மூத்தோர் சொல்
புகழுக்காக நேர்மையை மறந்து விடக் கூடாது;
உறவுகளுக்காக நீதியை மறந்து விடக் கூடாது.
வாய்ப்புகளுக்காகத் தன்மானத்தை விட்டுவிடக் கூடாது.

இன்றைய
தினம் உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு
விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அவர்களது மகிழ்ச்சியில் 'அந்திமாலையும்'
பங்குகொள்கிறது. அத்துடன் இந்தப் பண்டிகையின் பின்னணி, மற்றும் தோற்றம்
பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்து சமயத்தவர் ஒருவரிடம்
தீபாவளி எதற்காகக் கொண்டாடப் படுகிறது? என்று கேட்டால் "கிருஷ்ண பரமாத்மா,
நல்லோர்களைக் காப்பதற்காக 'நரகாசுரனை' அழித்தபோது, அவன் இறக்கும்
தருணத்தில் கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான் என்றும்,
அவ்வேண்டுகோளில் "நான் மடிந்த தினத்தை மக்கள் எல்லோரும் மகிழ்வாகக் கொண்டாட
வேண்டும்" என்றும் கோரியிருந்தான், அதன்படியே மக்கள் காலங்காலமாக
இப்பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் என்று கூறுவார்.
தீபாவளி, ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முன் தினம் வரும் நரக சதுர்த்தசி திதியில் கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட
இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலை
இந்துக்கள் தவிர்ந்த ஏனைய மதத்தவர்களான தமிழர்களும் முக்கிய பண்டிகையாகக்
கருதுவதுபோல் 'தீபாவளி' கருதப்படுவதில்லை. இது முழுக்க முழுக்க ஒரு இந்துப்
பண்டிகை என்பதால் இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்களாலும், இந்தியாவின் வட
மாநிலங்களிலுள்ள இந்துக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்
படுகிறது.அதேபோன்று மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களும்
தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். புலம்பெயர் மக்கள் மத்தியில்
இப்பண்டிகை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறவில்லை.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள்(பலகாரங்கள்) தயாரித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்துப் பெறுவர். தீபாவளிஇலேகியம் (சமிபாட்டை இலகு படுத்துவது) அருந்துவதும் மரபு. தமிழ் நாட்டில் தீபாவளி அன்று அனைவரும் அதிகாலை 3 மணிக்கு எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.