செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்

ஆக்கம்:ம.திருவள்ளுவர், தேவகோட்டை, சிவகங்கை, தமிழ்நாடு
 பாகம் 4.(கடந்த 29.07.2014 அன்று உங்கள் அந்திமாலையில் வெளியாகிய பதிவின் தொடர்ச்சி)
மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.
 இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள். இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.
நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.

ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!

கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.

இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும். இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.
ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.

முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்
கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்

(1) (நான்) நெருங்க
(நீ) விலக

 (2) (நான்) நெருங்க

(நீயும்) நெருங்க


(3) (நான்) விலக
(நீயும்) விலக

(4) (நான்) விலக
(நீ) நெருங்க

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.

கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து.....
(தொடரும்)
 இந்தத் தொடரின் பகுதி 5 ஐ அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை (12.08.2014) உங்கள் அந்திமாலையில் வாசியுங்கள்.

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்

கருத்துரையிடுக