சனி, நவம்பர் 26, 2011

தாரமும் குருவும் பகுதி - 5.3

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 5.3
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

முதல் நாள் ஒரு சிறுமியையும், சிறுவனையும் சேர்த்து ஒரு ஜோடி எனும் விகிதத்தில் பாட வைத்த 'கமலினி டீச்சர்' அடுத்த நாள் ஒவ்வொருவரையும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு 'பொம்மை'(பாவைப் பிள்ளை என இலங்கைத் தமிழில் கூறுவோம்) எடுத்து வருமாறு கூறினார். என்று கடந்த இரு வாரங்களுக்கு முந்திய இத்தொடரின் பாலர் வகுப்புப் பற்றிய பகுதியை முடித்திருந்தேன். இவ்வாறு அவர் மாணவர்களிடம் பொம்மை எடுத்து வரும்படி கேட்டதில் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தவர்கள் பெண் பிள்ளைகள் மட்டுமே. ஏனெனில் வீட்டில் விளையாட்டில் பொம்மையை உபயோகிப்பவர்கள் அவர்கள்தானே?. தமிழ் சமுதாயத்தில் மட்டுமன்றி, ஐரோப்பியர்களிடமும் ஒரு எழுதப்படாத 'விதி' இருக்கிறது "விளையாட்டில் பொம்மையை உபயோகிப்பது பெண் பிள்ளைகள் மட்டுமே" என்பதுதான் அந்த விதி. ஆண் பிள்ளைகள் என்றால் கனரக வாகனங்கள் தொடங்கி கனரக ஆயுதங்கள் வரையான விளையாட்டுப் பொருட்கள் உபயோகிக்க வேண்டுமாம்.!!! இவ்வாறுதான் இன்ன இன்ன விளையாட்டுப் பொருளை வைத்துத்தான் விளையாட வேண்டும் என்று எங்காவது சட்டம் எழுதப் பட்டிருக்கிறதா என்ன?
சரி, பொம்மை கொண்டுவரும்படி டீச்சர் பணித்து விட்டார். நாங்களும் மறு பேச்சில்லாமல் சம்மதித்து விட்டோம். ஆனாலும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டு இருக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. பொம்மைக்கு எங்கே போவது? நான் பொம்மை வைத்து விளையாடியதும் இல்லை. பொம்மையை அயல் வீடுகளில் கண்டதும் இல்லை. பாலர் வகுப்பில் உபயோகிப்பதற்கு உடனடியாகப் 'பொம்மை தேவை' என என் பேர்த்தியாரிடம்(அம்மம்மாவிடம்) விண்ணப்பித்தாலும் அது உடனடியாகக் கிடைத்து விடப் போவதும் இல்லை. அம்மம்மா அடுத்த தடவை 'யாழ்ப்பாணம்' போகும்போது, அவர் மனம் வைத்தால் + ஞாபகம் வைத்திருந்தால் எனக்குப் பொம்மை வாங்கி வருவார். ஆனால் நாளைய தேவைக்கு என்ன செய்வது? என்பதுவே வழி நெடுக என் மனதின் கேள்வியாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டை நோக்கி டீச்சருடனேயே நடந்து வந்துகொண்டிருந்தேன். "டீச்சர் என்னிடம் பொம்மை இல்லை, நாளைக் காலையில் என்னால் பொம்மை கொண்டு வர முடியாது" என்று கூறினால் டீச்சர் என்னைக் 'கொன்று தின்றுவிடப் போவதில்லை' ஆனாலும் டீச்சரிடம் இதைக் கூற விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது. இந்த வயதில்தான், இந்த இடத்தில்தான் பிள்ளைகளின் தாழ்வு மனப்பான்மையும்(Inferiority Complex) தயக்க உணர்வுச் சிக்கலும்(hesitation) உருவாகின்றன என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவும்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அம்மம்மாவிடம் டீச்சர் சொன்னதைக் கொஞ்சம் செய்தி நிறுவனங்களின் பாணியில் மிகைப்படுத்தி "நாளைக்கி பாப்பாப் பாட்டு பழகுவதற்கு பாவைப் பிள்ளை(பொம்மை) கொண்டு வர வேணுமாம், இல்லாட்டிக்கு பள்ளிக்குடத்துக்கு(பள்ளிக்கூடத்திற்கு என்பதை கிராமத்துப் பேச்சில் இவ்வாறு கூறுவோம்) வர வேணாம் எண்டு டீச்சர் சொன்னவா" என்றேன். இதைக் கேட்ட அம்மம்மாவிடமிருந்து எந்தவொரு பெரிய அதிர்வலைகளையும் காணோம். அவர் வெகு சாதாரணமாக "பூச்சா அல்லது சூட்டியிட்ட ஒரு பாவப்பிள்ளைய வங்கிக் கொண்டு போவன்" என்றார். இதைக் கேட்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. இங்கு அம்மம்மா 'பூச்சா' 'சூட்டி' எனக் குறிப்பிட்டது எனது ஒன்றுவிட்ட தங்கைகள்(சித்தியின் பிள்ளைகள்). அவர்கள் என்னைவிட மூன்று, நான்கு வயது இளையவர்கள். அவர்களின் தந்தையார்(எனது சித்தப்பா) வியாபார நிமித்தம் அடிக்கடி இந்தியாவுக்கு சென்று வருபவர். அவர் இந்தியாவிலிருந்து வரும்போது தனது பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கி வருவார். இலங்கையோடு ஒப்பிடும்போது மேற்படி விளையாட்டுப் பொருட்கள் இந்தியாவில் மிக மலிவு என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் ஒரு வித்தியாசமான மனிதன். பிள்ளைகளின் வீட்டுப் பெயரை சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என 'பூச்சா'(சிங்களத்தில் பூனை என்று அர்த்தமாம்) எனவும், 'சூட்டி' எனவும் 'சுசி' எனவும் வைத்தார். இதில் 'பூச்சா' மட்டும் வளர்ந்தபின் தனது வீட்டுப் பெயரை வெறுத்து 'விஜி' என மாற்றிக் கொண்டாள். பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் பெற்றோர்கள் அந்தப் பெயர் எதிர்காலத்தில் பிள்ளையால் விரும்பப் படுமா? என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
அம்மம்மா மேற்படி ஆலோசனையை முன் மொழிந்ததுதான் தாமதம் நான் எங்கள் சித்தியின் வீட்டை நோக்கிச் சிட்டாகப் பறந்தேன். சித்தியின் வீடு அம்மம்மாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. சித்தி வீட்டிற்குப் போவது என்பது எனக்கு 'தேனை விட' இனிமையான விடயம். காரணங்கள் பல. நான் எப்போது போனாலும் எனக்கு எங்கள் சித்தி ஒரு உணவோ, தின்பண்டமோ தந்து உபசரிப்பார். எங்கள் சித்திக்கு ஆண் பிள்ளைகள் இல்லை என்பதால், ஆண் பிள்ளைகள் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். அதுவும் தனது மூத்த சகோதரியின் மகன் என்றால் கேட்கவும் வேண்டுமா? என்மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். நாட்டை விட்டு 1990 இல் வெளியேறும் வரை அந்தச் சித்தியின் 'அன்பு மழையில்' நனைந்தேன் என்றால் மிகையில்லை. எனது மாமா, கடைசிச் சித்தி போன்றவர்கள் என்னை ஆயிரக் கணக்கான தடவைகள் 'டேய் தாசன்' என்று கூப்பிட்டு இருப்பார்கள். ஆனால் நான் குறிப்பிடும் அந்தச் சித்தியோ என்னை ஒரு தடவைகூட 'டேய்' என்று கூப்பிட்டிருக்க மாட்டார். எப்போதும் அன்பொழுக 'அப்பு' 'ராசா' என்றுதான் அழைப்பார். இதைவிடவும் எனது பேர்த்தி, பேரன், சித்தி, சித்தப்பா அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அதாவது 'தாசன்' என்ற எனது பெயரை எப்போதும் 'ராசன்' என்றே பிழையாக உச்சரித்தனர். நான் வளர்ந்து வரும் காலத்திலும் அது தொடர்ந்தது. அது எனக்கும் பிடித்திருந்ததால் அதை ரசித்தேன். நான் வளர்ந்தபின் இதனை சித்தியும், சித்தப்பாவும் நிறுத்தி விட்டார்கள். ஆனால் எனது பேர்த்தியும், பேரனும் அதை விடவில்லை. எனது பேர்த்தியார் 1992 இல் இறக்கும் வரை என்னை 'ராசன்' என்றே அழைத்தார். ஒவ்வொரு பெற்றோருக்கும், பேரன் பேர்த்திகளுக்கும் தங்களது ஆண் வாரிசுகள் 'மகா ராசன்கள்'(ராஜாக்கள்) தானே? 'அல்லைப்பிட்டி' என்ற அந்தச் சிறிய கிராமத்தில் மட்டும் என்னை விடவும் முப்பது பேருக்கு மேல் வீட்டுப் பெயர் 'ராசன்' என்று இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்கையில் வியப்பில் மூழ்கிப் போகிறேன்.
(இன்னும் சொல்வேன்)


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக