வியாழன், நவம்பர் 25, 2010

மண்ணும், மரமும், மனிதனும் - அத்தியாயம் 4  
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இக்கட்டுரை கடந்த 22.10.2010 அன்று அந்திமாலையில் வெளியாகியது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக மறு பிரசுரமாகிறது.
                                    
"மாமரத்திற்கு வலிக்கும்" என்று பெற்றோர்கள் கூறுகின்ற கருத்தைக் கவனத்தில் கொள்கின்ற சிறுவனோ, சிறுமியோ "மாம்பிஞ்சுகளைப் பறித்தல் கூடாது" என்கின்ற பெற்றோர்களின் கருத்தை நினைவில் கொள்வதில்லை. அத்தகு 'தடை செய்யப்பட்ட' செயலைச் செய்துபார்க்கவே ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது. ஏனெனில் ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு தடுக்கப்படும்போது, அச்செயலைச் செய்ய தூண்டப்படுவது மனித இயல்பாகிறது. இதற்கு மனித வரலாற்றைக் குறித்துவைத்துள்ளதாகக் கூறப்படும், 'புனித விவிலியத்தில்' வரும் ஆதிப் பெற்றோர்களான 'ஆதாமும், ஏவாளும்' கூட விதிவிலக்கு அல்ல.

இதனாலேயே குழந்தைகள் மாம்பிஞ்சுகளைப் பெற்றோருக்குத் தெரியாமல் பிடுங்கி உண்கின்றனர். புளிப்பும், கசப்பும் கலந்த அந்தப் பிஞ்சு மாங்காய்களின் சுவையானது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு 'தெவிட்டாத' சுவையாகி விடுகிறது. இதற்கு மருத்துவ ரீதியான ஒரு காரணமும் உள்ளது. அதாவது எந்தக் குழந்தை மாங்காயையோ, புளியங்காயையோ, புளியம்பழத்தையோ திருட்டுத் தனமாக, விரும்பி உண்கிறதோ அந்தக் குழந்தையின் உடலில் விட்டமின் C குறைவாகக் காணப்படுகிறது என்று அர்த்தம். இவ்வாறான தருணங்களில் பெற்றோர், குழந்தைக்குப் போதுமான விட்டமின் C சத்துள்ள   பழங்களையோ(புளிப்புச் சுவையுடைய பழங்கள்) அல்லது விட்டமின் C மாத்திரைகளையோ கொடுத்தல் அவசியம். இதேபோல் சில குழந்தைகள், ரகசியமாகச் சாம்பலையோ,(அடுப்பிலிருந்து கிடைக்கும் சாம்பல்) அல்லது களிமண், புழுதிமண் போன்றவற்றையோ உண்ணுதல் கூடும். இவ்வாறு உண்ணுகிற குழந்தைகளைப் பெற்றோர் "அவ்வாறு செய்யக் கூடாது" என்று அதட்டி, அடிப்பதை நான் பலதடவைகள் கண்டிருக்கிறேன். இவ்வாறு குழந்தைகள் செய்வதற்கும் 'அறிவியல் ரீதியான' காரணம் இருக்கிறது. அதாவது அவ்வாறு செய்கின்ற குழந்தையின் உடலில் ஏதோவொரு தாதுப்பொருள் (உதாரணமாக கல்சியம், பொஸ்பரஸ், சோடியம்) குறைவடைகிறது என்று அர்த்தம். மேற்படி குழந்தையின் உடலில் குறிப்பிட்ட ஒரு தாதுப்பொருள் குறைவடைகின்றமையை, இயற்கையானது நமக்குத் தெரிவிக்கும் ஒரு செயற்பாடே குழந்தை 'களிமண்ணை' உண்ணுதலாகும். ஆதலால் மேற்படி குழந்தையைத் தாயோ, தந்தையோ அடிக்காமல், உரிய மருத்துவரிடம், ஆலோசனை பெற்றுக் குழந்தைக்குத் தேவைப்படுகின்ற 'சத்து' எது என்பதைக் கண்டறிந்து, அச்சத்து குழந்தைக்குக் கிடைக்க ஆவன செய்தலே பொருத்தமான தீர்வாக அமையும்.
சரி, சிறு வயதில் மாங்காயின், அல்லது மாம்பழத்தின் சுவைக்கு அடிமையாகும் குழந்தை, அவன்/அவள் பதின்ம வயதை அடையும்போதும் அவர்கள் மனமானது, மாங்காய்க்காகவும், மாமரத்திற்காகவும் ஏங்குகிறது. பாடசாலைப் பருவத்திலுள்ள நமது நாட்டுச் சிறுவர்கள் அவர்களது வளவில் மாமரங்கள் இல்லாதுபோகும் பட்சத்தில், மாற்றாரின் காணிகளில் உள்ள மாமரங்களிலிருந்து, மாங்காய்களைத் திருடுகின்ற சம்பவங்கள், சாதாரணமாக நிகழ்வதை அறியாத தமிழர்களே இருக்கமுடியாது எனலாம். "திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்" என்ற பழமொழியைத் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவ்வாறு சிறுவர் முதல், பதின்ம வயதினர் வரை அனைவரும், 'மாங்காய்' தருகின்ற மரம் என்ற காரணத்திற்காக நேசிக்கின்ற ஒரு மரமாக 'மாமரம்' விளங்குகிறது. இதுபோன்ற இன்னோரன்ன காரணங்களாலேயே 'கிழக்குச் சீமையின்' நாயகியானவள் "மண்ணே போய்வரவா, மாமரமே போய்வரவா"   என்று பாட்டிசைத்தாள்.
இந்த மனிதர்கள், குறிப்பாகத் தமிழர்கள், தங்கள் மண்ணோடுசேர்த்து மரம், செடி, கொடிகளையும் நேசிக்கின்ற பாங்கு என்னை வியப்படைய வைத்தது. இது எதனால், எவ்வாறு, எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆராயப் புறப்பட்ட எனக்குக் கிடைத்த விடைகள் என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

(அடுத்த வாரமும் தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன
ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக