ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

தாரமும் குருவும் பகுதி - 7.0

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பகுதி 7.0
அல்லைப்பிட்டி 1977
நான் மேலே குறிப்பிட்ட அரச வம்சத்துப் பெண்களின் பெயர்களில் ஓரிடத்தில் கூட "அல்லி அரசாணி" என்ற பெயர் தென்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? "அல்லி அரசாணியால் ஆளப்பட்டதால், எமது கிராமத்திற்கு அல்லைப்பிட்டி என்று பெயர் உருவானது" என்பது வெறும் கற்பனைக் கதையே.
சரி, அப்படியானால் யாரோ ஒருவர் இந்த அல்லி இராணிக் கதையை அவிழ்த்துவிட எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டு பரம்பரை பரம்பரையாக இந்தத் தகவலை அடுத்த சந்ததிக்குக் கடத்தி இருப்பார்கள் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படியானால் எங்கே தவறு நிகழ்ந்தது? என்று சிந்தித்துப் பார்த்ததில் கிடைத்த பதில்களை எதிர்வரும் வாரங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். எனது சிந்தனைக்கும், தேடுதலுக்கும் கிடைத்த விடைகளையே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது முடிவே இறுதியும், அறுதியுமானது என்று ஒரு போதும் கூறமாட்டேன். இங்கு ஐரோப்பாவில் வெள்ளையர்கள் தமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தங்களின் பரம்பரையில் வாழ்ந்த பத்து அல்லது பதினைந்து பேரின் பெயர்களையும், இதே ஐரோப்பாவில் வாழும் தங்களின் உறவினரில் பலரையும்/தலைமுறையைச் சேர்ந்தோரையும் தேடிக் கண்டு பிடிப்பதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் யாருமே வேலையில்லாமல் இருந்து கொண்டு இந்த முயற்சியில் இறங்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள். சிலர் கோடீஸ்வரர்கள். அவர்களின் ஒவ்வொரு மணித்துளியும் பல ஆயிரம் டாலர் பெறுமதியானவை. அப்படியிருக்க அவர்கள் ஏன் இத்தகைய முயற்சிகளில் இறங்குகிறார்கள்??? சற்று சிந்தியுங்கள். அவர்களுக்கு தமது தலைமுறை பற்றிய ஒரு தேடல், தாகம் இருக்கிறது. நம்மவர்களில் பெரும்பாலானோருக்கு அத்தகைய தேடல்களோ, ஒரு தாகமோ இல்லை என்பதே உண்மை.
நான் எனது தலைமுறையில் ஒரு பத்துச் சந்ததியினரின் பெயரைக் கண்டு பிடிக்க வேண்டும் எனும் ஆவலில், தேடலில் இருந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் என்னால் என் தலைமுறையில் மூன்று தலைமுறைக்கு அப்பால் செல்ல முடியவில்லை. காரணம் எமது நாட்டில் மனிதர்களின் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யும் நடைமுறைகள், ஆட்களைப் பதிவு செய்யும் திட்டம் போன்றவை இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரே வீரியம் பெற்றன. அதற்கு முன்பாக இலங்கையில் மனிதர்களின் பிறப்பு, இறப்பு போன்றவை பதியப்படுவதில் முன்பிருந்த ஆட்சியாளர்களுக்கு ஆர்வம் இல்லாதிருந்தது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உட்பட்ட விடயங்கள் அல்ல. இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் போன்றோர் இலங்கையின் வளங்களைக் கொள்ளயடிப்பதிலேயே குறியாக இருந்தனர். இவர்களுக்கு இலங்கையின் தமிழனோ/சிங்களவனோபிறந்தால் என்ன? இறந்தால் என்ன? அதைப் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியம் தான் என்ன? இந்த வரிசையில் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களைக் கொஞ்சம் பாராட்டலாம். ஏனென்றால் அவர்கள் தமது நாட்டில் உள்ளதைப் போல்(இங்கிலாந்தில் உள்ளதைப் போல) மக்களின் பிறப்பு, இறப்புகளைப் பதியும் நடைமுறையை உருவாக்கினார்கள்.
இலங்கையில் ஒரு கல்வியறிவு உள்ள சமுதாயத்தை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் என்றே இலங்கையின் வரலாறு பகர்கிறது.கல்வியறிவு உள்ள சமுதாயம் உருவாகிய பின்னரே ஒரு மனிதனின் பிறப்பு, இறப்பு மற்றும் மக்கட்தொகை போன்றவை பதிவு செய்யப் பட வேண்டும் எனும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவானது. ஆகவே இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு முன்மாதிரியாக இருந்தமைக்காக இலங்கை மக்கள் ஆங்கிலேயருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள்.
சரி, மீண்டும் அல்லைப்பிட்டிக்கு வருவோம். அல்லி இராணியின் பெயரால் 'அல்லிப்பிட்டி' என்று இருந்த பெயர் பின்னர் மருவியதால் 'அல்லைப்பிட்டி' என்று மாறியது என்ற கருத்தை நாம் முற்று முழுதாக நிராகரிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும். 'அல்லி' என்பது தனியே ஒரு அரசியின் பெயரைக் குறிப்பது மட்டும் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் அல்லி என்பது ஒரு பூவைக் குறிக்கும் வார்த்தை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 'அல்லி' எனும் பூவுக்கு தமிழில் 'ஆம்பல்' என்று பெயர். தாமரை மலரின் எதிரி என்று இந்தப் பூவை இலக்கியங்கள் கூறுகின்றன. ஏனெனில் பகலில் சூரியனின் வரவைக் கண்டு முகம் மலரும் தாமரையைப்(வட மொழியில் 'அம்புஜம்' என்று பெயர்) பார்த்து இரவில் முகம் மலரும் 'அல்லி மலர்' சிரிக்கிறதாம். ஏனெனில் பகலில் சூரியனின் வரவில் மகிழும் தாமரை, இரவானதும் வாடி நிற்கிறது. இந்தத் தாமரையைச் 'சூரியனின் காதலி' என்கின்றன இலக்கியங்கள். அதே இலக்கியங்கள் அல்லியை(ஆம்பல்) 'சந்திரனின் காதலி' என்கின்றன. சூரியனைக் கண்டு தாமரை மலர்வதும், வெண்ணிலவைக் கண்டு அல்லி எனப்படும் ஆம்பல் மலர்வதும் நாம் எம் வாழ்க்கையில் பார்த்த நிகழ்வுகளே. இந்தத் தாமரை எனப்படும் அம்புஜத்தையும், 'ஆம்பல்' எனப்படும் அல்லியைப் பற்றியும் பாடாத கவிஞர்களே கிடையாது. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடி என நம் ஈழத்துக் கவிஞர் கவிமணி.தேசிக.விநாயகம்பிள்ளை அவர்களயே நான் கூறுவேன். அவர் சிறார்களுக்காக எழுதிய பாடல்களுள் ஒன்றாகிய "மீனினம் ஓடிப் பறக்குதம்மா" என்று தொடங்கும் பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.
அம்புயம்(தாமரை) வாடித் தளர்ந்ததம்மா -அயல்
ஆம்பலும்(அல்லி) கண்டு களிக்குதம்மா
இம்பருலகின் இயல்பிதம்மா -மதிக்கு
இன்னார் இனியாரும் உண்டோ அம்மா?

என்கிறார். அதன் பின்னர் வந்த தமிழகக் கவிஞர்களில் கண்ணதாசன் பல பாடல்களில், பல இடங்களில் தாமரையையும், அல்லியையும் பாடியுள்ளார்.இருப்பினும் கவிஞர் புலமைப் பித்தன் என்பவர் எழுதிய, உங்களுக்கும் எனக்கும் நன்கு பரிச்சயமான ஒரு பாடலின் வரிகளை உங்களுக்கு உதாரணமாகத் தருகிறேன்.
"ஆயிரம் நிலவே வா" என்று தொடங்கும் பாடலில் வரும்
"அல்லி மலர் மேனியிலே ஆடையென நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற"

எனும் வரிகளில் உங்கள் நினைவுத் திரையில் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் மட்டுமா வந்து போகிறார்கள்? 'அல்லி' மலரும் தானே வந்து போகிறது. அதன் பின்னர் வந்த கவிஞர்களில் வைரமுத்து அவர்கள் இந்த 'அல்லியைப்' பல இடங்களில் தனது பாடல்களில் பயன்படுத்தி இருப்பார்.
அருணாச்சலம் படத்தில் வரும் பாடல் ஒன்றில் இவ்வாறு எழுதியிருப்பார்:-
"அல்லி அல்லி அனார்கலி
லவ்லி லவ்லி ரோஜாக் கிளி
ஆல் ரவுண்டர் நான்தான் கிளி"
அந்தப் பாடல் எதிர்பார்த்த அளவு வெற்றியையோ, வரவேற்பையோ பெறவில்லை என்பதே எனது கணிப்பு. ஆனால் பல வருடங்கள் கழித்து அல்லி மலரின் இன்னொரு பெயராகிய 'ஆம்பல்' என்ற பெயரை ரஜினிகாந் அவர்கள் நடித்த சிவாஜி திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார் அந்தப் பாடல் பலத்த வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. அந்தப் பாடலில் கதாநாயகி நீந்தும் நீச்சல் தடாகத்தில் ஆம்பல் பூக்கள்(அல்லி மலர்கள்)இருக்குமாறு காட்சியை வடிவமைத்த இயக்குனர், அதில் வரும் பெண்களின் உடைகளைக் கூட ஆம்பல் பூவின் வர்ணத்தில் வருமாறு ஏற்பாடு செய்திருப்பார். அப்பாடல் என்னை மிகவும் கவர்ந்ததுபோல் உங்களையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன். இதோ உங்களுக்காக அந்தப் பாடல்:


இவ்வாறு 'ஆம்பல்' என தமிழ் இலக்கியங்கள் அழைக்கும் 'அல்லி' மலரை ஆங்கில இலக்கியங்கள் லில்லி(lily) என அழைக்கின்றன. தமிழர்களில் கிறீஸ்தவர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு 'லில்லி' எனப் பெயர் சூட்டுவதைக் கவனித்திருக்கிறீர்களா? இவ்வாறு தமிழர் சமுதாயத்தில் 'அல்லி மலர்' வாழ்கின்றது. அதற்காக தாமரை எனும் பெயர் எமது தமிழ்ச் சமுதாயத்தில், பெயர் சூட்டலில் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. இலங்கையில் வாழும் எனது சித்தி ஒருவரின் பெயர் 'தாமரை வதனி' அதே போல் எனது மைத்துனி ஒருத்தியின் பெயர் 'தாமரைச் செல்வி' அது மட்டுமல்லாமல் தாமரையின் இன்னொரு பெயர் 'அம்புஜம்' எனக் குறிப்பிட்டேன் அல்லவா? தமிழ் நாட்டில் பிராமணக் குடும்பங்களில் 'அம்புஜம் மாமிகள்' ஆயிரக் கணக்கில் இருப்பர் என்பது எனது நம்பிக்கை.
இறுதியாக ஒரு பொது அறிவுத் தகவல்: எமது அண்டை நாடாகிய இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றால், இலங்கைத் திருநாட்டின் தேசிய மலர் 'ஆம்பல்' எனப்படும் 'அல்லி' மலர்தான்(சிவப்பு மற்றும் நீலம் கலந்த குளத்து அல்லி)
(இன்னும் சொல்வேன்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன 

3 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

தொடருங்கள் வாழ்த்துகள்....(ஓன்றும் கூற வரவில்லை.)

Lingathasan சொன்னது…

தங்களின் கருத்துக்கு நன்றிகள்.

vinothiny pathmanathan dk சொன்னது…

அல்லைப்பிட்டி என்ற ஊரின் பெயருக்கும் அல்லிக்குமான விளக்கத்தினை போதும் போதும் என்ற அளவிற்கு விளக்கியிருக்கின்றீர்கள் .தொடர் அருமை. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக