ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.9
ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் பள்ளியில் படித்தால், முதலிரு பிள்ளைகள் மட்டுமே வசதிக் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாவது பிள்ளை கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும் மேற்படி இரண்டு பிள்ளைகளுக்கும் கூட கட்டணம் செலுத்த முடியாத வறுமையில் வாடிய பெற்றோர்களும் இருந்தனர். இத்தகைய பெற்றோர்களால் மேற்படி வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வாத்தியாரிடம், குறிப்பாகப் பாடசாலை அதிபரிடம் பல தடவைகள் 'பிரம்படி' வாங்க வேண்டிய சூழ்நிலையும் எமது கிராமத்தில் 1980 களில் நிலவியது என்பது மறக்க முடியாத சோகம்.
ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட சம்பத்திரிசியார் கல்லூரியில் நிலைமை வேறு விதமாக இருந்தது. இங்கு கல்வி கற்பதற்கு பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே அனுமதிக் கதவுகள் திறந்திருந்தன.இது ஆண்கள் மட்டுமே கல்வி கற்ற பாடசாலை. இங்கு கல்வி கற்ற மாணாக்கர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் பணக்காரர்கள். சிலர் மருத்துவர்கள், சிலர் பொறியியலாளர்கள், சிலர் ஆசிரியர்கள், சிலர் உயர்ந்த அரச உத்தியோகத்தர்கள். நான் இந்தக் கல்லூரியில் படித்த காலத்தில் யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபரின் மகனும், எங்கள் வகுப்பில், ஆனால் வேறு பிரிவில் படித்தான். அவனை ஒரு சில ஆசிரியர்களும், பல மாணவர்களும் சேந்து ஆகா! ஓகோ! என்று பாராட்டி தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து அப்போதுதான் பட்டணத்திற்குப் படிக்கப் போயிருந்த 'பட்டிக்காட்டான்' ஆகிய எனக்கு இது பெரும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நான் வளர்ந்து பெரியவன் ஆன பின்னரே அத்தகைய 'துதிபாடல்கள்' அல்லது 'தனி மனித வழிபாடுகளில்' உள்ள சூட்சுமங்கள் புரிய ஆரம்பித்தது. நீங்கள் என்னிடம் கேட்கலாம் அப்படியானால் இங்கு பணக்கார்கள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மட்டும்தானா படித்தார்கள்? என்று. ஆம், இங்கு ஒரு மாணவன் கல்வி கற்க வேண்டுமாயின் அவனுக்கு இருக்க வேண்டிய முதலாவது தகுதியே 'பணக்கார வீட்டுப் பிள்ளை' எனும் தகுதிதான். ஏனைய தகுதிகள் எல்லாம் அடுத்த பட்சம்தான். ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இங்கு படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அந்த மாணவனின் தந்தையார் பத்துப் படகுகளை வைத்துக் கூலியாட்களையும் வைத்துக் கடற்றொழில்(மீன்பிடி) செய்கின்ற ஒரு 'சம்மாட்டி'(*மீனவர் தலைவனை இலங்கைத் தமிழில் இவ்வாறு அழைப்பர்) ஆக இருப்பார். இங்கு ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் கல்வி கற்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அந்த மாணவனின் தந்தையார் பத்துக் கூலியாட்களை வைத்து விவசாயம் செய்யும் நிலச் சுவான்தாராக இருப்பார். ஆகவே 'பணம்' என்ற ஒன்றே இப்பள்ளியில் படிப்பதற்கான 'அடையாள அட்டை' என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அதே பள்ளியில் என் போன்ற ஒரு சில நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகளும் படித்தார்கள் அவர்களின் எண்ணிக்கை மொத்தம் 25 கூட வராது. நான் குறிப்பிடும் இப்பாடசாலையின் மாணவர் தொகை என்ன தெரியுமா? மொத்தம் 2,500 மாணவர்கள். இவர்களில் நான் குறிப்பிடும் நடுத்தர வர்க்கத்து மாணவர்களுக்கும் 'பண உதவி' செய்வதற்கு கொஞ்சம் வசதி கூடிய யாரோ ஒரு கனவான்/சீமாட்டி இருந்தார். இவ்வாறு எனக்குப் பண உதவி செய்தவர் எனது தாய் மாமா என்பதை முன்பு ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அவரும் நான் படித்த அதே பாடசாலையில் கணக்காளராக பதவி வகித்தார்.அவர் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை எனது கல்விக்காக செலவிட நேர்ந்தது. ஏனெனில் சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்பதற்கு மாதாந்தக் கட்டணம் 120 ரூபாய்.(தற்போதைய நிலையில் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்) இந்தத் தொகையை மாணவர்களிடம் இருந்து பள்ளி நிர்வாகம் ஏன் வசூலித்தது என்றால். பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மட்டும் 64 பேர்.
உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.
தொடரும்
2 கருத்துகள்:
எதைக்கூற ஒவ்வொரு வாழ்க்கை முறை...யை....
வணக்கம் தாசன் உங்களது தாரமும் குருவும் 6 .7 மற்றும் 6 .9 இல் குறிப்பிடுவது போல 1980 களில் எமது பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோருக்காய், மாணவர்கள் அதிபரினால் தண்டிக்கப்பட்டதாய் நீங்கள் சொல்வதை என்னால் நினைவுகூர முடியவில்லை. அப்போதைய அதிபர் பொன்.தியாகராசா அவர்கள் அல்லைப்பிட்டியின் அனைத்துக் குடும்பங்களின் நிலைமைகளையும் அநேகமாய் அறிந்திருந்தார். அவர் ஏழ்மைக்காய் ஒரு மாணவனைத் தண்டித்ததாய் அறிந்ததுமில்லை.நம்பவும் முடியவில்லை. ஒருவேளை வசதி படைத்த ஒரு மாணவன் அயத்து மறந்து போனதற்காயோ அல்லது வசதிக்கட்டணத்தை அசட்டை செய்ததற்காகவோ தண்டித்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல் வாத்தியாரிடம், கல்வியில் பின்தங்குவதற்காகவும் குழப்படிக்காகவும் ஏழை மாணவர்கள் அடிவாங்குவதைக்காட்டிலும், குழப்படி குறைந்த ஓரளவு கெட்டிக்கார மாணவர்களான வாத்திமாரின் பிள்ளைகள் அப்பா அம்மா கண்முன்னாலேயே பின்னியெடுக்கப் பட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.(எனினும் ஊரே மெச்சும் அதிபராய் பல்லாண்டுகாலம் எம் பள்ளியை ஆண்டிருந்தாலும், அவரது அன்றைய கண்டிப்பு முறையை 'இன்று' என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.)நல்லது தொடர்ந்து எழுதும் வாசிக்க ஆவலாய் உள்ளோம்.
கருத்துரையிடுக