புதன், அக்டோபர் 26, 2011

தீபாவளி வாழ்த்து

ஆக்கம்: மனுவேல் மகன்,  பிரான்ஸ்


நான் முதலாம் வகுப்புப் படிக்கும்போதுதான்  முதன் முதலாய் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது ஒரு சாதாரண போஸ்ட் கார்ட்டில் அழகான ஓவியம் வரைந்த ஒரு தீபாவளி வாழ்த்து. அதை என் பால்ய நண்பன் அனுப்பியிருந்தான். அந்த ஓவியத்தை ஆலு மாமா வரைந்திருந்தார். அது ஒரு கடற்கரையோர மாலைகாட்சியாக இருந்தது. சாய்ந்த தென்னை, மறையும் சூரியன், அலையாடி நிற்கும் படகு,;வானத்தில் பறக்கும் பறவைகள் என மிக சிரத்தையோடு வரையப் பட்ட ஓவியமாய் இருந்தது.
எனக்கோ கொள்ளை மகிழ்ச்சி.முதல் கடிதம் அதுவும் ஒரு வாழ்த்து எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இது பொறுக்காத என் சகோதரன் தன் வேலையைக் காட்டினான். "இப்பிடி வாழ்த்து அனுப்பினால் அதுபோலவே நாங்களும் கீறி அனுப்பவேணும்.இல்லாட்டிப் படிப்பு வராது" என்று என்னை மிரட்டினான். எனக்குப் பிடிக்காத பாடம் சித்திரம். ஏனென்றால் எப்பிடி உயிரக் குடுத்து மாங்காய் கீறினாலும் அது தேங்காய் மாதிரித்தான் வரும். (இப்பவரைக்கும் செவ்வரத்தம்பூ மட்டுமே ஒழுங்காய்க் கீறத்தெரியும். அதுவும்  'சுப்பிரமணியம் சேர்' இன்  புண்ணியத்தில்.)

அந்த வெருட்டில் பயந்து போய் அண்ணனைப் படம் வரைந்து தரும்படி கெஞ்சினேன். ஏனென்றால் அவன் ஒரு 'இட்டுக்கட்டிக் கதை சொல்லும் விண்ணன்' என்பதை விட, சிறந்த ஓவியனாய் அன்று எனக்குத்தெரிந்தான். ஆனால் என் கெஞ்சலை சற்றும் காதில் வாங்காத அவன், மழை பெய்து ஈரமாய் இருந்த எங்கள் வீட்டு முற்றத்தில் M .G .R . படம் வரைந்து கொண்டிருந்தான். வந்த கோவத்தில் பக்கத்தில் கிடந்த மரக் குற்றியால் விட்டேன் ஒரு எறி. ஏபிரகாம் வார்ட்டில் ரெண்டு தையல் போட்டான். ஆஸ்பத்திரியால் அண்ணனைக் கூட்டிக் கொண்டுவந்த அப்பா, நேரே பூவரசில் ஒரு பெரிய தடி முறித்து வந்தார். நான் குய்யோ முறையோ எனக் கத்திக் குளறி என் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க, உண்மை விழங்கிய அப்பா, மறுநாள் முருகன், சரஸ்வதி, பிள்ளையார் என சாமிப் படங்களுடன் அச்சான தீபாவளி வாழ்த்து அட்டைகள் பல வாங்கி வந்து எனக்கும் என் அண்ணனுக்கும் கொடுத்தார் .

அதுவே நான் பார்த்த முதல் வாழ்த்து அட்டை. தொடர்ந்து பொங்கல், கிறிஸ்மஸ், புதுவருடம் என வாழ்த்து அட்டைகள் மூலம் அன்பைப் பரிமாறி வந்தோம். ஆனால் கைத் தொலைபேசி வந்ததும் எல்லாம் முடிந்து போனது .இப்போது யாராவது எனக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார்களா? எனக் காத்திருக்கிறேன். காத்துக்கொண்டே இருக்கிறேன். என் மகன் கேட்டால், கீறிக் கொடுக்கசெவ்வரத்தம்பூவும்  நானும் தயாராய் இருக்கிறோம். அவனோ தொலை பேசியில் "ஹாப்பி தீபாவளி, bonne fête " என வாழ்த்திக் கொண்டு திரியிறான்.
நன்றி:manuvelmahan.blogspot.com

5 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் தீபாவளிக் கதை . உங்களைப் போல எனக்கும் வாழ்த்து யாராவது போஸ்ட் இல அனுப்பமாட்டார்களா என்ற ஆவல் இருக்கிறது? இருந்தாலும் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அந்திமாலையின் ஊடாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி.

Niranjan, France. சொன்னது…

Votre histoire est excellent (Your story is very good)... Happy Diwali

Mohan, Denmark சொன்னது…

Very good

Jeeva, Netherlands சொன்னது…

உங்கள் கதை அருமை. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

amalathas சொன்னது…

niranjan! merci beaucoup.
mohan! thanx.
vinothini,jeeva! நன்றி.

கருத்துரையிடுக