ஞாயிறு, மார்ச் 20, 2016

சென்று வாருங்கள் பாலா அண்ணே!

இலங்கை யாழ்ப்பாணத்தில் எங்கள் கிராமமாகிய அல்லைப்பிட்டியில் நான் அறிந்தவரை எந்தப் பொது நிகழ்வு ஆனாலும் அதில் அக்கறையோடு
அந்திமாலையின் 'கவி வித்தகர்' விருதினை எமது பிரதிநிதி நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கியபோது.
பங்கெடுக்கும் ஒருவர் என்றால் அது நம் அனைவராலும் 'பாலா அண்ணை' என்றும் 'பாலசிங்கம்' என்றும் அழைக்கப் படும் சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரெட் அவர்கள்தான். அல்லையூரின் மூன்றாம் வட்டாரத்தில் மட்டுமன்றி இரண்டாம் வட்டாரத்திலும் நடக்கும் விழாக்களில் 'நிகழ்ச்சித் தொகுப்பாளர்' அவராகத்தான் இருப்பார்.அல்லைப்பிட்டியின் பிரபல கவிஞர்கள் பண்டிதர்.க.வ.ஆறுமுகம், பா.சத்தியசீலன் ஆகியோருடன் எனக்கு நேரடியாக எந்தவித அறிமுகமும் இல்லை. ஆனால் இவரோடும் இவரது கவிதைகளோடும் எனக்கு என் பத்தாவது வயதில் இருந்தே அறிமுகம். இவர் எங்கள் ஊருக்குள்ளேயே தனது திறமையைக் காட்டியதால் பெரிய அளவில் நாட்டின் ஏனைய பாகங்களில் அறியப்படாத 'குடத்துள் ஏற்றிய விளக்கு' ஆகிப் போனார். ஈழப் போராட்ட வரலாறு பற்றி மட்டுமன்றி எங்கள் 'அல்லைப்பிட்டிக் கிராமத்தின்' வரலாறு பற்றியும் நன்கு அறிந்த ஒரு மனிதர். சகல வரலாற்றுத் தகவல்களும் இவரது விரல் நுனியில் எனலாம்.
ஈழப் போராட்ட இயக்கங்கள் வெளியிட்ட 'புதிய பாதை', 'களத்தில்', 'பொதுமை', 'விடுதலைப் புலிகள்', 'பதாகை' மற்றும் 'தீப்பொறி' ஆகிய பத்திரிகைகளை சேகரித்து வைத்திருந்தமைக்காக 80 களின் இறுதியில் வடக்கு கிழக்கை ஆண்ட குழுவினரால் யாழ்ப்பாணம் 'அசோகா ஹோட்டலுக்கு' அழைக்கப் பட்டு நையப் புடைக்கப் பட்டார். ஒரு சில வாரங்களில் அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து இந்திய ராணுவத்தின் தளபதி ஒருவரும், மேற்படி குழுவின் பொறுப்பாளர் ஒருவரும் இவரிடம் மன்னிப்புக் கோரினர்.
ரூபாய் பத்தாயிரத்துக்கான பணமுடிப்பை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்வரன் சொர்ணலிங்கம் அவர்கள் வழங்கியபோது.
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட ஒரு மனிதன் 40 வருடங்களுக்கு மேலாக கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தும் யாரும் அதனை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஒரு சில கவிதைகள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வந்ததோடு சரி. இது எங்கள் கிராமத்துக் கலைஞனுக்கு செய்யப் படும் அநீதி என்று உணர்ந்தேன். இவரை ஒரு பொழுதேனும் கௌரவிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு ஏற்றாற் போல வாய்ப்புகள் வந்தது 2010 ஆம் ஆண்டில் 'அந்திமாலை' என்ற எங்கள் இணையத்தை தொடங்கியபோது  "இவரைக் கௌரவித்தல் வேண்டும்" என்ற யோசனையை எனது சகோதரன் 'சதீஸ்வரனும் ' முன் மொழிந்தார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் திரு.பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் நாங்கள் ஒரு சிறிய விழாவை நிகழ்த்தி அன்னாருக்கு 'கவி வித்தகர்' என்ற விருதை வழங்கி கௌரவித்தோம். எமது(அந்திமாலை) இணையம் சார்பாக மேற்படி விருதினை எமது பிரதிநிதி.நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கினார். எம்மால் வழங்கப் பட்ட ரூபாய் பத்தாயிரம் பண முடிப்பினை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எனது சகோதரர். சதீஸ்வரன் சொர்ணலிங்கம் வழங்கினார்.
பெற்றுக் கொண்ட விருதுடன் அமரர்.சந்தியாப்பிள்ளை வில்பிரெட் சேவியர்(பாலசிங்கம்) அவர்கள்.
என் வாழ்வில் நான் பார்த்து வியந்த ஆளுமைகள் இருவர். ஒருவர் 'மல்லிகை' சஞ்சிகையின் ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா அடுத்தவர் அண்ணன் திரு.பாலசிங்கம் அவர்கள். இருவருடைய கல்விப் பின்னணியும் மிகக் குறைவானது ஆனாலும் இருவரும் தமது எழுத்து ஆற்றலில், ஆளுமையில் சிறந்தே விளங்கினர். நாற்பது வருடங்களாக தனது கவிப் பணியில் இடைவிடாது உழைத்த, தனது மண்ணை கடைசிவரை நேசித்து அந்த மண்ணுடனே உழன்று சகல பொதுப் பணிகளிலும் முன்னின்று உழைத்த ஒரு மனிதனுக்கு அத்தகைய ஒரு சிறு கௌரவத்தையேனும் வழங்காமல் விட்டிருந்தால் எங்கள் ஊரின் வரலாறு என்னைப் பழித்திருக்கும் என்பதே உண்மை.
"வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசி, விதி வந்தால் சாவோம்" என்று வாழ்வது அர்த்தமுள்ள வாழ்க்கை அல்ல என்று அமரர்.பாலா அண்ணை அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் ஒன்று படுகிறோம். அவரிடம் அல்லைப்பிட்டியின் வரலாறு பற்றி செவி வழித் தகவல்களும், ஆதாரங்களும் இருந்தன. அவரை ஊருக்குச் செல்லும்போது சந்தித்துப் பேசி 'காணொளி' ஒன்று தயாரிக்க எண்ணியிருந்தேன். விதி முந்திக் கொண்டது. நாம் நினைக்கின்ற அத்தனையும் நடந்து விடுகிறதா என்ன? இருப்பினும் அந்தக் கலைஞனுக்கு என்னால் முடிந்த
அந்திமாலை இணையத்தால் அமரர்.பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுக்கான சான்றிதழ்.
ஒரு கௌரவத்தை அவர் வாழும் காலத்திலேயே அளித்துள்ளேன் என்பதில் எனக்கு ஒரு மன நிறைவு. அன்னார் தனது பிற்காலத்தில் எழுதிய ஆக்கங்களை, கவிதைகளை அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட அனைவரும் 'அல்லையூர் இணையத்திலும்', 'அந்திமாலையிலும்' படித்திருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.
சென்று வாருங்கள் பாலா அண்ணே! அல்லைப்பிட்டியின் மண் மறவாத மனிதர்களில் நீங்களும் ஒருவராக என்றென்றைக்கும் இருப்பீர்கள்.
அன்னாருக்கு எனது இதய அஞ்சலிகளைச் சமர்ப்பிப்பதோடு, அவரது பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே; மரணத்திலும் என்னை மறவாதிருங்கள்"

ஆழ்ந்த இரங்கலுடன்
அல்லையூரின் மைந்தர்களில் ஒருவன்
இரா.சொ.லிங்கதாசன்
டென்மார்க்.

1 கருத்து:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பணி
வாழ்த்துகள்

கருத்துரையிடுக