செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
பாகம் 7.(கடந்த 19.08.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
 
 சதுரம் 1.
திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.

இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!

சதுரம்: 2
இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.

ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.

சதுரம்: 3

இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய
காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.
விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.

சதுரம்: 4

இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.

மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.

முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.

இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க
நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.

மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.

நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.

இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.

இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை.....
(தொடரும்) 
இந்தத் தொடரின் பகுதி 8 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (02.09.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக