வியாழன், டிசம்பர் 23, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 10

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
தலைவனின் மனைவி கொலம்பஸ்ஸின் மீது மிகுந்த இரக்கம் கொண்டாள். அவன் உடுத்தியிருந்த மிகப்பெரிய உடையை மாற்றித் தன் பிள்ளைகளின் உடைகளில் ஒன்றை அவனுக்கு அணியக் கொடுத்தாள். அவனுக்குச் சூடான பானமொன்றைக் குடிக்கக் கொடுத்தாள். சொற்ப நேரத்திற்குள்ளேயே அக்குடும்பம் இரவு உணவைச் சேர்ந்து உண்டது. கொலம்பஸ் தன் வாழ்நாளில் பார்த்தறியாத உணவு வகைகள் அக்குடும்பத்தினால் அவனுக்கு வழங்கப் பட்டது. இருப்பினும் அந்தப் பிஞ்சு உள்ளம் தன் தாயையும் சகோதர்களையும் நினைத்து ஏங்கியதால் அந்த 'அறுசுவை உணவை' உண்ண முடியவில்லை. ஆனாலும் கடல்பயணம் தந்த களைப்பு, குளிர் தந்த உடற்தளர்ச்சி போன்றவை அவனை இரவின் மடியில், அக்குடும்பத்தின் அரவணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.அடுத்த நாட் காலையில் அவன் கண்விழித்தபோது, தனக்கருகில் தன் பெற்றோர்களோ, உடன்பிறப்புகளோ இல்லாததைக் கண்டும், தான் முன்பின் தெரியாத ஓரிடத்தில் படுத்திருப்பதைக் கண்டும் அதிர்ச்சியுற்ற கொலம்பஸ் மீண்டும் அழத்தொடங்கினான். அழுகின்ற அவனை மீனவர் தலைவனின் மனைவி அணைத்து ஆறுதல் கூறினாள். இவ்வாறு தம்மைவிட வயதில் மூத்த ஒரு 'அந்நியச் சிறுவன்' தமது தாயாரால் தேற்றப்படுவது கண்டு, மீனவர் தலைவனின் பிள்ளைகள் சிரித்தனர். கொலம்பஸ்ஸின் நிலையோ அவன் எதன் காரணமாக தமது தமது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளான் என்பதோ, அவன் ஏன் அழுகிறான் என்பதோ அவர்கள் அறியாத விடயங்கள். அழுத சிறுவனைத் தேற்றிய அந்தத் தாய், அவனைக் காலைக் கடன்களை நிறைவேற்றுமாறு சைகையால் தெரிவித்தாள். அதனைப் புரிந்துகொண்ட கொலம்பசும் அவள் கூறியதுபடியே செய்தான். அதன்பின் அந்தக் குடும்பத்தோடு சேர்ந்து காலையுணவை உண்டான்.

காலையுணவின் பின்னர் தலைவனின் சொற்படி அவன் அவ்வீட்டிலிருந்து புறப்படவேண்டிய வேளை வந்தது. கொலம்பசும் அந்த மீனவர் தலைவன் கூறியவற்றை ஓரளவிற்கு புரிந்து கொண்டவனாக, புறப்படத் தயாரானான். தன்னைத் தனது பிள்ளைகளில் ஒன்றாகக் கருதிப் பராமரித்த அந்தத் தாயிடமிருந்தும், அவனை 'ஒரு வேற்றுக் கிரக வாசி போல' எண்ணி, அருகில் வரக்கூடப் பயந்த, மீனவர்தலைவனின் பிள்ளைகளிடமிருந்தும் விடைபெறவேண்டிய அந்தக் கட்டத்தில் அவர்களிடம் அவன் தன் 'நன்றியறிதலை' தெரிவிக்க நினைத்தான். இருப்பினும் 'மொழி' அதற்குத் தடையாக இருந்ததே! ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒரு தடவை 'நன்றிப் பெருக்கோடு' பார்த்துக் கொண்டான். அந்தப் பார்வை 'ஓராயிரம் வார்த்தைகளை' அவர்களோடு பேசியது.


மீனவர் தலைவனும், அந்தச் சிறுவனும் கடற்கரையிலிருந்த அந்தச் சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்றபோது, அங்கு ஏராளமான மீனவர்கள் கூடியிருந்தனர். அவர்களில் கொலம்பஸ் நேற்றைய தினம் சந்தித்த, மீனவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் அவனைக் கழிவிரக்கத்துடனும், புன்னகையுடனும் நோக்கினர். இவனும் பண்பு கருதி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மீனவர்கள் அனைவரும் சத்தமாக, தமது தலைவனுடன் 'பிரெஞ்சு' மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டனர். அவர்கள் தன்னைப்பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அச்சிறுவன் அறியவில்லை. இருப்பினும் அவன், அவர்களது பேச்சின் இடையிடையே தனது தாயகத்தின் பெயராகிய 'ஜெனோவா' என்ற பெயர் உச்சரிக்கப் பட்டதையும் அவன் அவதானிக்கத் தவறவில்லை.


அங்கு துறைமுகத்தில் நின்றிருந்த, அவர்கள் நேற்றைய தினம் பயணம் செய்த மிகப்பெரிய படகில் ஏறுமாறு மீனவர் தலைவன் கட்டளையிட்டான். மீனவர்களோடு சேர்ந்து கொலம்பஸ்சும் ஏறினான். அப்போது அங்கு வந்த ஒரு புதிய மீனவன் இவர்களோடு சேர்ந்து கொண்டான். அப்படகிலிருந்த அத்தனை மீனவர்களையும்விட, அம்மீனவனை கொலம்பஸ்சிற்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவன் மட்டுமே கொலம்பஸ்ஸின் 'இத்தாலிய' மொழியைப் பேசினான். இது கொலம்பஸிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொலம்பஸ்சிற்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட அவன் மெதுவாக கொலம்பஸ்ஸின் தலையைத் தடவியபடியே ஆரம்பித்தான். "உன் பெயர் என்ன? நாங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியுமா? அவனது முதலாவது கேள்விக்கு மெல்லிய குரலில் "கிறிஸ்தோபர் கொலம்பஸ்" என்று பதிலளித்தவன் இரண்டாவது கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.    
(தொடரும்)
   உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

selva denmark சொன்னது…

verry good.

கருத்துரையிடுக