ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

நேர் புத்தியின் சீரடி…


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

அலங்காரச் சிறப்பு, அழகிய இருக்கைகள், பளபளக்கும் ஆடை, பரிவாரங்கள் புடை சூழ, சேடியர் சாமரம் வீசும் மாபெரும் அரச சபை. அரசன் உதடு அசைந்தால் உதிரும் மொழிக்குப் பலர் காத்திருப்பு.
விருந்தினரான அறிஞர்கள் வார்த்தைகளால் மன்னனுக்குப் புகழாரம் சூட, கவிஞர்கள் கவிதை மாலை சூடிட, அவன் மகாராசா! தனது நில எல்லைக்குள். இந்த எல்லையை விட்டு அவன் வெளியே வரும் போது இவன் ஒரு சாதாரண குடிமகன் ஆகிறான். நில அரசன் நிலை இதுவாகிறது.
கல்வி கேள்விகளில் சிறந்தவன், தன் வித்துவத் திறமையுடன் குற்றமறப் படித்துயர்ந்த வித்தகன் கற்றவன் எனும் பெயர் பெறுகிறான். கல்வியெனும் அரசசபையில் , அறிவெனும் இராச்சியத்தில் தன் திறமையின் ஒளிக்கதிரில் முடி சூடிய மன்னனாகிப் பிரகாசிக்கிறான். இவன் கௌரவத்தில் எவ்வகையிலும் அரசனுக்குக் குறைந்தவனல்ல.
தன் புத்தகமெனும் ஆயுதத்தை நிலவறையில் தூசி படிய விடுபவனல்ல. தனது ஆயுதம் மட்டும் பாவிப்பவனுமல்ல. பிறரின் ஆயத மூலமும் (பிறரின் புத்தக மூலமும்) இவன் பெரு வித்தகனாகிறான். பிறர் ஆயுதங்களைத் தீட்டத் தீட்ட தன்னறிவில் கூர்மையாகிறான்.
இது வித்தியாசமான அறிவு இராச்சியப் பரிபாலனம்.
சுகபோக செல்வச் சிறப்புடைய அரசனுடன் ஒப்பிடும் போது, கல்வியில் வித்தகனே சிறந்தவனாகிறான்.
புத்தமென்றால் தூர விலகி ஓடும், புத்தகமென்றால் ஒதுக்கி விட்டு, புதுமையான நாகரீக ஆடை அலங்காரப் பொருட்களை விரும்பித் தெரிவு செய்யும் வாழ் முறை கொண்ட  பலர் வாழ்கிறார்கள். எழுதுகிறவர்களை ஏளனம் செய்வாருமுளர்.
மூதுரையில் ஒளவையார் சிறப்பாக
 ” மன்னனு மாசறக்  கற்றோனுஞ் சீர்தூக்கின்
   மன்னனிற் கற்றோன் சிறப்புடையான் – மன்னற்குத்
   தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
   சென்றவிட மெல்லாஞ் சிறப்பு…..”
என்று அரசனிலும் வித்தகனே சிறந்தவன் என்கிறார். எத்தனையோ அறிஞர்கள் தெளிவு மொழியாக வாசிப்பு அறிவு சிறந்தது என்று கூறிடினும், தனக்கு வந்த புத்தகப் பொதி அவிழ்க்கப்படாமலேயே வாழ்வது தான் யதார்த்தமாகிறது பல இடங்களில்.
 
” எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
  கண்ணென்ப வாழு முயிர்க்கு”    
என்று திருவள்ளுவர் கூறுகிறார். 
கல்வி எனும் அதிகாரமே இவற்றைக் கூறுகிறது. அத்தோடு கல்லாமை பற்றியும் கூறுகிறார்.
கற்றலும் நேரான வழி சமைத்தலும் மிக அவசியமான தொன்றாகிறது.
எமது நேர் புத்தியெனும் சிறந்த கூர் ஆயுதத்தைச் சரிவரப் பாவித்துப் பத்திரமாக அடியெடுத்து சுய வாழ்வை எவரும் சீர் செய்யலாம்.
அவர் சொல்வார் இவர் சொல்வார்
எவர் – ஆயிரமும்- எப்போதும் சொல்வார்.
உவர்(உப்பு) எது இனிப்பெது என்று
உணர்வது உன் உயர் கடனே.     - வேதா -
(இலண்டன் தமிழ் வானொலி புதன் இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பானது.)

2 கருத்துகள்:

Kumar சொன்னது…

Very nice article/

vetha (kovaikkavi) சொன்னது…

Oh! mikka nanry Anthimaalai.....God bless you.
Thank you Kumar also.....

கருத்துரையிடுக