ஞாயிறு, நவம்பர் 14, 2010

முதற்பரிசு மூன்றுகோடி அத்தியாயம் 8

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது 
1. தண்ணீரை இறக்குமதி செய்தல் 
singaporeசிங்கப்பூர் என்ற சிறிய நாடு பிரித்தானியாவிடமிருந்து 16.9.1963 இல் உத்தியோகபூர்வமாகச் சுதந்திரமடைந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் மலேசியக் கூட்டமைப்பில்(கூட்டிணைவில்) ஒரு மாநிலமாக இணைந்திருந்தது. அதன் பின் மலேசியக் கூட்டமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 9.8.1965 இல் மலேசியாவை விட்டுப் பிரிந்து சுதந்திர நாடாகியது. இந்நாடு மலேசியாவுடன் சேர்த்து பிரித்தானியர்களால் ஆளப் பட்டபோதும், மலேசியக் கூட்டமைப்பில் ஒரு ஒன்றியமாக(மாநிலமாக) இருந்தபோதும் மலேசியாவிடமிருந்து 'இராட்சதக் குழாய்கள்' மூலமாக, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இருக்கும் சுமார் 1 கிலோமீட்டர் தூரமுள்ள பாதை வழியாகச் சிங்கப்பூருக்கு தண்ணீர் வழங்கல் நடைபெற்று வருகின்றது.



இத்தண்ணீர் வழங்கலானது, இரண்டு நாடுகளுக்குமிடையில் 1965 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவே நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூரானது சில சிக்கல்களையும் எதிர்நோக்கியிருந்தது. காரணம் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூர் விலகிய காலத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த மக்களின் தொகையானது, கடந்த நாற்பத்தைந்து வருடங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, இவ்வாறு மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப மூன்று மடங்கு தண்ணீரை மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நெருக்கடி சிங்கப்பூருக்கு ஏற்பட்டது. ஆனால் மலேசியாவும் சிங்கப்பூரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. சிங்கப்பூரின் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப ஏற்றுமதிசெய்யும் தண்ணீரின் அளவையும் அதிகரிக்கின்ற வல்லமை 
MIGD-Municipal-Plantமலேசியாவிடமும் இருக்கவில்லை. காரணம் மலேசியா தனது எல்லைப்புற மாநிலங்கள் அனைத்திலுமிருந்து சேகரித்த தண்ணீரை, சிங்கப்பூருக்கு அண்மையிலுள்ள தனது மாநிலமாகிய 'ஜோகூரில்'(Johor) ராட்சதத் தொட்டிகளில் ஒன்று சேர்த்து, சிங்கப்பூருக்கு அனுப்பி வருகிறது, இத்தண்ணீரின் அளவை அதிகரித்தால், மலேசியாவில் வாழும் தனது மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்நோக்குவர், இதன் மூலம் தனது சொந்த மக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலை மலேசியா அரசுக்கு(நாட்டிற்கு) ஏற்படும். இதன் காரணமாகவே சிங்கப்பூரின் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப, ஏற்றுமதிசெய்யும் தண்ணீரின் அளவை மலேசியா அதிகரிக்கவில்லை. அத்துடன் இரண்டு நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட 'தண்ணீர் ஒப்பந்தம்' எதிர்வரும் 2061 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது(காலாவதியாகிறது) "அதன்பின் உங்களுக்குத் தண்ணீர் தரமாட்டோம், அதற்கு 
முன்னதாக நீங்கள் 'தன்னிறைவு' அடையக்கூடிய மாற்று வழிகளைக் கண்டுபிடியுங்கள்" என்று மலேசியா அரசு சிங்கை அரசிடம் கூறியது. சிங்கை அரசு பலவித சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தபின், மூன்று வகையான மாற்றுத் திட்டங்களைக் கண்டு பிடித்தது.
(தொடரும்)  
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக