வியாழன், மார்ச் 31, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 2.2


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

"அவன் உன்னை பிறாண்டுவதற்கு, நீ என்ன செய்தாய்? இது எனது தாயாரின் விசாரணையில் பிறந்த முதலாவது கேள்வி. நான் என்ன சொல்ல முடியும்? 'திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல' நெளிந்தேன். எனது பதிலும் ஒழுங்கில்லாமல் "அவன் என்ர சிலேட்டு, தலைமுடியப் பிடிச்ச...நான் அவனுக்கு அடிச்சு" என ஏதேதோ உளறினேன். 'உலகிலேயே அதி புத்திசாலியான'??? என் அண்ணன் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் "அம்மா! சுதன், தம்பியின் சிலேட்டைப் பறிச்சு உடைக்கப் பார்த்தான், தம்பி அவனத் தள்ளி விட்டான், அதுதான் சுதன், தம்பிய பிறாண்டினவன்" இது எனது  அண்ணனின் சாட்சியம். அம்மாவுக்கு ஒன்று புரிந்திருக்க வேண்டும். 'தன்னுடைய பிள்ளையிலும்' எதோ தவறு என்று. உடனடியாக எனக்கு முதுகில் இரண்டு உறைக்கும்படியான 'கைவிசேடம்'(*அடிகள்) வழங்கப் பட்டது. இதை நானும் அண்ணாவும் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். நான் அடியின் அகோரம் தாங்க முடியாமல் 'குய்யோ, முறையோ' என்று அழுதேன். முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்த அண்ணனைக் காட்டிக் கொடுக்க மனம் விரும்பியது, ஆனால் அவ்வாறு செய்தல் பிரச்சினையை இன்னும் தீவிரப் படுத்தும். அது மாத்திரமின்றி வீட்டில் அம்மா,அப்பா யாருமில்லாத சமயம், அல்லது நாளை நாங்கள் பள்ளிக்குச் செல்லும் சமயம் என் அண்ணனால் நான் 'பழி வாங்கப் படலாம்'
கருக்கு மட்டை கீறிய வலி ஒரு பக்கமும்,அம்மா அடித்த அடி முதுகில் 'சுரீர்' என்று உறைத்தது.
பொழுது சாயும் நேரம் வீட்டிற்கு வந்த அப்பாவிடம், என் அண்ணன் முதல் வேலையாக தான் தயாரித்து வைத்திருந்த 'குறுந்திரைப்படத்தை(*தம்பிக்கு எதனால் காயம் ஏற்பட்டதென்பதை) போட்டுக் காண்பித்தான். அவ்வளவுதான் என் தந்தையார் பொங்கி எழ ஆரம்பித்தார். "என்ன கண்டறியாத புள்ள வளக்கினம்(*இது என்ன பிள்ளை வளர்ப்பு?) முதல் முதலா பள்ளிக்குடம் போன பிள்ளைக்கு, முகத்திலயும்,உடம்பிலையும் பிறாண்டி வைச்சிருக்குதுகள்........." இத ஒருக்கா கேக்கத்தான் வேணும்" என்று சாரத்தை(*கைலியை) மடித்துக் கட்டிக்கொண்டு புறப்பட்டவரை அம்மா தடுத்தார். இதை இந்த இரவு நேரத்தில் போய் கேட்டால் அதன் 'விளைவுகள்' என்னவாகும் என்பதை என் தாயார் அறிவார். அது மட்டுமல்லாமல் மேற்படி நாங்கள் கூறிய அந்த 'சுதனின்' அப்பா,சித்தப்பா, மாமா எல்லோரும் வெட்டு,குத்து போன்றவற்றில் மிகவும் பிரபலமான, ஊரைக் கலக்கிய 'சண்டியர்கள்' அவர்களோடு பிரச்னைக்கு போனால் எங்கள் தந்தையார் 'வெட்டு' வாங்குவது உறுதி என்பதும் என் தாயார் அறிவார். இறுதியாக, தான் தடுக்கப்பட்டது என் தந்தையாருக்கு 'ஆற்றாமை' நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தக் கோபம் என் அம்மாவின் பக்கம் திரும்பியது. என் அம்மாவிற்கு எங்கள் 'திருகு தாளத்தினால்'(*பித்தலாட்டத்தினால்) இரண்டு மூன்று 'அடிகள்' கிடைத்தன.
இப்போது 'விசாரணைக் கமிஷன்' என் பக்கம் திரும்பியது "அவன் உடம்பு முழுக்க பிராண்டும்போது நீ கையக் கட்டிக் கொண்டு சும்மா நிண்டனியாடா?(*நின்றாயா) என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் 'பே பே' என்று முழித்தேன். இறுதியில் தப்பித்துக் கொள்ளும் நோக்கில் "ஓம்(*ஆம்) என்று பதிலளித்தேன். அவ்வளவுதான் எனக்கும் 'சடார் புடார்' என அடிகள் விழ ஆரம்பித்தன. வீட்டில் ஒரு மூலையில் எதுவுமே தெரியாததுபோல் 'கல்லுளி மங்கனாக' நின்று கொண்டிருந்த என் அண்ணனை 'எரித்து விடுவதைப் போல' பார்த்தேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

நிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.

1 கருத்து:

Sutha Denmark சொன்னது…

Well done

கருத்துரையிடுக