
ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
தனது வாழ்வில் தான் ஆர்வத்தின் காரணமாக பயணிக்க நினைத்த 'பல்மாரியாத் தீவு' இன்னமும் கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே இருந்துகொண்டிருந்தது. அவனது தாய்மண்ணாகிய 'ஜெனோவாக் கடற்கரைப் பிரதேசம்' அவனது கண்ணைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தது. இப்போது அவன் தன்னைக் காப்பாற்றிய மீனவர்களின் தாயகமாகிய 'மொனாக்கோ' நாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறான் என்பதனை அந்த அப்பாவிச் சிறுவன் அறியவில்லை.அங்கு மீனவர்களின் மீன் வியாபாரம் சிறிது நேரத்திற்கு மும்முரமாக நடைபெற்றது. இறுதியில் மீனவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர், இருள் முற்றாகக் கவிந்து முழு இரவும் ஆரம்பித்து விட்டது. சிறுவன் கொலம்பஸ் பயத்துடனும், கவலையுடனும் அங்கு நடைபெறும் சம்பவங்களை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இறுதியில் அம்மீனவர் தலைவன் கொலம்பஸ்ஸை நோக்கி வந்தான். தன்னை நோக்கி வரும் அந்த 'மீனவர் தலைவன்' எனும் ராட்சத உருவமுடைய மனிதனை கொலம்பஸ் மறுபடியும் அவ நம்பிக்கையுடனும், மிரட்சியுடனும் நோக்கினான். இடி போன்ற குரலில் பிரெஞ்சு மொழியில் மீனவர் தலைவனானவன் "எழுந்து, என்னோடு என் வீட்டிற்கு வா" என்று கூறியதைக் கேட்ட கொலம்பஸ் அவன் கூறியது என்ன என்று புரியாவிட்டாலும், அவன் சைகை காட்டியபடியே எழுந்து, அந்தப் 'பருத்த உருவம்கொண்ட' மனிதனுடன் நடந்தான்.
மீனவர் தலைவனின் வீட்டில், கொலம்பஸ் மிகவும் அன்பாக வரவேற்கப் பட்டான். மீனவர் தலைவனின் மனைவியும் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் புதிய விருந்தாளியை ஆச்சரியத்துடனும், அதே வேளையில் உவகையுடனும் நோக்கினர். மீனவர் தலைவன் சொற்ப நேரத்துக்குள்ளேயே கொலம்பஸ் பற்றி முழுத் தகவலையும் தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக் கூறினான். தலைவனின் மனைவி கொலம்பஸ்ஸின் மீது மிகுந்த இரக்கம் கொண்டாள். அவன் உடுத்தியிருந்த மிகப்பெரிய உடையை மாற்றித் தன் பிள்ளைகளின் உடைகளில் ஒன்றை அவனுக்கு அணியக் கொடுத்தாள். அவனுக்குச் சூடான பானமொன்றைக் குடிக்கக் கொடுத்தாள். சொற்ப நேரத்திற்குள்ளேயே அக்குடும்பம் இரவு உணவைச் சேர்ந்து உண்டது. கொலம்பஸ் தன் வாழ்நாளில் பார்த்தறியாத உணவு வகைகள் அக்குடும்பத்தினால் அவனுக்கு வழங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பிஞ்சு உள்ளம் தன் தாயையும் சகோதர்களையும் நினைத்து ஏங்கியதால் அந்த 'அறுசுவை உணவை' உண்ண முடியவில்லை. ஆனாலும் கடல்பயணம் தந்த களைப்பு, குளிர் தந்த உடற்தளர்ச்சி போன்றவை அவனை இரவின் மடியில், அக்குடும்பத்தின் அரவணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக