வெள்ளி, பிப்ரவரி 25, 2011

மண்ணும், மரமும், மனிதனும். அத்தியாயம் 15

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சரி இவ்வாறு நம் முன்னோர்களின் கருத்துப்படி உணர்வு குறைந்தோர், முற்றாகப் பண்பை இழந்தோர் மரமாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால், மரத்திற்கு 'உயிர்' உள்ளது, அதற்கு  'உணர்வு' கிடையாது என்ற எம்மவர்களின் கருத்தைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எம்மவர்கள் மரம், செடி, கொடிகளுக்கு உயிர் இருக்கிறது, ஆனால் அவற்றிற்கு 'உணர்வு' கிடையாது என்று கூறுகிறார்களே, இது உண்மையா?(சரியா?) என்ற கேள்விக்கு விடை தேடினேன். கிடைத்த விடையோ என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
முதலில் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, அது சுவாசிக்கிறது, கரியமில வாயுவை(carbon dioxide) உள்வாங்கிப் பிராண வாயுவை (oxygen) வெளியிடுகிறது, தனது இலைகளின் ஊடாக  ஒளிச்சேர்க்கையை(ஒளித்தொகுப்பு / Photosynthesis) நிகழ்த்தித் தனக்குத் தேவையான உணவைத் தயாரிக்கிறது. பெரும்பாலான தாவரங்களில் பூக்களின் ஊடாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது, அது தனக்கும், தன் சந்ததிக்கும் தயாரிக்கும் உணவில் ஒரு பகுதியை அல்லது பெரும்பகுதியை, மிருகங்களும், மனிதர்களும் பங்குபோட்டுக் கொள்கிறோம் என்பது போன்ற இன்னோரன்ன கருத்துக்கள் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி அத்தகைய ஆராய்ச்சிகளின் படிநிலை வளர்ச்சியில் அரும்பெரும் உண்மைகளையும் கண்டுபிடித்துள்ளார்கள் அதாவது மனிதர்களுக்கு இருப்பதுபோல் மரபணுக்கள்(genes) தாவரங்களுக்கும் உள்ளன. 
தாவரங்களின் மரபணுக்களை மாற்றியமைத்தால் நமக்கு நல்ல விளைச்சலைத் தரக்கூடிய  புதிய ஒரு சந்ததி(Kind) அல்லது இனம்(race) கிடைக்கும் என்ற உண்மைகளையும் அவர்கள் கண்டுபிடித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதை செயற்படுத்தியும் விட்டார்கள். நான் ஆசிய நாடுகளில் அல்லது இலங்கையில் ஒரு போதுமே பார்த்திராத மிகப்பெரிய பூசணிக்காய், மிகப்பெரிய கோவா(முட்டைக்கோஸ்), மிகப்பெரிய அவரைக்காய், வெள்ளரிக்காய், வத்தகைப் பழம் (watermelon/ தண்ணிப் பழம்) போன்றவற்றை ஐரோப்பியச் சந்தைகளில் பார்த்து வியந்திருக்கிறேன். எவ்வாறு இத்தகைய பெரிய காய்கறிகளை உருவாக்குகிறார்கள்? என்று சிந்தித்தபோதுதான் இந்த விஞ்ஞானிகளின் 'மரபணுக்களை மாற்றுதல்' என்ற சூத்திரம் (theory) தெரிய வந்தது. உண்மையில் நம் இலங்கையிலும், இந்தியாவிலும் இந்த 'மரபணுக்களை மாற்றுகின்ற' செயல்முறை அல்லது நுட்பம்(technique) ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே தோன்றி விட்டது என்ற உண்மை எனக்கு அண்மையில்தான்   தெரிய வந்தது, மட்டுமல்லாமல், வியப்பையும் தந்தது. நம்மூரில் செயற்படுத்தப்படும் 'ஒட்டு மாங்கன்று' செயற்திட்டம் முழுக்க முழுக்க

மரபணுக்களை மாற்றும் ஒரு செயல்முறைதானே?புளி மாமரத்தின் ஒரு கிளையையும், இனிப்பு மாமரத்தின் ஒரு கிளையையும்  ஒட்டி ஒரு புதிய மாங்கன்று அல்லது மாமர இனம் உருவாக்கப் படுகிறதல்லவா? இதுவும் மரபணுக்களை மாற்றும் ஒரு திட்டம்தானே?  இவ்வாறு இயற்கைக்கே சவால் விடுமளவிற்கு பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலே கூறவில்லையே அது ஏன்? எவராவது ஒரு விஞ்ஞானி தாவரங்களுக்கு உணர்வு இருக்கிறதா என்று கண்டுபிடித்தாரா? ஆம் ஒரு விஞ்ஞானி கடந்த நூற்றாண்டில் எம் மத்தியில் வாழ்ந்தார், அவர் இக்கேள்விகளுக்கு விடை கண்டு பிடித்தார்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக