சனி, ஜூலை 30, 2011

ஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா?


ஆக்கம்: ஜோ மில்டன், சிங்கப்பூர்

உலகில் திரைப்பட கலைஞர்களுக்கு மட்டுமென்றில்லை, எழுத்தாளர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, பல துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்களுக்கு ரசிகர் இருப்பது ஒன்றும் புதிய செய்தியில்லை ..இந்த 'ரசிகர்' என்ற பதம் ஒருவரின் கலை மீது தனி அபிமானம் வைத்திருக்கும் ஒருவன் என்பதைத் தானே குறிக்க வேண்டும் ..ஆனால் நம் நாட்டில் ,அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 'ரசிகர்' என்று சொல்லிவிட்டால் , பொழுதண்ணைக்கும் வேலை வெட்டிகளை மறந்து அபிமான நடிகருக்கு மன்றம் அமைத்து ,போஸ்டர் ஒட்டி , கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் சிலரை மட்டும் குறிப்பதாக ஒரு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது ,அல்லது சிலர் அப்படி கற்பித்துக் கொள்கிறார்கள்.
ஒருவர் தன்னை சாருவின் ரசிகர் ,ஜெயமோகனின் ரசிகர் என்று சொன்னால் அது பெருமை போலவும் , இன்னொருவர் தன்னை கமல் ரசிகர் ,ரஜினி ரசிகர் என்று சொன்னால் அது ஏதோ அவமானத்துக்குரியது போலவும் கட்டமைக்கப்படுகிறது . இதிலே என்ன பெரிய வெங்காய வித்தியாசம் இருக்கிறது என எனக்கு புரிவதில்லை . சிலரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் "நான் ரசிகர்-லாம் இல்லீங்க .ரஜினி படம் விரும்பி பார்ப்பேன்" என்பார்கள் .ஏதோ நாம் நீங்க யாருடைய ரசிகர் மன்றத்தில் இணைந்து பணிபுரிகிறீர்கள் என கேட்டது மாதிரி .. ரஜினி படம் விரும்பி பார்ப்பவர் ரஜினி ரசிகர் .இதுக்கு மேலே அவர் என்ன அர்த்தப்படுத்திக்கொள்ளுகிறார் என தெரிவதில்லை . இன்னும் சிலர் "எனக்கு எல்லா நடிகர்களும் ஒண்ணு தான்" -ன்னு ஒரு உலக மகா தத்துவத்தை சொல்லுவார்கள் ..இல்லையென்றால் நாம் அவரை ஒரு நடிகரின் ரசிகர் என அவமானமாக நினைத்து விடுவோமாம்.

இன்னொன்று ஒருவரின் ரசிகர் என்றால் அவர் சொல்லுவதே வேதவாக்காக கொண்டவர் ,அவரின் போட்டி நடிகரை வெறுப்பவர் என ஒரு பிம்பம் ..இதெல்லாம் ரசிகர் மன்றங்களில் சேர்பவர்களுக்கு சரியாக இருக்கலாம் ..ஏனென்றால் ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களில் பாதி பேர் உண்மையிலேயே அந்த நடிகரின் கலையை ரசிப்பதால் இணந்தவர்கள் என சொல்ல முடியாது ..இல்லையென்றால் ரஜினி மன்றத்தை சார்ந்தவர் அதிருப்தியால் விஜயகாந்த் மன்றத்தில் சேர்ந்தார் என்றெல்லாம் இருக்க முடியாது .ஏதோ ரஜினியின் நடிப்பில் திடீர் அதிருப்தி வந்தா அவர் மாறினார் .மன்றத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை .பிழைக்க வழியில்லை ..எனவே அரசியல் கட்சிகளுக்கு தாவுவது போல தாவுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் .இதை சொல்லுவதால் நான் ஒன்றும் அவமானப்படவில்லை .சிவாஜி கணேசனின் கலைக்கு நான் ரசிகன் .அதே நேரத்தில் சிவாஜி கணேசன் என்ற அரசியல் வாதிக்கு நான் தொண்டனாகவோ ,ஆதரவாளனாகவோ இருந்ததில்லை .இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்தது . ரசிகர் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை .இன்னும் சொல்லப்போனால் இதுவரை தியேட்டரில் அவர்கள் திரையில் தோன்றும் முதல் காட்சியில் கைதட்டலோ விசிலோ அடித்ததில்லை (விசில் அடிக்க முயற்சி செய்தும் வரவில்லை ,அது வேறு விஷயம்) .அதனால் ஒரு நடிகரின் ரசிகர் கூட்டத்தின் அளவை அறிமுகக்காட்சியில் எழும் விசில் சத்தத்தை வைத்து கணக்கிடும் முறையை நான் ஒத்துக்கொள்ளுவதும் இல்லை.

சிவாஜி ரசிகன் என்பதால் எம்.ஜி.ஆர் படம் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பதில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் 135 படங்களில் ஏறத்தாழ
90 படங்களை பார்த்திருக்கிறேன் .சில படங்களை பல முறை பார்த்திருக்கிறேன் .இன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் என்றால் அத்தனை விருப்பம் .எம்.ஜி.ஆர் படங்களில் வந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களின் வீடியோ தொகுப்பை ஏறத்தாழ எல்லா வார இறுதியில் ஒரு முறை பார்ப்பவன். இதே போல கமல் ரசிகன் என்பதால் ரஜினி படம் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை ..கமல் படம் வந்தால் ஒரு வாரத்துக்குள் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன் .ரஜினி படம் வந்தால் இரண்டு வாரத்துக்குள்..இந்த ஒரு வாரம் தான் வித்தியாசம் .நீண்ட நாட்களுக்கு பின் தியேட்டரில் நான் பார்க்காத ரஜினி படம் குசேலன் (சில காரணங்களுக்காக) .மற்ற படங்கள் இயக்குநர்களைப் பொறுத்து ,மற்றவர் சொல்வதை பொறுத்து . இதே போல எனக்கு தெரிந்த நண்பர்கள் பலரும் ரஜினி ,கமல் இருவரின் படங்களையும் தவறாமல் பார்ப்பவர்கள் ..ஆனால் இருவரில் ஒருவருக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பது தான் ஒரு சின்ன வேறுபாடு .

சினிமா என்பது எழுத்து போன்ற ஒரு கலை . வரலாற்று ஆய்வுகள் ,விஞ்ஞான கட்டுரைகள் போன்ற உருப்படியான எழுத்துக்களை தவிர்த்து , வெறும் புனைவுகளையும் அது குறித்த சண்டைகளையும் ,சுய சொறிதல்களையும் எழுதும் இலக்கியவாதிகளுக்கு ரசிகனாய் இருப்பதை விட ,இதை விட உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவில் கலைப்பங்களிக்கும் ஒரு கலைஞனின் திறமைக்கு ரசிகனாய் இருப்பது எந்த விதத்தில் தாழந்தது ?

ஆம் .நான் சிவாஜி ரசிகன் ,கமல் ரசிகன் ,கண்ணதாசன் ரசிகன் ,இளையராஜா ரசிகன் ,நாகேஷ் ரசிகன் ,எம்.ஆர்.ராதா ரசிகன்.

14 கருத்துகள்:

Arul, DK சொன்னது…

Good article

vinothiny pathmanathan dk சொன்னது…

கட்டுரை நன்றாக இருந்தது. ஆனால் ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருந்து அவனது கலையை ரசிப்பவராக இருப்பதோடு மட்டும் இல்லாமல் என் தலைவர் செத்துவிட்டார் என்று தீக்குளித்து இறந்து போனவர்களை பற்றி அறிந்திருக்கின்றோம் .அதன் விளைவு தான் நான் இவரது ரசிகன் என்று சொல்வதை மக்கள் குறைத்து நான் எல்லோரின் படங்களையும் பார்ப்பேன் என்று சொல்வதற்கு காரணமாக இருக்கலாம் என்பது என் எண்ணம் .

தாராபுரம் சுந்தர் , கோவை. சொன்னது…

ஐயா ! நீங்கள் ரசிகராக இருங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. 'வெறியர்களாக' இருக்க வேண்டாம் என்றுதானே சொல்கிறோம். நடிகைக்குக் கோயில் கட்டியது நம் மாநிலத்தைத் தவிர வேறு எங்காவது நிகழ்ந்ததா? பிள்ளை பசித்திருக்க அபிமான நடிகரின் 'கட் அவுட்டுகளுக்கு' பால் ஊற்றுகின்ற கொடுமை, பூமாலை வாங்கிப் போடுகின்ற கொடுமை வேறு எங்காவது நிகழ்கிறதா?
எதுவாக இருப்பினும் உங்கள் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

Ramesh, DK சொன்னது…

உங்கள் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்

Mathanagopal Denmark சொன்னது…

arijamay aktrapada vandum.

Raja and Mala சொன்னது…

Well done...

தி.பரஞ்சோதிநாதன், டென்மார்க். சொன்னது…

எல்லோரும் சினிமா 'கிசுகிசு' க்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

HN சொன்னது…

ஒரு நடிகனின் ரசிகன் என்று கூறுவது அவமானம் இல்லை. ஆனால் அவரின் தரமற்ற படங்களை தரமானவை என்று கூறுபவர்கள் எம்மிடத்தில் அதிகம் என்பது அவமானம்.

நடிகர்மன்றங்களை உருவாக்குது யார்? ரசிகர்களா அல்லது நடிகர்களா?

ஒரு நடிகன் அரசியலில் இடம்பிடிக்கும்போது ரசிகர்மன்றம் ஏன் நடிகனின் அரசியல் கொள்கைகளை முற்றாக ஆதரிக்கிறார்கள். நடிகனின் நடிப்புக்கும் அரசியலுக்கும் ஏன் முடிச்சுப்போடவேண்டும்?

நடிகர்மன்றங்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அளவூகோலாக பயன்படுத்தி நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்துள்ளார்கள் என்பது பலநாடுகளில் நடந்தது என்றாலும் இது இந்தியாவில் பரவலாக அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியா முன்நேறவேண்டும் என்றால் நடிகர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

நடிகர்களின் அல்லது திரையூலக அரசியலை பின்பற்றியது போதுமடா சாமி. மாற்றம் அவசியம் வேண்டும்.

அன்புடன்
HN

HN சொன்னது…

ஈழத்தமிழர்களும் பால்ஊற்றுவது பூமாலைபோடுவது போன்ற வேலைகளை வெளிநாடுகளில் செய்துவருகிறார்கள். கதாநாயகன் வரும்பொழுது திரைஅரங்கத்தில் ஊதுபத்தி காட்டி வரவேற்கப்பட்டதால் அத்திரையரங்கம் தொடர்ந்தும் வாடகைக்கு எடுக்கமுடியாது ஆகிவிட்டது டென்மார்க்கில்.

ஜோ/Joe சொன்னது…

இந்த பதிவு நல்லதொரு விவாதத்தை தூண்டி விட்டிருப்பதில் மகிழ்ச்சி .அதே நேரத்தில் இங்கு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களிலிருந்து நானும் மாறுபடவில்லை .நான் சொல்ல வருவதெல்லாம் ‘ரசிகர்’ என்பவன் மன்றத்தில் சேர்ந்து மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்பதே . நண்பர்கள் சுட்டிக்காட்டிய அதீத நடவடிக்கைகள் ‘ரசிகன்’ என்ற சொல்லையே வெட்கத்துக்குரியதாக மாற்றி விட்டதன் ஆதங்கமே இந்த பதிவு ..இத்தகைய நடவடிக்கைகள் எதுவுமில்லாத நான் என்னை ‘சிவாஜி ரசிகன்’ அல்லது ‘கமல் ரசிகன்’ என சொல்லிக்கொண்டால் அதை கீழ்நிலையாக பார்க்கும் சூழ்நிலைக்கும் இந்த பதம் கெடுக்கப்பட்டு விட்டதே என்பது தான் என் ஆதங்கம்

ஜோ/Joe சொன்னது…

// ஆனால் ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருந்து அவனது கலையை ரசிப்பவராக இருப்பதோடு மட்டும் இல்லாமல் என் தலைவர் செத்துவிட்டார் என்று தீக்குளித்து இறந்து போனவர்களை பற்றி அறிந்திருக்கின்றோம் .//
இத்தகையோரை ‘ரசிகர்’ என்று சொல்வதை விட ‘அடிமுட்டாள்’ என்றே சொல்ல வேண்டும்

ஜோ/Joe சொன்னது…

//நீங்கள் ரசிகராக இருங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. 'வெறியர்களாக' இருக்க வேண்டாம் என்றுதானே சொல்கிறோம். //
‘ரசிகன்’ என்றாலே ‘வெறியன்’ என்று அர்த்தப்படுத்த வேண்டாம் என்று தானே சொல்லியிருக்கிறேன் நண்பரே.

Venugopal, Thanjavur. சொன்னது…

சார், உங்க கருத்துக்கள் எல்லாமே ரொம்ப அவசியமான சீர்திருத்தக் கருத்துக்கள்தான், ஆனா இத நீங்க தமிழ்நாட்டில வந்து சொல்ல முடியுமா? நிலைமை அப்படியா இருக்கு? ஒவ்வொரு 'சுவத்திலையும்' பாருங்க "உடல் மண்ணுக்கு உயிர் ......க்கு" என்று எழுதப் பட்டுள்ளதை. தலிவர் படத்த நூறு தடவைக்கு மேல பார்த்தவங்க உங்க ஊருலயே எத்தினி பேரு இருப்பாங்க. இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடித்த படங்கள் ஏதாவது தியேட்டர்ல அடிதடி, கத்திக்குத்து இல்லாம ஓடியிருக்கா?. நீங்க எழுதுன கட்டுரை ஏற்கனவே அறிவாளிகளா இருக்குறவங்க சிந்திக்கக் கூடிய வாய்ப்பு மட்டுமே. நம்ம ஊர்ல இருக்கிற வீணாப் போனவங்கள திருத்த நூறு பெரியாரு வந்தாலும் முடியாதுங்க.

vinothiny pathmanathan dk சொன்னது…

உண்மை தான் ஜோ .உங்களின் இந்த கட்டுரை ஒரு நல்ல திசையை நோக்கி திரும்பியிருக்கிறது . இன்றைய நம் தமிழ் மக்கள் இப்படிப்பட்ட கட்டுரைகள் மூலம் ஒருவராவது திருந்தினால் அது ஒரு வெற்றி தான் .நன்றி உங்கள் பதிலுக்கு

கருத்துரையிடுக