கின்ற/பாதுகாக்கின்ற நாடுகளில் முதலாம் இடத்தில் உள்ளது.உலகில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கு ஒரு தனியான அமைச்சரையும், அமைச்சுப் பிரிவையும் அமைத்த நாடுகளில் முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும்.
 • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோஷங்களின் கீழ் பிரெஞ்சு மக்கள் செய்த 17 ஆம் நூற்றாண்டுப் புரட்சி உலகப் புகழ் பெற்றது. பிரெஞ்சுப் புரட்சி எனும் பெயரைப் பெற்றுவிட்ட அந்தப் புரட்சியின் மூலம் பிரெஞ்சு மக்கள் மன்னர் ஆட்சியைத் தூக்கி எறிந்து மக்கள் ஆட்சியை நிறுவியதை அறிந்து மேலும் பல நாட்டு மக்கள் தமது நாட்டிலும் மக்கள் ஆட்சியை நிறுவினர்.உலக மக்களுக்கு 'பிரெஞ்சுப் புரட்சி' ஒரு முன்னுதாரணம் ஆகும்.
 • உலக அரங்கில் பிரெஞ்சுச் சமையற் கலையும், உணவுகளும் பிரசித்தம் மிக்கவை.
 • பிரெஞ்சுத் திரைப்படக் கலை, இசை, தத்துவம், இலக்கியம், சிற்பக் கலை,ஓவியம் போன்றவை உலகப் பிரசித்தி பெற்றவை. உலகப் புகழ் பெற்ற இத்தாலிய ஓவியரான லியர்னாடோ டாவின்சி தனது வாழ்நாளில் பெரும்பகுதியை பிரான்சில் கழித்தார். பிரான்சில் இவர் வரைந்த 'மோனலிசா' ஓவியம் உலகப் புகழ் வாய்ந்தது.
 • உலகிற்கு பல நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், தத்துவ மேதைகள், இசை அமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், ஓவியர்கள் போன்றோரைத் தந்த நாடு பிரான்ஸ் ஆகும்.
 • தமிழகத்தின் அண்டை மாநிலமாகிய புதுவை(பாண்டிச்சேரி) மாநிலம் நூறு வருடங்களுக்கு மேல் பிரெஞ்சுக் காரர்களின் ஆட்சியில் இருந்தது. தற்போதும் பிரெஞ்சு ஆட்சியின் அடையாளங்களை பாண்டிச்சேரியில் காணலாம். பாண்டிச்சேரி மாநிலம் பிரான்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.புதுவை மாநில மக்களில் பெரும் பகுதியினர் பிரெஞ்சு மொழியில் பேசும் வல்லமை கொண்டுள்ளனர்.
 • பிரான்ஸ் நாட்டின் ரியூனியன் தீவு மற்றும் பிரான்ஸ் நாடு முழுவதுமாக சுமார் 750,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.மேற்படி தகவலுக்காக அந்திமாலை இணையம் திரு.மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கும்,டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கும், 'காற்று வெளி' இதழுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான செயின்ட் மார்ட்டீன் தீவில் எயார் பிரான்ஸ் விமானம் மிகவும் தாழ்வாகத் தரை இறங்கும் காட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக