சனி, மே 25, 2013

பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் காலமானார்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள்  சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திரு டி. எம்.சௌந்தரராஜன் அவர்கள்  இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
மதுரையில், 1923ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். 1950ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" பாடல் மூலமாக சௌந்தரராஜன் தமிழ் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
அதன்பிறகு தொடர்ந்து அவரது இனிய குரலால் பல்வேறு திரைப்பட பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தமிழில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். புரட்சித் தலைவர் M.G.R மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற பிரபல நடிகர்களுக்காக இவர் பாடிய பல நூற்றுக் கணக்கான பாடல்கள் தமிழ்
மக்களின் மனங்களை விட்டு அகலாதவை. புரட்சித் தலைவருக்காக இவர் பாடிய "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" மற்றும் நடிகர் திலகத்திற்காகப் பாடிய "பூ மாலையில் ஓர் மல்லிகை" மற்றும் பக்திப் பாடல்களில் "அழகென்ற சொல்லுக்கு முருகா", "உள்ளம் உருகுதையா முருகா" "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்", ஆகியவையும் புரட்சிப் பாடல்களில் "அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்", "அச்சம் என்பது மடமையடா" போன்ற பாடல்களும், தத்துவப் பாடல்களில் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" போன்ற பாடல்களும் காலத்தால் அழியாதவை. இது தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இசை உலகில் ஒரு முத்திரை பதித்த சாதனைக் கலைஞன் அமரர் T.M.சௌந்தரராஜன் அவர்களுக்கு அந்திமாலையின் அஞ்சலிகள். 

அமரர் T.M. சௌந்தரராஜன் அவர்களின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று அந்தி மாலையின் வாசகர்களுக்காக:

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

நெருங்கிய உறவினரை இழந்த சோகம்
நிச்சயம் தமிழக மக்கள் அனைவருக்கும் இருக்கும்
அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

கருத்துரையிடுக