திங்கள், ஆகஸ்ட் 22, 2011

தாய்லாந்துப் பயணம் - 15


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
சைனா ரவுணைத் தாண்டியதும் அருகிலேயே flower market  பூக்களின் சந்தை வந்தது.  இதை pak khlong talat என்று கூறுவர்.
60பது வருடமாக இச் சந்தை நடக்கிறதாம். தெருவின் வலது இடது பகுதியில் மிகப் பரந்த நீண்ட தூரத்திற்கு பூக்கடைச் சந்தையாகவே இருந்தது. சியாங்மய், சியாங்றய் என்ற குளிரான பிரதேசங்களில், சுற்று வட்ட மாநிலங்களில் இருந்தும் எல்லா விதமான பூக்கள் அதிகாலையில், படகிலும், பேருந்துகளிலும் இங்கு வருகிறதாம். மிக ஆச்சரியமாகவே இருந்தது. இங்கும் வாய் பிளந்து அம்மாடியோவ்! என்றேன்.
இப்போது புரிந்தது முதலாவது வாடி வீட்டில் கட்டிலில் பூவும் மேசையில் பூவும் எப்படி வந்தது என்று. பெரிய வாடிவீடுகளுக்கு பதிவு செய்து அதாவது  order  பண்ணி பூக்களை இங்கிருந்த தான் எடுப்பிக்கிறார்கள் என்பது புரிந்தது.    
தெருவில் வாகனம் மெதுவாகப் போனாலே தரிப்பு இடத்திற்கு ஓடி வந்து மல்லிகைப் பூமாலையை விற்பனைக்கு நீட்டுகிறார்கள். காரணம் இறை பக்தி தான். இல்லாவிடில் இந்தியா மாதிரி மனைவிக்குப் பூக் கொண்டு போக இருக்காதல்லவா? 
அரச மாளிகை அனைவரும் பார்க்க வேண்டியதும் முக்கியமான சுற்றுலா இடமுமாகும். காணக் கண் கோடி வேண்டும்! அத்தனை அழகிய கட்டிடங்கள், தொழில் நுட்ப, கலைத் திறமைகள் கொண்டவை.
றோயல் கிறாண்ட் பலஸ் 218,000 சதுர மீட்டர் இடத்தில், சாயோ பிறையா நதி தீரத்தில் பாங்கொக்கில் உள்ளது. சக்ரி பரம்பரையில் ராமா ஒன்று அரசுக்கு வந்த போது அன்று மறுகரையில் தோண்புரியிலிருந்து இக் கரைக்கு அரசினை மாற்றினார்கள். மந்திரிகள் காரியாலயம், பாதுகாப்பு அமைச்சு, அரசர் குடியிருக்கும் மாளிகை என பல காரியாலயக் கட்டிடங்களுடன், சுற்றி வர வெள்ளை மதிலுக்குள் அமைந்த மாளிகை இது.
1783ல் மதில் சுவர்கள் கட்டப்பட்டது. 3 பிரதானமான அழகிய கோபுரங்களுடன்
வேறும் பல சிறு கோபுரங்களுடன் அமைந்த மாளிகை இது. தங்க நிறக் கோபுரம் இலங்கைப் பாணியிலும், மற்ற இரண்டும் தாய்லாந்து கம்போடியா மாதிரியிலும் அமைந்துள்ளது.  கோபுரங்கள் மினுங்கும் கற்கள், கண்ணாடிக் கற்கள், தங்கநிற பீங்கான் கற்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 10 துர்த்தேவதைகள், குரங்குகள், காவலர்கள், உருவங்களும் சுவர்களில் செதுக்கியுள்ளது.
முன்பு 158 வருடங்களாக அரசர்கள் இங்கு வசித்து வந்தனர். 20ம், நூற்றாண்டிலிருந்து இங்கு அரசர்கள் வாழ்வதை நிறுத்திக் கொண்டனர். முழுக்க முழுக்க உல்லாசப் பயணிகளுக்காக 3 சாலைகள் திறந்துவிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய – தாய்லாந்து தொழில் நுட்பத்தில் கட்டிடம் வித்தியாசமான கூரையுடன் உள்ளது. இந்த வெள்ளை மதிலுக்குள்ளே தான் அரச தேவாலயமான Emareld புத்தர் கோயிலும் உள்ளது. இக் கட்டிடங்களும் இந்திய சினிமாவில் காதல் காட்சிகளில் வந்துள்ளது. இங்கு மரியாதையான ஆடைகளுடன் தான் போக முடியும். மிகவும் கட்டையான ஆடைகளுடன் போக முடியாது. இதைக் கண்காணிக்க உத்தியோகத்தர் உள்ளனர்.
இந்த அரசமாளிகை ரட்னா கோசின் தீவு அயோத்தியா மாளிகைகளின் மாதிரியில் கட்டப்பட்டுள்ளது. முழுவதுமான தாய்லாந்தின் பிரபலமான, மிகப் பரந்த தங்க நகரமான பாங்கொக்கின் அடையாளம் (சிம்போல்) இந்த றோயல் அரச மாளிகையாகும். புத்த மத மேன்மையுடைய தாய்லாந்து மக்களுக்கு, நான்கு சுவருக்குள் உள்ள, இந்த எமரல்ட் புத்த கோயில் மெக்காவாக உள்ளது. 45 செ.மீ நீளமான புத்தர் சிலை பச்சை நிற  jade ல், பச்சை ரா கல்லில் ஆனது. இதற்கு தங்கத்தில் 3 காலநிலைக்குரிய ஆடைகளுடன் தேவாலயத்தில் நல்ல பீடங்கள் அமைத்துப் பத்திரப் படுத்தியுள்ளனர்.
எமரெல்ட் புத்த கோயிலுக்கு ஒரு சரித்திரம் உண்டு. பழைய கட்டுக் கதையின் படி 43ம் நூற்றாண்டு கி.முன்னர் பாடலிபுரத்தில் நாகசேனா எனும் இடத்தில் இச் சிலை உருவாக்கப்பட்டது. பாடலிபுரம் இன்று பாட்னா (Patna) என்று கூறப்படுகிறது. பாடலிபுரத்தில் 300 வருடம் இச் சிலை இருந்த பின் ஒரு பொது யுத்தம் வந்த போது சிலையைப் பாதுகாக்க இச் சிலை சிறீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 457ம் ஆண்டு பர்மிய அரசன் அனுருத் ஒரு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பி தனது நாட்டில் புத்த சமயத்தை உருவாக்க, மத நூல்களும், எமரெல்ட் புத்த சிலையையும் தனக்குத் தரும்படியாகக் கேட்டானாம். இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கப்பலில் இதை எடுத்துச் செல்லும் போது புயல் ஏற்பட்டு, கப்பல் பாதையைத் தொலைத்து, கம்போடியாவில் கப்பல் நிலையூன்றியதாம். 1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது இந்த புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்தின் அயோத்தியா நகரத்துக்கு எடுத்துச் சென்றனர்
.—பயணம் தொடரும்– —–

6 கருத்துகள்:

T.Nathan, Denmark சொன்னது…

Very Good

Ramesh France. சொன்னது…

Excellent.

vinothiny pathmanathan dk சொன்னது…

very nice

Seelan சொன்னது…

Thanks,Vetha you are explin to all bildinks and athar thinks from Thailand

பெயரில்லா சொன்னது…

வாசிக்கும் நேயர்கள் தயவு செய்து உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். உங்கள் பதிவுகள் எங்களை ஊக்குவிக்கும், இன்னும் எழுதத் தூண்டும். கருத்திட்ட அன்பு நெஞ்சங்களுக்கு மிகுந்த நன்றி. இறை ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்

Malar சொன்னது…

Very good impomation

கருத்துரையிடுக