புதன், டிசம்பர் 29, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 13



ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்

தமிழ் வகுப்பில்கூட ஔவையார் பாடல்களில் ஒரு பாடல் படித்ததாக ஞாபகத்திலுள்ளது" என்றேன்.
அது என்ன பாடல்? என்றார் ஆவலுடன், எனக்கு நினைவில் நின்ற படலை அவரிடம் ஒப்புவித்தேன்:
வரகரிசிச் சோறும்,வழுதுணங் காய் வாட்டும்(கத்தரிக்காய்ப் பொரியலும்) 
முரமுர வெனவே புளித்த தயிரும், 
புல்வேளூர்ப்  பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
  எல்லா உலகும் பெறும்."
என்று முடியும் அப்பாடல். இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது" என்றேன்.

"நல்லது, பாடல் எந்தச் சந்தர்ப்பத்தில், எதைப்பற்றிப் பாடப்பட்டது"? என்று ஞாபகமிருக்கிறதா? என்று புதிய கேள்விக்கணையை என்னை நோக்கி வீசினார்.
"எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, அதாவது பாட்டி ஒருநாள் பசியால் வாடிய நிலையில், 'புல்வேளூர்' என்ற ஊருக்கு வருகிறார், அவ்வூரில் பாட்டிக்கு உணவளிக்கக்கூடிய வசதிபடைத்த எத்தனையோ மனிதர்கள்(பணக்காரர்கள்) வசித்தபோதும், பாட்டி அவர்களிடம் உணவுகேட்டு 'யாசிப்பதற்கு' அவர்களது இல்லம் செல்லாமல், ஏழையான, ஆனால் பாட்டியின் மனதுக்குப் பிடித்த மனிதனாகிய 'பூதன்' என்பவனுடைய வீட்டிற்கு செல்கிறார், மிகப்பெரிய 'தமிழ்ப்புலவர்' தன் வீட்டிற்கு உணவு கேட்டு வந்ததை எண்ணி, ஒருபுறம் பெருமையும், அகமகிழ்வும், எய்தும் 'பூதன்' தன் வீட்டில் பாட்டிக்கு அளிப்பதற்கு உகந்த 'அறுசுவை' உணவு இல்லையே என்று 'சிந்தை கலங்கி' நின்றான், இருப்பினும் தன்னிடமுள்ள வரகரிசிச் சோற்றையும்,(அக்காலத்திலும் இக்காலத்திலும் வரகரிசிச் சோறு ஏழைகளின் உணவு) கத்தரிக்காயில் செய்த பொரியலையும், தயிரையும் பாட்டிக்குக் கொடுத்தான்"
இடையில் குறுக்கிட்ட பழனிச்சாமி கூறினார் "நீங்கள் கூறுவது எல்லாமே சரி, ஆனால் ஒரு சிறு திருத்தம்" என்றார்.
என்ன? என்பதைப்போல் அவரைக் கேள்வியுடன் நோக்கினேன், அவர் சொன்னார் "நீங்கள் 'தயிர்' என்று ஞாபகம் வைத்துள்ளீர்கள், ஆனால் பாட்டிக்குப் பூதனின் இல்லத்தில் கிடைத்தது தயிர் அல்ல மோர்" என்றார். அப்படியா? என்றேன் ஆச்சரியத்துடன். "இத்தனை வருடங்களாக 'தயிர்' என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன், அப்படியானால் தயிரும் அக்காலத்தில் ஏழைகளின் கைகளுக்குக் கிடைக்காத பொருளா? என்றேன்.
அவர் தொடர்ந்தார், "அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் 'தயிர்' பணக்காரர்களின் உணவுதான், ஏழைகளின் கைகளில் 'மலிவாகக்' கிடைப்பது மோர்தான்" என்றவர் "சரி நீங்கள் கூறிய பாட்டியின் கதையைத் தொடருங்கள் என்றார்".
மோர்
"பசியால் வாடியிருந்த ஒளவைப் பாட்டிக்கோ, வரகரிசிச் சோறும், கத்தரிக்காய்ப் பொரியலும், மோரும் 'தேவாமிர்தமாக' இருந்தது, இத்தகைய உணவுக்கு இணையான ஓர் உணவு எவ்வுலகிலும் கிடைக்காது, இந்த உணவுக்கு கைமாறாக ஈரேழு உலகத்தையும் எழுதித் தரலாம், என்ற பொருள்பட,
புல்வேளூர்ப் பூதன் புகழ்பரிந்திட்ட சோறு,
எல்லா உலகும் பெறும்  
என்று பாடினார், பாட்டிக்கு உணவளித்ததன்மூலம், 'புல்வேளூர்ப் பூதன்' என்ற அந்தக் குடியானவன், பாட்டியின் பாட்டில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இறவாப் புகழ் பெறுகிறான். ஒளவைப் பாட்டியின் பெயர் உள்ளவரைக்கும் தமிழுலகில் 'அம்மனிதனும்' வாழ்வான்". என்றேன் பெருமிதத்தோடு.
அவரும் சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்வது மெத்தச் சரி, அது மட்டுமன்றி, அவன் பாட்டிக்கு அளித்த உணவுமல்லவா தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது, என்று புதியதொரு பீடிகையைப் போட்டார்.
"என்ன சொல்கிறீர்கள்?  குழப்பத்துடன் கேட்டேன்.
'மோர்க் குழம்பைத்தான்' குறிப்பிடுகிறேன் என்றார்........

(தொடரும்) 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக