சனி, செப்டம்பர் 24, 2011

தாரமும் குருவும் . பகுதி - 4.5

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 4.5

பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
ஒரு பிள்ளையை அடித்துத் துன்புறுத்தாமல், ஏசாமல்(திட்டாமல்) பாடம் சொல்லித் தர ஒரு ஆசிரியரால் முடியுமா? மிகவும் கடினமான பணி இது என்பதால் மேற்கூறிய இரண்டில் ஒன்றை ஒரு ஆசிரியர் செய்தே ஆகவேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் எனக்குப் பாலர் வகுப்பில் கல்வி கற்பித்த 'கமலினி'(பெயர் மாற்றப் பட்டுள்ளது) டீச்சரின் முகவரியை முயற்சி செய்து பெற்றுத் தருகிறேன். அவர் இப்போதும் ஆசிரியையாக பணிபுரிகிறாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விடயம் எனக்கு உறுதியாகத் தெரியும் அதாவது எங்கள் கமலினி டீச்சர் இப்போதும் எங்கள் கிராமமாகிய 'அல்லைப்பிட்டியில்' அல்லது யாழ் மாவட்டத்தில் உள்ளது எங்காவது ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அவரிடம் நீங்கள் கேட்டறியலாம் குழந்தைகளை அடிக்காமல், ஏசாமல் படிப்புச் சொல்லித் தரும் 'வித்தை' எங்ஙனம் சாத்தியமாகும் என்பதை.
"வெறும் பாலர் வகுப்புத் தானே? அங்கு பிள்ளைகளை அடிக்க வேண்டிய அவசியமே இருக்காதே". என்று கூறுபவர்களுக்கு எனது மறு மொழி: "இலங்கையில் பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கு அடிக்கின்ற பாடசாலைகள் இருந்தன. தற்போதும் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது. நடந்து முடிந்த முப்பது ஆண்டு காலப் போரின் விளைவாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளின் காரணமாகவும் தற்போதைய இலங்கை அரசு மீது, ஆத்திரத்தில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒரேயொரு விடயத்திற்காக தற்போதைய இலங்கை அரசைப் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. அதாவது இலங்கையில் உள்ள பாடசாலைகளில் பணிபுரியம் ஆசிரியப் 'பெருந்தகைகள்' "தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாணவனை / மாணவியை அடிக்கலாம்" என்பது ஆங்கிலேயர் காலம்தொட்டு இருந்துவந்த 'எழுதப்படாத' சட்டமாகும். எது எதற்கோவெல்லாம் சட்டம் போட்டுத் தடுத்த ஆங்கிலேயர்கள் இவ்விடயத்தில் வாளாவிருந்து விட்டனர். அடிப்பது இலங்கைச் 'சட்டம்பியார்'(அக்காலத்தில் ஆசிரியர்களை 'சட்டம்பியார்' என அழைத்தனர் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.), அடி வாங்குவது 'இலங்கைப் பிள்ளை'(தமிழ் அல்லது சிங்களம்) நமக்கென்ன என்று இருந்துவிட்டார்கள் போலும்.
இலங்கை சுதந்திரமடைந்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் 'மகிந்த ராஜபக்ச' தலைமையிலான அரசே முதன்முதலாக "பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கக் கூடாது" என்று சட்டம் நிறைவேற்றியது. இவ்வாறு சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிப்பதை முற்றாக நிறுத்தி விட்டார்கள் என்று கூறமுடியாது. இருப்பினும் முன்பு போல 'கண்மண் தெரியாமல்' அடிப்பது சட்டத்தின்மூலம் தடுக்கப் பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடைபெறாமலில்லை. "ஆசிரியரின் பிரம்பு மாணவனின் கண் பார்வையைப் பறித்தது", "ஆசிரியர் அடித்ததால் நஞ்சருந்திய மாணவன்" என்றெல்லாம் இடையிடையே செய்திகள் வருகின்றன. எங்கிருந்து தெரியுமா? சிங்களப் பகுதிகளிலிருந்து அல்ல, தமிழ்ப் பகுதிகளில் இருந்துதான். ஆனாலும் முன்பு போல ஆசிரியர்கள் விருப்பம்போல அடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போதும் அடிப்பது நிகழ்கிறது, மிகவும் ரகசியமாக(கமுக்கமாக) ஆனால் மாணவன் அல்லது மாணவி வழக்குத் தொடர்ந்தால் ஆசிரியர் 'சிறை' செல்ல நேரிடும். இதுவெல்லாம் நடப்பது எங்கோ ஒரு மேற்கத்திய நாட்டில் அல்ல நமது இலங்கையில்தான். இப்போது கூறுங்கள் மேற்படி அரசை நான் பாராட்டியது தகுமா? தகாதா?
தமிழ்நாட்டில் நிலைமை இப்போதும் மோசமாகத்தான் உள்ளது. Pre.KG, LKG, UKG வகுப்புகளில் பயிலும் இளம் குருத்துகளை, மெல்லிய மொட்டுகளை, இளம் பிஞ்சுகளை அடிக்கின்ற ஆசிரியைகள் தமிழ்நாட்டுத் தனியார் பாடசாலைகளில்(Matriculation Schools) கல்வி கற்பிக்கிறார்கள்.
(தொடரும்)

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்ல தகவல்கள். உண்மையில் நல்ல விடயத்தினை யார் செய்தாலும் அதனைப் பாராட்ட வேண்டும். அந்த வகையில் நீங்கள் மகிந்த வைப் பற்றி எழுதியதை நானும் வரவேற்கிறேன். கொடூரனாக உலகாலே நோக்கப்பட்ட கிட்லரிடம் கூட சில நல்ல விடயங்கள் இருந்தன. அதுபோல தான் இதுவும் என நினைக்கிறேன்.நீண்ட நாட்களின் பின் உங்கள் தொடர் கண்டு மகிழ்ச்சி. என் பாலர் பாடசாலை ஆசிரியை கூட பிரம்பாலே மட்டுமல்ல சொல்லாலே கூட யாரையும் அடிக்க மாட்டார் .நான் நீண்ட காலங்களுக்கு பின்னர் நாடு சென்ற போது அவர் உயிருடன் இல்லை.

கருத்துரையிடுக