ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது.
ஒருவர் கிளார்க், ஒருவர் கமிஷ்னர், ஒருவர் தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் என
இருந்தால் அவை யாவும் செயல்கள். நீங்கள் செய்பவைஅவை, நீங்கள் அல்ல.
யாராவது ஒருவர் நீங்கள் யார் என உங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு
என்ஜினீயர் என்று கூறுகிறீர்கள். உங்களது கூற்று மிக தவறானது. நீங்கள்
எப்படி என்ஜினீயராக முடியும். அது நீங்கள் செய்வது, நீங்களல்ல. உங்களது
செயல்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில் அந்த செயல்
உங்களை அடிமைபடுத்திக் கொண்டு விடும். நீங்கள் ஒரு டாக்டரின் வேலையையோ,
என்ஜினீயரின் வேலையையோ, கவர்னரின் வேலையையோ செய்யலாம். ஆனால் அதனால்
அதுதான் நீங்கள் என்றாகிவிடாது. நீங்கள் என்ஜினீயர் வேலையை விட்டுவிட்டு
ஒரு பெயிண்டர் ஆகலாம், பெயிண்டர் வேலையை விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக
மாறலாம். நீங்கள் அளவற்ற ஆற்றலுடையவர். ஒரு குழந்தை பிறக்கும்போது
இருக்கும் அளவற்ற ஆற்றல் மெதுமெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட
திசையில் நின்றுவிடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது பல்வேறு பட்ட
ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது. நாம்
அது அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம். அப்போதுதான் அது புகழடைய
முடியும். அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு
சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி
உண்டு. மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி
விடுகிறான். நீ பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கிறாய், இறக்கும்போது ஒரு
டாக்டராக, ஒரு விரிவுரையாளராக, ஒரு என்ஜினீயராக இறக்கிறாய். வாழ்வை நீ
இழந்து விடுகிறாய். எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா
ஆற்றல்களும் கிடைக்கக் கூடிய நிலையில் நீ பிறக்கிறாய். ஒரு
விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு கவிஞனாகவும், மாறலாம்.
கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன. பின்
மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – கணக்கு பேராசிரியராக, ஒரு தேர்ச்சி
பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகிறாய். நீ
குறுகி கொண்டே சென்று விடுகிறாய். நீ குறுகி கொண்டே செல்லும் ஒரு குகை
வாயில் போல மாறி விடுகிறாய். ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி, பின்
அதிலிருந்து நீ வெளியே வருவதேயில்லை. அந்த குகைதான் ஆணவம். அது
செயலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறது. மனிதன் தன்னை ஒரு
கிளார்க்காக நினைத்துக் கொள்வது மிகவும் அவமானமானது. உன்னை நீ ஒரு
கிளார்க்காக நினைத்துக் கொள்வது உன்னை நீயே தாழ்த்திக் கொள்வது, உன்னை நீயே
அவமானப்படுத்திக் கொள்வது. நீங்கள் தேவதைகள், தேவர்கள். அதுதான் உண்மை.
அதைவிட மேலானவர்களாக இருக்கலாம், ஆனால் அதைவிட தாழ்ந்தவர்கள் அல்ல. நீங்கள்
தேவதைகள், தேவர்கள் என நான் கூறும்போது உங்களது ஆற்றல் அளப்பரியது, உங்கள்
சாத்தியக்கூறு அளவில்லாதது என்பதைத்தான் கூறுகிறேன். உங்களது முழு
திறமையையும் உங்களால் வெளிக் கொண்டுவர முடியாமல் இருக்கலாம். – யாராலும்
முடியாது. ஏனெனில் அது மிகப் பரந்து விரிந்தது. அதனால் யாராலும் அதை செய்ய
முடியாது. நீதான் இந்த முழு பிரபஞ்சமும். இந்த காலவரையற்ற நேரத்தினால்கூட
நீ உனது முழு திறமையும் வெளிக் கொணர இயலாது. நீ கடவுள் என நான் கூறும்போது
நீ தீராத ஆற்றலுடையவன் என்பதை தான் கூறுகிறேன். ஆனால் சில திறமைகள்
வெளிப்படலாம். நீ ஒரு மொழியை கற்றுக்கொண்டு அதில் பேச்சாளராக மாறலாம்.
அதில் புலமை பெறலாம். உனக்கு வார்த்தைகளைப்பற்றிய உணர்வு அதிகமாக
இருக்குமானால் நீ கவிஞனாகலாம். உனக்கு இசையை உணரக்கூடிய இயல்பு
இருக்குமானால், இசையை பிரித்து கேட்க்கூடிய செவிப்புலன் இருந்தால் நீ இசைக்
கலைஞனாகலாம். ஆனால் இவையெல்லாம் மிகமிகச் சிறிய சாத்தியக்கூறுகள்தான்.
அதனுடன் நமது வாழ்வு முடிந்துவிட்டது என நினைக்காதே. யாரும் எதனுடனும்
நின்று போய் விடுவதில்லை. நீ செய்தது எதுவாக இருந்தாலும் நீ என்ன செய்ய
முடியும் என்பதுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது செய்தது ஒன்றுமில்லாமல்
போய்விடும். நீ யார் என்பதை பார்க்கும்போது நீ செய்தது மிகவும்
சாதாரணமானதாகி விடுகிறது. ஆணவம் என்பது செயலுடன் அடையாளப்படுத்திக்
கொள்வது. ஒரு கவர்னருக்கு தான் கவர்னர் என்ற ஆணவம் இருக்கும். அவர் உயர்
நிலையை அடைந்து விட்டதாக அவர் நினைக்கிறார். ஒரு பிரதம மந்திரிக்கு நான்
உள்ளது. அவர் உயர்ந்து விட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு மேல் என்ன
இருக்கிறது என அவர் நினைக்கிறார். இது மடத்தனம். முட்டாள்தனம். வாழ்க்கை மிகப் பெரியது, அதைக்
கடக்க வழியேயில்லை. வழி கிடையாது. நீ அதில் நுழைய நுழைய அதிகமான
வாய்ப்புகள் தங்களது கதவுகளை திறக்கும். ஆம் – நீ ஒரு மலை உச்சியை
அடையும்போது திடீரென மற்றொரு மலை உச்சியை காண்பாய். – முடிவேயில்லை. மனிதன்
தனது இருப்பு ஆற்றலோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் புதிதாய் பிறக்கிறான்.
தான் என்பதன் அழுத்தம் செயலிலும், தன்னுணர்வின் அழுத்தம் இருப்பிலும்
இருக்கும். ஜென் இருப்பை சார்ந்தது. நாம் செயலை சார்ந்து இருக்கிறோம். நமது
இருப்பு மிகப் பெரியது. நாம் அதை மிகச்சிறிய குகைக்குள் அடைக்க
முயற்சிக்கிறோம். அதனால் நாம் துயரம் அடைகிறோம். இதுதான் துயரத்தை
உண்டாக்குகிறது, தடையை உருவாக்குகிறது. சுதந்திரம் பறிபோய் விடுகிறது.
எல்லா இடத்திலிருந்தும் நீ தடுக்கப்படுவதாக, நிறுத்தப்படுவதாக,
இடிக்கப்படுவதாக, சுருக்கப்படுவதாக உணர்கிறாய். எல்லா இடத்திலிருந்தும்
தடுத்து நிறுத்தப்படுவதாக உணர்கிறாய். ஆனால் அதற்கு உன்னைத்தவிர வேறு
யாரும் காரணமல்ல. செயல்களை பற்றிய புரிதல் உள்ள ஒரு மனிதன் ஆயிரத்தோரு
செயல்களை செய்வான். ஆனால் எப்போதும் அதிலிருந்து வெளியே வந்து விடுவான்.
அவன் ஆபிஸில் இருக்கும்போது ஒரு கவர்னராக இருக்கலாம், ஆனால் ஆபிஸிலிருந்து
வெளி வந்த உடனேயே அவன் கவர்னராக இருக்க மாட்டான். திரும்பவும் ஒரு கடவுள்
போல, முழு ஆகாயமாகி விடுவான். வீடு வந்து சேர்ந்தவுடன் தந்தையாகி விடுவான்.
ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். அவன் தனது மனைவியை நேசிப்பான், அவன்
ஒரு கணவனாகி விடுவான். ஆனால் அதனுடன் ஒன்றி விட மாட்டான். ஆயிரத்தோரு
வேலைகள் செய்தாலும் அவை அனைத்திலிருந்தும் ஒன்றி விடாமல் சுதந்திரமாகவே
இருப்பான். அவன் ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ,
குழந்தையாகவோ, ஆசிரியராகவோ,கவர்னராகவோ,பிரதம மந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ,
கூட்டுபவராகவோ, பாடகராகவோ, இன்னும் ஆயிரத்தோரு விஷயங்களில் இருக்கலாம் –
ஆனாலும் அவன் அத்துணை விஷயங்களில் இருந்தும் விடுபட்டே இருப்பான். அவன்
கடந்து செல்பவனாகவே இருப்பான், அவன் கடந்து நிற்பான. எதுவும் அவனை
கட்டுபடுத்த முடியாது. அவன் அத்தனை இடங்களுக்கும் சென்று வருவான். ஆனால்
அவன் எந்த இடத்திலும் சிறை பட வில்லை. உண்மையில் எந்த அளவு அவன் அதிக
இடங்களுக்கு சென்று வருகிறானோ அந்த அளவு அவன் விடுதலையடைகிறான். நீ
ஆபிஸில் இருக்கும்போது ஒரு கிளார்க்காகவோ, ஒரு கமிஷ்னராகவோ, ஒரு கவர்னராகவோ
இரு.அது மிகவும் சரியானது. ஆனால் நீ ஆபிஸை விட்டு வெளியே வந்தவுடன்
கிளார்க்காகவோ, கமிஷ்னராகவோ, கவர்னராகவோ, இருக்காதே.அந்த வேலை முடிந்தது.
எதற்கு அதை சுமக்கிறாய். – ஒரு கவர்னர் போல தெருவில் நடக்காதே. நீ அதல்ல.
அந்த கவர்னர்தனம் உன் தலைமேல் ஒரு பாரமாக உட்கார்ந்து இருக்கும் . அது
உன்னை சந்தோஷமாக இருக்க விடாது. மரத்தின் மீதுள்ள பறவைகள் பாடிக்
கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு கவர்னரால் எப்படி கூட பாட முடியும் – ஒரு
கவர்னரால் எப்படி பறவைகள் பாட்டுக்கு ஆட முடியும் – மழை வருகிறது. மயில்
ஆடுகிறது எப்படி ஒரு கவர்னரால் கூட்டத்தில் நின்று அதை ரசிக்க முடியும்.
முடியவே முடியாது. ஒரு கவர்னர் ஒரு கவர்னராகத்தான் இருக்க முடியும்.அவர்
வழியில் போய்கொண்டே இருப்பார்.அங்குமிங்கும் பார்க்கவே மாட்டார். மரங்களின்
பசுமையை, நிலாவை ரசிக்க மாட்டார். அவர் ஒரு கவர்னராகவே இருப்பார். இந்த
அடையாளப்படுத்திக் கொள்ளுதல் உன்னை கொன்று விடுகின்றன. நீ உன்னை
அடையாளபடுத்திக் கொள்ளும் அளவு நீ உயிரற்று போய் விடுகிறாய். இது நினைவில்
கொள்ள வோண்டிய ஒன்று. நீ செய்வது எதனுடனும் உனக்கு சம்பந்தமில்லை. உனது
இருப்பிற்கும் உனது வேலைக்கும் தொடர்பில்லை. நீ செய்யும் வேலை எதுவாக
இருப்பினும் அது உனது இருப்பை தொடாது. உன் மனைவியுடன் இல்லாத போது நீ
கணவனல்ல. மனைவி இல்லாதபோது நீ எப்படி கணவனாக இருக்க முடியும். இது
மடத்தனம். உன் குழந்தையுடன் நீ இல்லாதபோது எப்படி நீ ஒரு தாயாகவோ
தந்தையாகவோ இருக்க முடியும் அது இயலாது. நீ கவிதை எழுதாத போது நீ கவிஞனல்ல.
நடனமாடாதபோது நீ டான்ஸர் அல்ல. நீ நடனமாடும்போதுதான் நீ டான்ஸர். அந்த
நேரத்தில் உனது உடலின் நிலை, நாடித்துடிப்பு நடனமாடுவதற்கு ஏற்றாற் போல ஒரு
குறிப்பிட்ட விதமாக இருக்கும். ஆனால் அது அந்த நேரத்திற்கானது மட்டுமே.
நடனத்தை நிறுத்தியவுடன் டான்ஸர் மறைந்து விடுவார். நீ அதிலிருந்து வெளியே
வந்து விடுவாய். இது போன்று இருந்தால் நீ சுதந்திரமாக இருக்க முடியும்.
சுமையின்றி இருக்க முடியும், பொங்கி பெருகி வழிந்தோடலாம். கணவனாக இரு,
ஆனால் எப்போதும் கணவனாக இருக்காதே. சன்னியாசி ஒரு மிகச் சிறந்த நடிகனாக
இருக்க வேண்டும் என நான் கூறும்போது இதைதான் குறிப்பிடுகிறேன். தாயாக இரு,
ஆனால் எப்போதும் தாயாகவே இருக்காதே. அந்த குணநலனுடன் உன்னை
அடையாளப்படுத்திக் கொண்டு விடாதே. அது ஒரு செயல், அதை எவ்வளவு நிறைவாக
செய்ய முடியுமோ, எவ்வளவு ஆணித்தரமாக செய்ய முடியுமோ, எவ்வளவு அன்பாக செய்ய
முடியுமோ, எவ்வளவு அனுபவித்து செய்ய முடியுமோ, அப்படி செய். ஆழமாக செய்.
அது ஒரு கலையாகட்டும். ஒரு அழகான மனைவியாக, அன்பான அம்மாவாக, சிறந்த
கணவனாக, அழகான காதலனாக இரு. ஆனால் அதனுடன் ஒன்றாகி விடாதே. ஒன்றி விட்ட
கணமே நீ பிரச்னையில் மாட்டிக் கொண்டாய். செயல்கள் உன்னுள் நிலைபெற
விட்டுவிடாதே. அந்த வேஷமாகவே நீ மாறி விடாதே. ஒரு தேர்ந்த நடிகனாக இரு.
நடிகன் பல பாத்திரங்களில் நடிக்கலாம். ஒரு தாயாக, தந்தையாக,
கொலைகாரனாகக்கூட, மிக முக்கியமான பாத்திரத்தில், நகைசுவையாக, எப்படி
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவன் எந்த பாத்திரத்தில் நடிக்கிறான்
என்பது முக்கியமில்லை. அதில் சிறப்பாக நடிக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற
வேண்டும். அவனிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் அதில் கொண்டு வர வேண்டும்.
அவனுக்கு கொலைகாரன் வேஷம் கொடுத்தால் உலகிலேயே வல்லமை வாய்ந்த கொலைகாரனாக
இருப்பான். அவனுக்கு சாது வேஷம் கொடுத்தால் மிகச் சிறப்பான சாதுவாக அவன்
இருப்பான். அவனால் மாற முடியும். ஒரு வேஷத்தில் சாதுவாக இருப்பான், மற்றொரு
வேஷத்தில் கொலைகாரனாக இருப்பான். ஆனால் இரண்டிலும் அவனது வேஷப் பொருத்தம்
கனகச்சிதமாக இருக்கும். இந்த இலகு தன்மை வாழ்விலும் வேண்டும். வாழ்க்கையே
ஒரு நாடகம்தான். ஆனால் மேடைதான் மிகப் பெரியது. இந்த முழு உலகமும் மேடையாக
இருக்கிறது. உலகத்திலுள்ளவர்கள் அனைவரும் நடிகர்கள்தான். முழுமை எங்கே
போகிறது, அதன் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது. கதை கொடுக்கப்பட
வில்லை. அது உருவாக்கப்பட வேண்டும். கணத்துக்கு கணம் அது உண்டாகும்.
ஜென்னில் ஒருவகையான நாடகம் உண்டு. அதன் பெயர் நோ நாடகம். கதை கிடையாது,
நடிகர்கள் மட்டுமே உண்டு. திரை உயர்த்தப்பட்ட பின் அவர்களே கதையை
உருவாக்கிக் கொள்ள வேண்டும். விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மக்கள்
இருக்கும்போது ஏதாவது நடந்துதானே தீரும். அவர்கள் வெறுமனே உட்கார்ந்து
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும்கூட ஏதோ நடக்கும். ஒத்திகை
இன்றி, தயாரிப்பு இன்றி ஏதோ ஒன்று நடக்கும். வாழ்க்கையும் அதே போலத்தான் –
அது கணத்துக்கு கணம் உருவெடுக்கும். கடந்த காலத்திலிருந்து வெளியே
வந்துவிடு. எந்த குறுக்கீடும் இல்லாமல், எந்த தடையும் செய்யாமல் நடப்பதை
அப்படியே அனுமதித்து விடு. எவ்வளவு முழுமையாக இருக்கமுடியுமோ அவ்வளவு
முழுமையாக அதனுள் இரு. உனது சுதந்திரம் அதிகமாகும்.
நன்றி:osho-super.blogspot.com
1 கருத்து:
nanri nantri.......ithai padikka padikka valkkai-in
purithal
melum
alakaka marukirathu
கருத்துரையிடுக