வெள்ளி, ஏப்ரல் 06, 2012

கண்ணீரில் கரைந்த கலிடோனியா

ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன்
கலிடோனிய தமிழ் வம்சாவளிச் சிறுமி
கடந்த இரண்டு தினங்களாக உங்கள் அந்திமாலையில் நாடுகாண் பயணம் பகுதியில் 'பிரான்ஸ்' நாட்டைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. வாசகர்கள் அனைவரும் படித்துச் சுவைத்திருப்பீர்கள் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பசுபிக் சமுத்திரத் தீவாகிய 'நியூ கலிடோனியாவைப்' பற்றிய குறிப்பையும் உங்களுக்குத் தருவதாக உறுதியளித்திருந்தோம்.மேற்படி தீவுக்கும் நம் தமிழ் மக்களில் ஒரு முப்பது குடும்பத்தினரின் கண்ணீருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது நம்மில் பலர் அறியாதது.
இத் தீவானது வட மேற்குப் பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு 1500 கிலோ மீட்டர்கள் கிழக்கிலும், நியூசிலாந்துக்கு வடக்கிலும் உள்ளது. இத் தீவைப் பிரிட்டிஷ் கடலோடிகள் பலர் கண்டு பிடித்திருந்தாலும். இத் தீவுகளில் மனிதர்களைப் பிடித்து உண்ணும் 'நர மாமிச பட்சணிகள்'(Cannibals) எனப்படும் வேடுவர்கள் வாழ்ந்த காரணத்தால் பிரிட்டிஷ் காரர்கள் இத் தீவைக் கையகப் படுத்தவில்லை(துணியவில்லை). பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் 1853 ஆம் ஆண்டில் நெப்போலியன் காலத்தில் இத் தீவு பிரெஞ்சுப் படைகளின் வசமானது.இத் தீவைக் கைப்பற்றும் முயற்சியில் பிரெஞ்சுப் படையினர் ஏராளமான வேடுவர்களைக் கொன்றழித்தனர். இத் தீவுகளில் சிறப்பாக வாழை, கிழங்குகள், பழங்கள், தென்னை போன்றவற்றைப் பயிரிட முடியும் எனக் கண்டுகொண்ட பிரெஞ்சுக்காரர்கள் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த வேறு பல நாடுகளில் வாழ்ந்த (குடியேற்ற நாடுகள்) ஆயிரக் கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்து வந்து இத் தீவில் குடியேற்றினர்.
பொலினேசிய இனத்துடன் கலந்துவிட்ட தமிழர்கள்
அக் காலப் பகுதியில் இந்து சமுத்திரத்தில் ஆபிரிக்காவுக்குக் கிழக்கில் 'மடகஸ்கார்' நாட்டிற்கு அண்மையில் உள்ள 'மொரீசியஸ் தீவு' பிரெஞ்சுக் கார்களின் வசம் வந்தது. இத் தீவில் கரும்பு பயிரிடுவதன் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்க முடியும் எனப் பிரெஞ்சுக் காரர்கள் கண்டு பிடித்தனர். ஏனெனில் அக்காலத்தில் சீனி, சர்க்கரை(வெல்லம்) போன்ற பொருட்கள் மிகவும் அரிதான பொருட்களாகவும் தங்கத்தைப் போல் பெறுமதியான பொருட்களாகவும் விளங்கின. இவ்வாறு கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அவர்களுக்கு வேலையாட்கள் தேவைப்பட்டார்கள்.இந்நிலையில் தமிழர்கள் மிகவும் 'பலசாலிகள்' எனவும், 'கடின உழைப்பாளிகள்' எனவும் கண்டுகொண்ட பிரெஞ்சுக் காரர்கள். தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களாகிய பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் தமிழர்களை அடிமைகளாக கப்பல்களில் மொரீஷியஸ் தீவுக்குக் கொண்டு சென்றனர். இத் தீவுக்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்களில் பெரும் பகுதியினர் "சொல், பேச்சுக் கேட்கும் ஒழுக்கமான அடிமைகளாக" இருந்தனர். இவர்களில் ஒரு சிலர் மட்டும் பிரெஞ்சுக் காரர்களுக்கு அடங்க மறுத்தவர்களாகவும், அயலானுடன் சண்டையிடுபவர்களாகவும் இருந்தனர். நாளாவட்டத்தில் இவர்களை அடக்கி ஆள்வதில் சிக்கலை எதிர்கொண்ட பிரெஞ்சுக் காரர்கள் "பிரச்சனைக்கு உரியவர்கள்" எனத் தாம் கண்டுகொண்ட சுமார் முப்பது தமிழ்க் குடும்பங்களைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவர்களைக் கண் காணாத தேசத்திற்குக் கப்பலில் அனுப்பி வைத்தனர். மேற்படி முப்பது தமிழ்க் குடும்பங்களும் அனுப்பி வைக்கப்பட்ட கண் காணாத தேசமே தற்போது 'நியூ கலிடோனியா' என அழைக்கப் படுகிறது. இத் தீவிற்கும் இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள சென்னை நகரத்திற்குமிடையிலான தூரம் 10,174 கிலோ மீட்டர்கள்(6322 மைல்கள்) இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கு தமது தாய் மண்ணாகிய தமிழகத்தை தமது வாழ்நாளில் மீண்டும் ஒரு தடவை பார்க்கவே முடியாது என்பது தெரிந்திருக்கவில்லை.
பண்டிகையில் ஆடிப்பாடும் கலிடோனியர்கள்
இவ்வாறு நியூ கலிடோனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், இந்தோனேசியர்கள், வியட்நாமியர்கள், ஆபிரிக்கர்கள் போன்றோர் அங்கு புதிதாக ஆரம்பிக்கப் பட்ட தங்கச் சுரங்கங்கள், 'நிக்கல்' சுரங்கங்கள்,நிலக்கரிச் சுரங்கங்கள் போன்றவற்றில் கடுமையாக உழைப்பதற்குக் கட்டாயப் படுத்தப் பட்டனர். மேற்படி சுரங்கங்களில் இருந்து தங்கம் எடுக்கப் படுவது நின்று போய் விட்டாலும், 'நிக்கல்' எனப்படும் உலோகம் எடுக்கப் படுவது இன்றுவரை தொடர்கிறது. 'நிக்கல்'எனப்படும் உலோகமானது துருப்பிடிக்காத நாணயங்களைத் தயாரிப்பதற்கும், கணனியின் உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்கும், வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பதற்கும்,மின் கலங்கள்(பாட்டரிகள்), குறுந்தகடுகள்(CD), பணக்காரர்களின் மாளிகைகளை அழகு படுத்த பயன்படும் உலோக உருண்டைகள் போன்றவற்றைத் தயாரிக்க உதவும் ஒரு மென்மையான உலோகம் ஆகும். உலகில் ஏற்றுமதியாகும் 'நிக்கலில்' 25% நியூ கலிடோனியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப் படுகிறது.
சரி மீண்டும் நம் தமிழ் மக்களின் பக்கம் பார்வையைத் திருப்புவோம். மேற்படி தங்கச் சுரங்கங்களில் கடுமையாக உழைத்த தமிழர்களில் ஒரு சிலர் ஒரு சில ஆண்டுகளுக்குள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயினர். இன்னும் சிலர் காலம் காலமாக தமது தாய் மண்ணை நினைந்து அழுதபடி, தங்கள் வாழ்க்கையை அம் மண்ணில் தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் சந்ததியினருக்கு "தாம் இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து வந்தோம்" என்பதை மட்டும் கூறினார்களே அன்றி, தமிழகத்தின் ஒரு பகுதியில் இருந்து வந்தோம் என்பதை கூறி வைக்க மறந்து விட்டார்கள் போலும். அந்தச் சந்ததியில் வந்த ஒரு சில பிள்ளைகள் கூறிய கருத்துக்களின்படி தமது மூதாதையர்கள் தங்களின் தாய் மண்ணை மிகவும் நேசித்தார்கள் என்பதையும், தமது தாய் நாட்டை வாழ்வில் ஒரு தடவையேனும் பார்த்து விடவேண்டும் எனும் ஆவல் நிறைவேறாமலே கலிடோனிய மண்ணில் மாண்டு போயினர் என்பதையும் அறிய முடிகிறது. அவர்களில் பலரின் கனவாகிய "பாண்டிச்சேரி/காரைக்கால் மண்ணை முத்தமிடுதல்" எனும் ஆவல் இறுதிவரை ஒரு கனவாகவே போனது. சென்ற நூற்றாண்டு வரை அங்கு வாழ்ந்த மேற்படி மக்களின் சந்ததியினர் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்ததாகக் கூறி வந்துள்ளனர். தற்போது அங்கு வாழும் தமிழ் மக்களின் சந்ததியினர் வேறு நாட்டவர்களின் இனங்களுடன் கலந்து விட்டனர். தற்போது அங்கு வாழ்பவர்களில் யாருமே இந்தியாவிலிருந்தோ, தமிழகத்திலிருந்தோ வந்ததாகக் கூறுவதில்லை. இருப்பினும் அவர்களின் பரம்பரைப் பெயர்களிலிருந்து அவர்கள் தமிழர்களின் வழித் தோன்றல்கள் என்பதை உறுதிப் படுத்த முடிகிறது. அங்கு வாழும் தமிழ் வம்சாவளியினரின் பரம்பரைப் பெயர்களில் ஒரு சில உதாரணங்கள் பின்வருமாறு:- பவளக்கொடி, வீராசாமி, சாமிநாதன், மரிய சூசை, ராயப்பன் இன்னும் பல.
கலிடோனியச் சுரங்கத் தொழிலாளி
தற்போது அங்கு வாழும் சந்ததியினர் யாரும் தாய்த் தமிழகத்தை நினைத்துப் பார்க்காத சந்ததியினராக இருந்தாலும், அவர்களின் மூதாதையர்கள் தினமும் தமது தாய் மண்ணை நினைத்துக் கலிடோனிய மண்ணில் கண்ணீர் சிந்தினர். அந்தக் கண்ணீர்த் துளிகள் கலிடோனிய மண்ணை நனைத்தது மட்டுமன்றி, பசுபிக் சமுத்திரத்தில் கலந்து அவ்வழியே அவை இந்துமா சமுத்திரத்திலும் கலந்து இப்போதும் காரைக்காலிலும், பாண்டிச் சேரியிலும் கரையை நோக்கி அலைகளாக வந்த வண்ணம் உள்ளன. அவ்வலைகள் தமிழக மண்ணைத் தினமும் முத்தமிட்டுச் செல்கின்றன.
நன்றி:en.wikipedia.org./wiki/Tamil_diaspora 
மற்றும் History of the Tamil Diaspora/Murugan.org

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

3 கருத்துகள்:

Ramani சொன்னது…

Thanks Anthimaalai. following like this

Seelan சொன்னது…

Excellant, and Graet

Akilan சொன்னது…

Very sad, Affection me greatly

கருத்துரையிடுக