வெள்ளி, டிசம்பர் 03, 2010

மண்ணும், மரமும், மனிதனும்.- அத்தியாயம் 6

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
நான் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது போலவே, எமது கொடை வள்ளல்களில் ஒருவனான பாரி மன்னன் முல்லைக் கொடிக்காகத் தனது தேரைக் கொடுத்த செயலுக்கு எமது வாசகர் பக்கமிருந்து எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியிருந்தன. அதில் ஒரு வாசகர் பின்வருமாறு தனது கருத்தைத் தெரிவித்திருந்தார், "மன்னன் தானமாகவும், தர்மமாகவும் அள்ளி வழங்கியதெல்லாம், பொதுமக்கள் சொத்துதானே? இதில் அவனது தர்மத்தை மெச்சுவதற்கு ஏதுமில்லை, அதைத்தானே இன்றைய அரசியல் வாதிகள் செய்கிறார்கள், ஒரேயொரு வேறுபாடு அரசியல்வாதிகள் தாம் அபகரித்த பொதுமக்கள் சொத்தை அள்ளி வழங்காமல், தமது சொத்தாக்குகிறார்கள்" என்று காரசாரமாகவே கருத்துரை வழங்கியிருந்தார். அவரது கருத்துக்கும் மதிப்பளிக்கின்ற அதேவேளை, மேற்படி விவாதத்திற்குள் நுழையும் எண்ணம் அடியேனுக்குச் சிறிதளவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இக்கட்டுரையை எழுதப் புகுந்ததன் நோக்கமே எமது மக்களில் பல்வேறு பிரிவினரும் மரம், செடி, கொடிகளை எவ்வாறு நேசித்தார்கள், இதற்குக் காரணம் தான் என்ன? என்று முடிந்தளவு ஆராய்வதேயாகும். எமது பாரிமன்னனுக்கு அடுத்தபடியாக செடி, கொடிகளையும் நேசித்த புகழ் வாய்ந்த மனிதர் யார்? என்ற கேள்விக்கு நூல்களில் விடை தேடினேன், அடுத்ததாக எனது பார்வையில் பட்ட பெயர் ஒரு இந்து மதத் துறவியின் பெயராகும். அவர் வேறு யாருமல்ல கடந்த 18 ஆம் நூற்றாண்டில் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்த 'வடலூர்
இராமலிங்க வள்ளலார்
இராமலிங்க வள்ளலார்' ஆவார். இன்று தமிழ்நாட்டில் 'வடலூர்' என்ற நகரத்தின் பெயரை எவர் உச்சரித்தாலும் உடனடியாக, அவர்தம் நினைவில் வருவது 'ராமலிங்க வள்ளலாரின்' பெயரும், அவரது பெருமையுமே. இந்து மக்களின் மனங்களில் நிறைந்து நிற்கின்ற இந்தத் துறவி, அனைத்து உயிர்களையும், நேசிக்கக் கற்றுக் கொடுத்ததோடல்லாமல், மரம், செடி, கொடிகளையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்.
அவர் வாழ்ந்து மறைந்தது 18 ஆம் நூற்றாண்டாக இருப்பினும் அவர் உதிர்த்த வாசகமாகிய "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வாசகம் உலகப் புகழ் வாய்ந்தது. இவர் மரம், செடி, கொடிகளையும் நேசிக்கும்படி மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது இக்காலத்தவர்களுக்கு வேண்டுமானால், வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அவரது அர்த்தம் பொதிந்த சொற்களுக்கு அந்நாளில் மிகவும் மதிப்பு இருந்தது.

அசோகச் சக்கரவர்த்தி
இந்தத் துறவியைப் போல் என் நினைவுக்கு வரும் இன்னொருவர் இந்தியாவின் புகழை உலகம் அறியச் செய்த அசோகச் சக்கரவர்த்தியாவார். அவர் உதிர்த்த வாசகம் இதுதான் "நீங்கள் இந்த நாட்டிற்குச் செய்யும் கைமாறு, உங்களால் முடிந்த அளவு மரங்களை நடுவதுதான்" இதை அவர் மன்னன் என்ற ஸ்தானத்தில் இருந்து கூறியதால், கோடிக்கணக்கான மக்கள் அவரது வார்த்தையைப் பின்பற்றினார்கள். இதேபோல் இலங்கையிலும் ஒரு மன்னன் வரலாற்றுப் புகழ்மிக்க வாசகத்தை உதிர்த்தான்.
(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் எதிர்பார்க்கப் படுகின்றன.

3 கருத்துகள்:

சே.ஜெ சொன்னது…

கட்டுரை நன்றாக இருக்கிறது. கட்டுரையின் எடுத்துக்காடுகள், உதாரணங்களை நாம் அவ்வாறே எடுத்துக்கொள்வோம். சம்பவங்களின் பின் புலத்தை ஆராய ஆரம்பித்தால் கட்டுரையின் பிரதான நோக்கம் பிறழ்வுறலாம் என்ற தங்களின் ஆதங்கம் நியாயமானதே. அதைப் பற்றி வேறு ஒரு கட்டுறையில் ஆராய்ந்து எழுதினால் வரவேற்கத்தக்கது. மேலும் சிறிய ஆலோசனை, நீங்கள் தொடராக எழுதி வரும் கட்டுரைகளில், அதற்கு முந்திய அக் கட்டுரையின் அத்தியாயத்தை இணைப்பாக வழங்குங்கள். அவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியது இல்லை என்று எண்ணுகிறேன். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

ஆசிரியர், அந்திமாலை சொன்னது…

வாசகர் சே.ஜே. யின் கருத்துக்களுக்கு நன்றி. நாங்கள் ஏதாவதொரு ஆக்கத்தை நீண்ட கால இடைவெளியின் பின் வெளியிடும்போது, அதற்கு முந்திய அத்தியாயத்தையும் தருவதற்குக் காரணம் வாசகர்கள் குழப்பமடையக் கூடாதே என்பதற்காகவே. மேலும் முந்திய அத்தியாயத்தைக் காப்பகத்திலிருந்து எடுத்தே, வழங்குகிறோம். இதனால் எமக்குச் சிரமங்கள் ஏதுமில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்
ஆசிரியர்.

சே.ஜெ சொன்னது…

நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.

கருத்துரையிடுக