புதன், பிப்ரவரி 09, 2011

ஓர் அறிமுகம்

ஒரு விஞ்ஞானி - அத்தியாயம் 2
விஞ்ஞானி திரு.க.பொன்முடி 
ஏழாம் வகுப்பில் படிக்கும்போதே நூலகங்களில் அமர்ந்து மணித்தியாலக் கணக்கில் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுவதும் கூட ஊண், உறக்கத்தை மறந்து வாசித்துக் கொண்டேயிருப்பார். நூலகங்களிலும் இவர் அதிகமாகத் தேடித் தேடி வாசித்தது விண்வெளி தொடர்பான சஞ்சிகைகளாகிய 'மஞ்சரி', 'கலைக்கதிர்' போன்றவையாகும். அதன்பிறகு ஒரு நல்ல நண்பன்மூலம் 'பழைய புத்தகக் கடைகளில்' குறைந்த விலைக்கு, நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பழைய புத்தகக் கடைகளுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால் பள்ளியில், கல்லூரியில் பின் தங்கினார், பல பாடங்களில் தோல்வி. ஆனாலும் மனம் தளராது போராடினார். ஒரு வழியாக அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்தார்.
நல்ல மதிப்பெண்கள் இருந்தும் அரசாங்க வேலை கிடைக்காதோர் அதிகம் என்ற நிலையில் குறைந்த மதிப்பெண்களை வைத்து எவ்வாறு அரசு வேலைக்கு முயற்சிப்பது? ஆனாலும் அரசு வேலை கிடைத்தால் வாழ்விற்கு உறுதியை, வெற்றியை தரும் என்று நம்பி அரசு வேலைக்கு விண்ணப்பித்ததோடு, அரசு வேலைகளில் சேர்வதற்கான போட்டிப் பரீட்சைக்காக படிக்க ஆரம்பித்தார். இத்தேர்வில் வெற்றி பெற்றால் அரசுப்பணி உறுதி என்ற நிலையில், பள்ளி, கல்லூரிகளில் ஊக்கமாகப் படிக்காததற்கெல்லாம் சேர்த்துத் தன்னைக் கடுமையாகத் தயார் செய்தார், அதில் எளிதில் வெற்றியும் பெற்று சுகாதாரத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் அமர்ந்தார்.அரசுப் பணியில் இருந்ததால் மேலும் படிப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்க முடிந்தது.
அந்த நிலையில்தான் ஒருநாள் நண்பகல், தற்செயலாக சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. யில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, அருகே இருக்கும் ஒரு பழைய புத்தகக் கடையில் National Geographic என்ற சஞ்சிகை கண்ணில் பட்டது. வழக்கமாக ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு முன்பாக, அப்புத்தகத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்காக அப்புத்தகத்தை லேசாக ஒருதடவை புரட்டிவிடுவது அவரது வழக்கம்.
அவ்வாறே அப்புத்தகத்தையும் புரட்டியபோது அதில் அச்சிடப்பட்டிருந்த படமொன்று அவரது கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. அப்படத்தில் ஒரு மலையின் மேல் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் மண்வெட்டி போன்ற ஒரு கருவியின் மூலம் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
(தொடரும்)
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக