வெள்ளி, ஜூன் 24, 2011

தாரமும் குருவும் - பகுதி 4.2

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 4.2


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
மண்டைதீவில் ஒரு 'தேவதை' போன்ற ஆசிரியையிடம் மூன்று நாட்களும், செல்லி அக்காவிடம் மூன்று நாட்களும் என மொத்தம் ஆறே ஆறு நாட்கள் மட்டுமே மண்டைதீவுக் கிராமத்தில் எனது பாலர் பள்ளிப் படிப்பு மிகவும் குறுகியதாக இருந்தது என்ற விடயத்தை உங்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போது அல்லைப்பிட்டியில் ஒழுங்கான பாலர் பள்ளியில் ஒழுங்கான படிப்பு ஆரம்பமாகியிருந்தது. இங்கேயும் எங்கள் அம்மம்மா வீட்டிலிருந்து பாலர் பாடசாலை சுமார் இரண்டு கிலோ மீட்டர்கள் தூரத்தில்தான் இருந்தது. ஆனாலும் பள்ளிக்குச் செல்வதில் எனக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. காரணம் எங்கள் அம்மம்மா வீட்டிலிருந்து பாலர் பள்ளி ஆசிரியையின் வீடு ஒரு முக்கால் கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தது. சரியாக எட்டு மணிக்கெல்லாம் டீச்சரின் வீட்டு வாசலில் நின்றால் டீச்சர் என்னையும் அழைத்துக் கொண்டு சுமாராக ஒன்றரைக் கிலோமீட்டர்  தூரத்தில் இருக்கும் பாலர் பாடசாலைக்கு அழைத்துச் செல்வார்.
இவ்வாறு என்னை ஒவ்வொரு நாளும் பாலர் பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று எனது பேத்தியார் டீச்சரின் தாயாரிடமும், டீச்சரிடமும் 'ஒப்பந்தம்' ஒன்றைச் செய்திருந்தார். இயல்பிலேயே நல்ல குணம் படைத்த ஆசிரியையும், அவரது பெற்றோரும் இதற்குச் சம்மதித்திருந்தனர்.
அக்காலப் பகுதியில் அல்லைப்பிட்டியில் வாழ்ந்த மொத்தம் நானூறு குடும்பங்களிற்கும் சேர்த்து ஒரேயொரு பாலர் பாடசாலை மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் ஆங்காங்கே 'செல்லி அக்காவைப்போல்' தத்தமது வீடுகளில் வைத்து பல 'செல்லி அக்காக்கள்' வருமானத்திற்காகப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். இந்தச் சின்னஞ்சிறிய கிராமம் நிர்வாக வசதிக்காக(முகவரி வசதிக்காக) மூன்று வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. 'வட்டாரம்'(Ward) என்றால் என்ன என்பதை கிராமங்களுடன் தொடர்புள்ள உங்களில் பலர் அறிவீர்கள். வன்னியில் இந்த அலகு முறையை யூனிட்(Unit) என்றும், தமிழ்நாட்டில் அந்த ஆங்கில வார்த்தையை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே 'வார்டு' எனவும் அழைக்கின்றனர். ஒரு கிராமம் எத்தனை வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது என்பதை வைத்து அந்தக் கிராமம் சிறிய கிராமமா? பெரிய கிராமமா என்பதைக்
கண்டுபிடிக்கலாம் என்பது எனது கணிப்பீடாகும். அல்லைப்பிட்டி மொத்தம் மூன்று வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதிலிருந்து அல்லைப்பிட்டி எத்துணை சிறிய கிராமம் என்பதையும், 'மண்டைதீவு' எட்டு வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதை வைத்து மண்டைதீவுக் கிராமம் அல்லைப்பிட்டியை விடவும் எத்துணை பெரியது என்றும், தீவுப் பகுதியில் உள்ள மற்றொரு கிராமமாகிய 'புங்குடுதீவு' 12 வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதிலிருந்து அக்கிராமத்தின் பெரிய நிலப் பரப்பையும், இலங்கையின் தீவுகளிலேயே மிகப் பெரிய தீவாகிய 'நெடுந்தீவு' இருபது வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதை வைத்து நெடுந்தீவின் மிகப்பெரிய நிலப் பரப்பையும் உங்களால் ஊகிக்க முடியும் என்று நம்புகிறேன்.

முன்னொரு காலத்தில் 'அல்லைப்பிட்டிக்' கிராமத்தின் வசம் நான்கு வட்டாரங்களும், மிகப்பெரிய நிலப் பரப்பும் இருந்ததாகவும், ஒரு ஆட்சி மாற்றத்தின் போது, அல்லைப்பிட்டிக் கிராமம் தனது நான்காவது வட்டாரத்தின்  சிறிய நிலப் பரப்பையும், சிறிய தொகையில் மக்களையும் தனது அயல் கிராமமாகிய 'மண்கும்பான்' எனும் கிராமத்திடம் ஒப்படைக்க வேண்டிய 'நிர்ப்பந்தம்' ஏற்பட்டது என்றும் 'அல்லைப்பிட்டியின் வரலாறு' கூறுகிறது. அவ்வாறு ஒப்படைக்கப் பட்ட பகுதி தற்போது 'மண்கும்பான் முதலாம் வட்டாரம் அல்லது கிழக்கு மண்கும்பான்' என அழைக்கப் படுகிறது எனவும் இரண்டு கிராம சபைகளுக்கும் இடையில் இந்த எல்லைப் பிரச்சனை இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை போலப் பல வருடங்கள் நீடித்திருந்தது எனவும்  'அல்லையூரின்' வயதில் மூத்த 'தலைமுறையைச் சேர்ந்த' ஒருவர் என்னிடம் ஒரு இருபது வருடங்களுக்கு முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இனிவரும் அத்தியாயங்களில் முதலாம் வட்டாரம் என்றோ மூன்றாம் வட்டாரம் என்றோ நான் குறிப்பிடும் பட்சத்தில் இவற்றுக்கிடையிலான தூரங்களை உங்களால் ஊகிக்க முடியும் என்று நம்புகிறேன். நானும் டீச்சரும் வசித்து வந்தது இரண்டாம் வட்டாரம் ஆகும். பாலர் பாடசாலை அமைந்திருந்தது மூன்றாம் வட்டாரத்தில் ஆகும். ஒவ்வொரு நாளும் எனக்குத் துணையாக டீச்சரும், டீச்சருக்குத் துணையாக நானும் பாடசாலைக்குச் சென்று வந்தோம். இந்த அல்லைப்பிட்டியைப் பற்றியும், புதிய பாலர் பாடசாலையில் எனது படிப்பு ஆரம்பமானதைப் பற்றியும் உங்களிடம் கூறிய நான் இந்த டீச்சரைப் பற்றியோ, அவரது பெயர் என்னவென்றோ கூறாததற்கும் காரணம் இருக்கிறது.

(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன 

4 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

ஒவ்வொரு தீவுகளிலும் இத்தனை வட்டாரங்களா?அதுவும் நெடுந்தீவு 20 வட்டார பிரிவுகளாக உள்ளதை அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன் .நான் எதோ நயினாதீவு கூட ஒரு சிறிய தீவு என்று தான் எண்ணியிருந்தேன் . ஆனால் அண்மையில் நயினாதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த ஒருவரின் மரண அறிவித்தல் வாசித்தேன் .அப்படியானால் நயினாதீவு எத்தனை வட்டாரமாக பிரிக்கப்பட்டுள்ளது?.கண்டிப்பாக நீங்கள் அதுபற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் .அதை அறிய ஆவலாக இருக்கிறேன் .மிகவும் ஆக்கபூர்வமான பயனுள்ள தகவல்கள் . நன்றி லிங்கதாசன்

இ.சொ.லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

சகோதரியின் கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி. நீங்கள் கூறியது போலவே நயினைதீவு(நயினாதீவு) ஏழு வட்டாரங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் ஆச்சரியப் படத்தக்க விடயம் என்னவென்றால் 7.56 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட 'மண்டைதீவு' எட்டு வட்டாரங்களாகவும், 4.22 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட நயினாதீவு ஏழு வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளமையே. என்ன காரணத்துக்காக ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று தெரியவில்லை. 1976 ஆம் ஆண்டில் நயினைதீவின் சனத்தொகை 4750 பேர், தற்போது (2011) நயினைதீவின் சனத்தொகை சுமார் 2500 பேர் என்பது உங்களுக்கான மேலதிக தகவல்.

seelan சொன்னது…

very good to anthimaalai do you best

vinothiny pathmanathan dk சொன்னது…

தகவலுக்கு நன்றி . போகிற போக்கைப் பார்த்தால் நயினைதீவு தமிழர்களின் அடையாளத்தை இழந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது .ஏனெனில் சென்ற வருடம் நான் அங்கு சென்ற போது மிகப்பெருமளவினாலான பௌத்த மக்கள் அங்கு வந்து செல்வதைக் காணக் கூடியதாக இருந்தது .நம்மவரின் சனத்தொகை வீதம் குறைவடைந்து வரும்போது பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கான வாய்ப்பு அங்கே தென்படுகிறது .சைவசமயத்தின் புனித பூமியாக கருதப்படும் நம் நயினைமண்ணில் நம்மவர் எண்ணிக்கை குறைந்து வருவது உண்மையிலேயே வேதனைக்குரியது

கருத்துரையிடுக