வெள்ளி, மார்ச் 25, 2011

மண்ணும்,மரமும், மனிதனும் அத்தியாயம் 17

சேர்.ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937)

சாதாரண ஒரு இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதனால் அக்காலத்திலிருந்த சூழ் நிலையில் ஒரு பட்டப் படிப்பையே இங்கிலாந்தில் படித்து முடிப்பதற்குப் பல போராட்டங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருந்த நிலையில், போஸ் அவர்களால் பல பட்டப் படிப்புகளை இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தல் எவ்வாறு சாத்தியமானது? "அறிவிற்கு இவ்வுலகம் அடிமையானது", "இவ்வுலகை அறிவுதான் ஆளுகிறது" ("knowledge is wealth", "Knowledge is power") எனும் ஆங்கிலப் பழமொழிகள்  இங்குதான் நினைவு கூரப் படுகிறது.
ஆம் நான் மேலே குறிப்பிட்டபடி ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'போஸ்' அவர்கள் இங்கிலாந்தில் பல பட்டப் படிப்புகளைப் படித்து முடிப்பதற்கு எங்கிருந்து 'பணம்' கிடைத்தது? அக்காலத்தில் ஒரு மனிதன் கல்வியைச் சுலபமாகக் கற்று முடிப்பதற்கு உதவுகின்ற எந்தவகையான 'வாய்ப்புகளும்' காணப்படவில்லை.பள்ளிகளோ, கல்லூரிகளோ,பல்கலைக் கழகங்களோ இலவசக் கல்வியை வழங்குவதில்லை. சமூக நல உதவித் திட்டங்களும் 'பிரித்தானிய ஆட்சிக் காலத்தில்'கிடையாது, 'புலமைப் பரிசில்'(Scholarship)திட்டம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இவ்வாறிருக்கையில் திரு.போஸ் அவர்கள் நான்கு வெவ்வேறு துறைகளில் படித்து, அதுவும் இங்கிலாந்துப் பல்கலைக் கழங்களில் படித்து பட்டம் பெறுவதற்கு எவ்வாறு உதவி கிடைத்தது?
இங்குதான் 'அறிவின் முன்னால்' ஆட்சியதிகாரம் கூட தலை வணங்குவதைக் காண முடிகிறது.இவரது அறிவாற்றலைக் கேள்வியுற்ற அக்காலத்து 'பிரித்தானிய ஆட்சியாளர்கள்' போஸ் அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளைத் தாமாகவே முன்வந்து வழங்கினர். இவர் கல்விகற்ற புனித சவேரியார் கல்லூரியின் அதிபர்கள்,ஆசிரியர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களாகவும், ஆங்கிலேயப் பாதிரியார்களாகவும் இருந்தனர். இவர்கள் திரு.போஸ் அவர்களிடம் உலகெங்கிலும் காண முடியாத ஒரு 'ஒப்பற்ற அறிவாற்றல்' காணப் படுவதைக் கண்டு கொண்டனர். இவர் மேற் கல்வியைக் கற்றால் அது பாரத நாட்டிற்கு மட்டுமன்றி பிரித்தானியாவிற்கும், ஏன் முழு உலகிற்குமே மதிப்பிடமுடியாத அரிய செல்வமாக மாறும் என உறுதிபட நம்பினர். இதனாலேயே 'திரு.போஸ்.அவர்களின் கல்விக்கு பேராதரவு நல்கி, அளப்பரிய உதவிகளும் புரிந்தனர்.

விஞ்ஞானி திரு.போஸ் அவர்களின் கண்டுபிடிப்புகள்
நான் ஏற்கனவே இத்தொடரின் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி,தொலைக்காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற்படுத்தப்படும் 'ராடார்' தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, 'மின்னியல்'கண்டுபிடிப்புகளை திரு.போஸ் அவர்களே கண்டு பிடித்தார்.ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டுபிடிப்புகளை 'ஏனைய விஞ்ஞானிகள்' போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன்படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார்.இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி 'மார்க்கோனி' அவர்களால் 'வானொலிப் பெட்டியையும்', கிரஹாம் பெல் அவர்களால் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது. 
சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் 'அழைப்பு மணி'கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் 'ஜோசப் ஹென்றி' என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற்பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை திரு.போஸ் அவர்களையே சாரும்.
அது மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது கண்டுபிடிப்புகளை ஏனையோர் தயாரிக்க முடியாத வகையில் அக்கண்டுபிடிப்புக்கு(பொருளுக்கு) காப்புரிமை(Patent right) பெறுவது வழக்கம். ஆனால் திரு போஸ் அவர்கள் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் கருதப் படுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு திரு.போஸ் அவர்களின் பதில்தான் என்ன? "நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் 'கோடி ரூபாய்கள்' கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்" எனக் கூறியவர்   
தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா? இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் "பொழைக்கத் தெரியாத புள்ள" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா? சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா? என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக