சனி, ஆகஸ்ட் 13, 2011

பயனில சொல்லாமை…


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

பார்த்துப் பார்த்து ரசிக்கும் காதலி போல பேணிய என் அழகுப் பூந்தோட்டம். என் நேரம் முழுவதும் கொள்ளையடிக்கும் பல வர்ண மலர்கள் விரிந்து குலுங்கும் நந்தவனம். குருவிகளின் சத்தமும், கிளிகளின் பேச்சுமென மனம் மயங்கும் சூழல்.
பவள மல்லிகை நிழல், மல்லிகைப் பந்தல், அழகிய நீரூற்று, ஊஞ்சல், சறுக்கி விளையாடும் ஏணி, குழந்தைகள் விளையாட நீர்த்தொட்டி எனப் பலவாகப்  பார்த்துப் பார்த்துச் செய்தது.
குறோட்டன் செடிகள் மட்டும் 52 வகையாக உள்ளது.
மழலைகளோடு விளையாடும் மகிழ்வு போலத்தான், பூந்தோட்டத்திலிருப்பதும்  எனக்கு, மனம் கொள்ளாத திருப்தி தந்திடும். ஊஞ்சலில் இருந்து கவிதைகளும் எழுதுவேன். குளிர் நிலவு காணும் மனத் திருப்தி போல மன நிறைவு தரும் பூந்தோட்டம்.
தெரிந்தவர்கள் தமது பிள்ளைகளுடன் வந்து நந்தவனத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து போவார்கள். சிற்றுண்டி தேநீருடனும் வந்து நீண்ட நேரம் கழிப்போரும் உள்ளனர்.
என் அப்பாவை நம் கிராமத்தில் நிலப் பிரபு என்று தான் கூறுவார்கள். இளவட்டங்கள் நான் சிறுமியாக இருந்த போது ” உங்க அப்பர் லாண்ட் லோட் தானே!..” என்று என்னைக் கேட்டதின் அர்த்தம் இப்போது நன்கு புரிகிறது. அவர்கள் வயிற்றெரிச்சலில் கேட்டது எனக்கு சாதாரண கேள்வியாக அன்று தெரிந்தது.
அப்பாவின் காணியில் தான் இந்தப் பூந்தோட்டமும்.
என்னையும் பூந்தோட்டக்காரி என்று தான் இன்று அழைக்கிறார்கள்.
என் தோழி நர்மதா நீண்ட நாளாக பூந்தோட்டத்தைப் பார்க்க வருவதாகக் கூறிய படியே இருந்தாள். இன்று வந்து விட்டாள்.
நாம் நந்தவனம் முழுதும் சுற்றிப் பார்த்து ஓய்ந்த போது தெருவோடு போன கிராமத்தவர் ஒருவர் உள்ளே வந்து தாம் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.
இவரை நான் பாடசாலை செல்லும் போது வழியில் பார்த்து தலையாட்டியுள்ளேன். நான் அருகுப் பாடசாலையில் ஆசிரியை என்புதும் அவரறிவார்.
இருவரும் சுற்றிப்பார்க்கும் போது..” ஏன் நீரூற்றை இந்த ஓரத்தில் வைத்திருந்திருக்கலாமே!..  ஊஞ்சல் இருக்குமிடம் தவறு. அதை மூலையில் போட்டிருக்கலாம். அலரிப் பூக்கன்றுகள் மறு பக்கம் நாட்டியிருக்கலாம். சிறுவர்களுக்கு  நீச்சல் போல பெரியவர்களுக்கு ஏன் இல்லை? ஒன்று போட வேண்டும்.” என்று மனம் போனபடி கருத்துக் கூறிச் சென்றார். போகும் போது ”நன்றாக இதை வைத்துப் பராமரிக்கிறீர்கள்..” என்றும் கூறிச் சென்றார்.
நர்மதா பிள்ளைகளோடு தன் பொழுதைப் போக்க, நானும் பின்னர் அவளுடன் இணைந்தேன். வந்தவர் கூறிய கருத்துகளை நர்மதாவுடன் பகிர்ந்து கொண்டேன்.
”நீர்க் குழாய்கள் செல்லும் வழி, கற்பாறையில்லாத மண், எனது வீட்டின் பாதுகாப்புப் போன்ற பல வழிகளை நாம் சிந்தித்துத் தானே இவைகளை உருவாக்கியுள்ளோம். பார்த்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தானே!
ஒருவர் தன் பாதையில் சுதந்திரமாக தன் விருப்பப்படி மகிழ்வாகச் செல்ல வேண்டும். கந்தன் சொல்வான், வள்ளி சொல்வாள் தங்கள் பார்வையின் கோணத்தில். உடைமையாளர்களின் பார்வை வியூகத்தை இவர்கள் அறியமாட்டார்கள்.
நாம் எத்தனை இழந்திருப்போம், எதைப் பெற்றிருப்பொம் என்பதெல்லாம் இவர்களுக்கெங்கெ புரியப் போகிறது! மிகச் சுலபமாகக் கூறிவிட்டுச் செல்கிறார்”… என்றேன்.
”..விட்டுத் தள்ளு வாணி!…நாம் கல்யாணிப் பூங்கொடியின் கீழ் போய்க் காற்று வாங்குவோம்..வா!..” என்று நர்மதா அழைக்க நாம் இடம் மாறினோம். செறிப் பழங்களைச் சுவைத்தபடி குழந்தைகள் எம்மோடு ஓடி வந்தனர்.
என் அழகான பூச்சொரிந்த பாதையில் காக்கா எச்சமும், கோழி எச்சமும் வரத்தான் செய்கிறது.
என் பூந்தோட்டம், நான் கடினமாக உழைத்துப் பராமரிக்கிறேன். தெருவில் போவோர் வந்து தெளிக்கிறார்கள் வார்த்தைகளை.
திருவள்ளுவர் கூறுகிறார்…

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது.)
இன்னும் கூறுகிறார்….

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சியவர்.
( மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர் பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.)
அதிகாரம் 20.

4 கருத்துகள்:

RAMYA DK சொன்னது…

That is abeautiful.

vinothiny pathmanathan dk சொன்னது…

பாராட்டுக்கள் .உங்கள் கட்டுரை ஒரு பூங்காவை சுற்றி பார்த்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது .உங்கள் பூங்காவை பார்க்கும் ஆவல் எனக்கும் ஏற்பட்டுள்ளது .

வேணுகோபால், தஞ்சாவூர் சொன்னது…

ஆஹா, பிரமாதம்.கட்டுரை ரொம்பவும் நன்றாகவே இருக்குதுன்னு தெரியுதுங்க.
வாழ்த்துக்கள் வேதா மேடம்.

பெயரில்லா சொன்னது…

இனிய காலை வணக்கம். 9.19 ஆறுதலாகக் கணனியைத் திறந்தேன். மெயில்கள் பார்க்க முதல் அந்திமாலையில் என்ன ஆச்சரியம் உள்ளது என்று பார்த்தேன் . முதலில் முகப்பு ! ஓ! மாத்திட்டீங்களா....மிக அழகாக இருக்கே!.. என்று மகிழ்வாக இருந்தது. வாழ்த்துகள் அந்திமாலை. பின்பு குறள், அடுத்து பயனில சொல்லாமை. என்ன! எனது தலைப்பாக உள்ளதே!... என்று வாசித்தேன். புதிதாக வாசிப்பது போல வாசித்தேன். என் மனதை நெருடிய சம்பவத்தை வைத்து, நாங்கள் கழுத்துறை ஹொறன, நியூச்செட்டல் எஸ்டேட்டில் வசித்த போது இருந்த என் மனம் கவர்ந்த பூந்தோட்டத்தை வைத்து, என் சிறு வயது ஞாபகங்களோடு எழுதினேன். முழு உண்மைச் சம்பவம் தான். (படங்கள் கூகிள் படங்கள்) அந்திமாலைக்கு நன்றி. இது குட்டி ஆச்சரியம் இன்று காலையில் எனக்கு. எல்லோருக்கும் இனிய ஞாயிறு அமையட்டும்.!

கருத்துரையிடுக