தொலைத்தவை எத்தனையோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைத்தவை எத்தனையோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 24, 2012

தொலைத்தவை எத்தனையோ - 7

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

வளவு, நிலம் என்று அன்று வாழ்ந்த வாழ்வு இன்று எப்படியெல்லாம் மாறிவிட்டது. தாய் நிலத்தில் வாழ்ந்த வாழ்வைக் கனவிலே தான் காண முடிகிறது. (போகலாமே, பார்க்கலாமே என்கிறீர்களா!)
அங்கு வாழ்நிலையே மாறிவிட்டது.
கணனியில் பல படங்களைப் பார்க்கும் போது நினைவு பொங்கியெழுகிறது. ஏக்கம் பெருகுகிறது.
சமீபத்தில் இலுப்பம் பூவைப்பார்த்தேன். எத்தனை நினைவுகள்!….
நான் வாழ்ந்த வீட்டின் முன்புறத்தில் பக்கமாக பெரிய வளவு. அதில் பெரிய இலுப்பை மரங்கள் 2ம், சிறியதாக வேறும் இருந்தது.
இதில் பூக்கள் பூத்து விழும் போது, நிலத்தில் முத்து சிதறியதான அழகு. 
கொட்டிக் கிடக்கும் அதனழகைப் பூரணமாக ரசிப்பதற்காகவே தம்பி தங்கைகளுடன் சேர்ந்து மரத்தின் கீழே சருகுகளைக் கூட்டி, கற்களைப் பொறுக்கி, பெரிய புற்களை வெட்டி, அழகாக்கி மாலையில் எதிரே அமர்ந்து ரசிப்போம். அதிகாலையிலும் பார்க்கும் போது மனமகிழ்வாக இருக்கும். நாமாக முன்னெடுக்கும் இந்த வேலைகளிற்கு அப்பா மறைமுகமாக ஆதரவு தருவார்.
உரித்துச் செதுக்கிய குட்டிக்குட்டித் (மினி மினித்) தேங்காய் –  முடியோடு இருப்பது போன்ற தோற்றம் கொண்டது இலுப்பைப் பூ. 
இது மட்டுமா!  இன்னம் பல….
அப்பா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ”..பேபி (Baby – my village name) வருகிறாயா கொச்சாட்டிக்கு? (பனை வளவிற்கு)” என்று கூப்பிட்டதும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பேன். ( எனக்கு 8 வயதிற்குள் தானிருக்கும்.)
”…ஏனப்பா?…” என்று கேட்டபடி போவேன். 
”…வாவேன்…” என்றபடி கூட்டிப் போவார்..
அங்கு போனதும் என்னை மறந்து புல்லுப் பூக்களை நான் பிடுங்கிச் சேகரிப்பேன். கரடு முரடற்ற, வழவழப்பான கற்களைச் சேர்த்துப் பொறுக்குவேன். ( அவை கொக்கான் வெட்டவும், வேறு விளையாட்டிற்கும் உதவும்). 
இப்படி என்னை மறந்து நான் உலாவ மறு பக்கம் அப்பா இரட்டைக் கட்டில் போட்டது போல ஈரமண்ணை சேர்த்து அணைத்து  உயரமான பாத்தி ஒன்று செய்திட்டார்.
எப்படி இப்படி அப்பாவால் முடிகிறது! என என்னுள் நான் ஆச்சரியப்பட்டேன். 
அப்பா மெலிந்த தேக வாகு கொண்டவர்.
சில வேளைகளில் தான் அப்பா இப்படிச் செய்வார்.  
மற்றும் வேளைகளில் சின்னப் பொடி வந்து கூலிக்குச் செய்து தரும். அப்போதும் சின்னப் பொடிக்கு தேனீர் கொடுக்க என்று நானும் வீட்டுப் பெரியவர்களுடன் கூடச் சென்று செய்யும் வேலைகளைப் பார்ப்பதுண்டு.
 
மிகுதியை  மறு அங்கத்தில் பார்ப்போம்.

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

தொலைத்தவை எத்தனையோ - 6


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
ஒவ்வொருவரும் தமது ஆரம்ப, அரிச்சுவடி ஆசிரியர்களைப் பற்றி விரிவாகக் கூறும் போதும், அவர்கள் பாசம், நேசம் என்று  விமரிசிக்கும் போதும் நான் ஏக்கமடைவேன், கவலையடைவேன்.
ஆறுமுக நாவலர் ஆரம்பித்த பாடசாலை அது. அன்று சுண்ணாம்பு, சீமெந்துச் சுவராலான கட்டிடம். கிடுகு ஓலையால் வேயப்பட்ட கூரையும் கொண்டது. நிலம் மண்ணாலானது. நாங்கள் இருந்து படித்தது வாங்கும் மேசையும் தான். சிலேட் இல்லாதவர்கள் மண்ணை அள்ளி மேசையில் போட்டு ‘அ’ னா எழுத வேண்டும்.
இன்று மகிந்த ராஐபக்ச வந்து சமீபத்தில் திறந்து வைத்த புதுக் கட்டிடத்தோடு கொண்ட பாடசாலை. பழைய கட்டிடம் இருக்கிறதோ தெரியாது. (ஆனால் சுவாமிநாதர் மண்டபம் இருக்கிறதாம்.)
ஐந்து வயதில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர்ப்பார்கள். எங்கள் பெரியம்மா எங்களைச் (பெரியப்பா வீட்டுப் பிள்ளைகளையும் சேர்த்து) சேர்க்கும் போது  எனக்கு 4 வயதை ஐந்து என்று கூறிச் சேர்த்தார்கள். சேர்த்த பின்பு தங்கள் வீட்டில் வந்து இதைக் கூறிப் பெரியம்மா சிரித்தார்கள். ( அது வேறு விடயம்)
எனது அரிவரி வகுப்பு வாத்தியார் ஊர்ப் பெண்மணி, நன்கு தெரிந்தவர் தான். அவரை நினைத்தால்….
”…ஏய்! இங்கே வா!…உனக்கு எத்தனை தரம் கூறுவது?
    நீ  என்ன செய்கிறாய்?…..”
போன்ற ஒருமை வார்த்தைகளே நினைவிற்கு வரும். 
இதில் தவறில்லை, நல்ல தமிழ் தானே  என்கிறீர்களா?….. சரி தான்.
நாங்கள் பிறந்ததிலிருந்து வாருங்கள், போங்கள், நீங்கள், நாங்கள் என்று மரியாதையாகப் பேசிப் பழகினோம். தெருவில் போகும் தெரியாதவர்களையும் அப்படித் தான் அழைத்துப் பேசுவோம். நாம் அப்படிப் பேசினால் அவர்கள் எம்மை ஒருமாதிரிப் பார்ப்பார்கள், அது வேறு விடயம்.
இங்கு பாடசாலையில் அரிவரி வாத்தியார் இப்படிப் பேசியதே ஒரு வெறுப்புப் போல தெரிந்தது. எனக்குப் பிடிக்கவே இல்லை. 
நீ என்ன செய்கிறாய் என்று என்னைக் கேட்டால் இவ என்ன என்னை நீ என்கிறா என்பது போல பார்ப்பேன். இப்போ நினைத்தாலும் அது தான் நினைவில் வருகிறது. (நீ, வா, போ என்பது தான்.).
நெருக்கமான ஒரு தொடர்பு இருந்ததாக சிறிதும் நினைவே இல்லை.
ஒரு நாள் பாடசாலையில் அழுதபடி நின்றேன். அப்பப்பா(முருகேசு சுவாமிநாதர்) பாடசாலை நிர்வாகி (மானேஐர்) என்பதால் 10மணியளவில் மேற்பார்வைக்காக வந்து காரியாலய (பெரிய வாத்தியார்) அறையில் கையெழுத்துகள் இடுவார்.
பின்பு வகுப்பறைகளைச் சுற்றிப் பார்க்க வரும் போது நான் அழுதபடி நின்றதைக் கண்டார். ஏன் அழுகிறா என்ற போது ” என்னவோ தெரியாது அழுதபடி இருக்கிறா” என்றார் வாத்தியார். ”நான் கூட்டிப் போகிறேன்”  என்று கை பிடித்துக் கூட்டி வந்தார் வீட்டிற்கு.
அப்பப்பா (கண்ணாடியப்பா) கை பிடித்துத் தெருவிலே துள்ளித் துள்ளி நடந்து வந்ததும், என் அழுகை போன இடம் தெரியாததும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது நாலு, நாலரை வயதிருக்கும்.
இன்று அதே போல நான் பிள்ளைகளோடு 14 வருடங்கள் வேலை செய்தேன். அவர்களை ஆதரவாக அணைப்பதும், மடியில் இருத்தி பேசுவதும் என்று எவ்வளவு இனிமையான அனுபவங்கள்.
எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர. தொலைத்தவை தான்.
காரை பெயர்ந்த நாவலர் கட்டிடச் சிறு பகுதி காண்கிறீர்கள்.

ஓட்டுக் கூரையிருக்கிறது, முன்பு கிடுகு ஓலை வேய்ந்திருந்தது. இது பக்கத் தோற்றம். பின்னர் கட்டப்பட்ட நாவலர் சிலை இது.


திங்கள், ஜனவரி 23, 2012

தொலைத்தவை எத்தனையோ - 5


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
திறமையறிந்து கதாநாயகன் வேடம் தரப்பட்டதை என் குழந்தை மனம் அறியவில்லை.
இங்கும் அவர்கள் (குவீனி- தாமரை) இணை பிரியாத நண்பர்கள் தானா? நான் தனியாகக் கோவலனா!… என்று என் மனம் இரகசியமாக விசும்பியது, புழுங்கியது. (நான் மௌனமாகத் திரிந்தாலும் அவர்கள் என்னை ஒதுக்கியது என் மனதை வெகுவாகப் புண்ணாக்கியுள்ளது – என்பது இப்போது புரிகிறது)

ஒத்திகைகள் நன்கு நடந்தது. எமது வரிகள் எல்லாம் மனப்பாடமும் செய்தாகிவிட்டது. சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போது, நான் நாடகத்தில் பங்கு பெறமாட்டேன் என்று மறுக்கத் தொடங்கினேன்.
ஆசிரியை, அவரது தங்கை, பக்கத்து வீட்டு அண்ணை (அவரும் நித்திரை விழிக்க வர இருந்தவர். கெந்திப் பிடித்து விளையாடும் போது சூரப்புலியாகக் கெந்துவார். நீண்ட கால்கள்) எல்லோரும் ” ஏன் என்ன காரணம்?” என்று தூண்டித் துருவி கேட்டனர். நான் பயங்கர மௌனம். முடியாது முடியாது தான் பதில்.
ஆசிரியரின் தங்கை கேட்டா ” உமக்கு நல்ல பாத்திரம் தானே தந்துள்ளோம்” என்று. வரமாட்டேன் வரவில்லை என்பது தான் என் பதில். தாமரையின் அக்கா சுகி தான் தாமரைக்கு நடனம் பழக்கியது. அவ கூட தனது திறமையைக் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ” ஏனாம் பேபி வரமாட்டுதாம்? என்ன காரணம்?;” என்றாவாம்.
சிவராத்திரியும் முடிந்தது. 
நித்திரை விழித்தார்களாம், நான் போகவில்லை. நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், (அண்ணனிடம்) நடக்கவில்லையா என்று விசாரித்தேன். ” பேபி முடியாது என்று விட்டதே” அதனால் நாடகம் நடக்கவில்லை என்று பக்கத்து வீட்டு அண்ணை கூறினார். அதைப் பற்றி எனக்கு சாதக, பாதக சிந்தனையே தோன்றவில்லை. செய்தியாகக் கேட்டது போல இருந்தது.
அவ்வளவு தான். இது என் மனக் கணனியில் ஒரு மறந்த சொத்தாகிவிட்டது.
பின்பு ஒரு காலத்தில் இவைகளை எண்ணிய போது ஏன் இப்படி நடந்தேன் என்றால் 
என் சின்ன மனம் அவர்களை, கத்தியின்றி, இரத்தமின்றிப் பழி வாங்கியுள்ளது. யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை இது நானாக எடுத்த செயல். யாருடனும் எதுவும் பேசாது மௌனமாக நடத்திய போர். இது வீட்டாருக்கும் தெரிய வரவில்லை. நான் கூறவும் இல்லை. என்னுள் இருந்தவை, இன்று எழுத்தில்.
பாருங்களேன் மனம்!…..அது கண்ணாடி! ..கீறலும், நொறுங்குதலும்!… செயல் தாக்கமும் பிரதி நடவடிக்கையும்!…எத்தனை விசித்திரமானது! எப்படி இயங்குகிறது…..யாருக்குமே… தெரியாது… இது சரியா..பிழையா..எப்படி நடந்தது என்று…..

இன்று வரை இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் நானறிந்த வரை மிகக் கவனமாக அவர்கள் மனதைக் கையாளுகிறேன். பிள்ளைகளை ஒதுக்குதல், வேற்றுமை காட்டுதல் என்பது மாபெரும் கொடுமை என்பதற்கு இது நல்ல உதாரண அனுபவம்.
வன்முறைகள் உலகில் மலிவதற்கும் நல்ல அடிப்படைக் காரணங்கள் உண்டு. காரணங்களைத் தேடிக் களையாது தண்டனையை நிறைவேற்றவே உலகு துடிக்கிறது.
எனது தமிழ் இந்தளவு வளர்ந்ததற்கு பாக்கியம் ஆசிரியர் அடிப்படைக் காரணமாகிறார். பிழை விட்டால் குட்டு, பென்சிலோடு காதைப் பிடித்து பல்லைக் கடித்தபடி திருகுவார். அழுததும் உண்டு.
ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் உங்களுக்கு என்ன மிருகமாகப் பிறக்க ஆசை என்று முழு வகுப்பையும் கேட்டார். திகைப்பு! என்ன பதில் கூறுவது!…மிருகங்களின் ராஜா சிங்கம், எனக்கு சிங்கமாகப் பிறக்க பிடிக்கும் என்றேன். ஏன் இப்படிக் கூறினேன்! எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இன்று கேட்டால் சிங்கம் பற்றிய எந்த எண்ணமும் ஆர்வமுமே இல்லை. மானாகப் பிறக்க ஆசை என்பேன், மான் அழகு என்பதால்.
அக் காலத்தில் வகுப்பில் நான் தான் முதல், இக்காலத்தில் தான் ஸ்கொலசிப் பரீட்சையிலும் சித்தி பெற்றதும், ஸ்ரான்லிக் கல்லூரிக்கு ஆறாம் வகுப்பிற்கு மாறியதும்.
முதுமை வந்து பாக்கியம் ஆசிரியர் காலமாகி விட்டார். நான் மூன்று நூல்கள் செய்தும் அவரிடம் ஒரு முன்னுரை பெற முடியவில்லை என்பது எனக்குப் பெரிய குறை தான்.
தாமரை – செல் விழுந்து இறந்து விட்டார். குவீனிக்கு நல்ல வாழ்வு இல்லை, பிள்ளைகள் இல்லை, உறவுகளோடு வாழ்கிறார். (இவர்கள் பெயரை மாற்றியுள்ளேன். இவர்கள் உறவு எப்போதுமே என்னுடன் இப்படித் தான்.)
படிக்கப் போனவீடு ஊரில் கல் வீடாகிக் காட்சி மாறிவிட்டது.  அன்று போல எதுவுமே இல்லை.
அம்மா, அப்பா, சகோதரர்களோடு வாழ்ந்த வாழ்வு, அத்தனையும், அத்தனையும்…
தொலைத்தவை எத்தனையோ!…..
துன்ப அகராதி துடைத்தழிக்க
நண்பனாக்கிய அழகுத் தமிழ்.
என்னைக் கவலைகள் தின்னத்தகாதென
கன்னற் தமிழைச் சரணடைந்தேன்.

வியாழன், டிசம்பர் 29, 2011

தொலைத்தவை எத்தனையோ - 4

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

(இது ஒரு தொடர் இடுகை)
அப்போது எனக்கு எட்டரை- ஒன்பது வயதிருக்கும். 
நாவலர் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்தேன். பாடசாலை ஓரு மணியளவில் விடும். வீடு வந்து ஆடை மாற்றி உணவு உண்ட பின் ஒரு ஆயிரம் மீட்டருக்கு உள்ளாக இருக்கும் பாக்கியம் ஆசிரியை வீட்டிற்கு, தம்பி, தங்கைகளுடன் படிக்கப் போவோம்.
நாங்கள், பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள், இன்னும் பாக்கியம் ஆசிரியையின்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்று, வயது, வகுப்பிற்கு ஏற்றபடி சேர்ந்து படிப்போம். பாக்கியம் ஆசிரியை எமது நாவலர் பாடசாலையில் ஆசிரியை, எமக்கு உறவினரும் கூட.
பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள், வேறாகவும் படிப்போம். விளையாடுவோம். மாலை ஐந்து, ஆறு மணி வரை நின்று வீடு வருவோம்.
நானும் குவீனும், தாமரையும் ஒன்றாகப் படிப்போம். படிக்கும் நேரம் தவிர எப்போதும் குவீனும், தாமரையும் சேர்ந்து குசுகுசுப்பார்கள். சேர்ந்து விளையாடுவார்கள்.  ஏனோ என்னை ஒதுக்கி விடுவார்கள். (நான் அவர்களிலும்  ஒரு வயது சிறியவள்.)
நான் போராடும் குணம் கொண்டவளில்லை. என் பாட்டில் சுற்றியுள்ள மல்லிகைப் பந்தலை,  முற்றத்துப் பூக்கன்றுகளை ரசிப்பேன். மற்ற பிள்ளைகளுடன் பாக்கியம் ஆசிரியை வீட்டுக் கோழிக் குஞ்சுகள் நிறமடித்திருப்பதை ரசித்து பருந்து தூக்க வர, கூச்சலிட்டு விரட்டுவோம். அடி பெருத்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவோம். இப்படிப் பொழுது போகும்.
பாக்கியம் ஆசிரியையும், அவரது தங்கையும் இதைக் கவனித்து, சேர்ந்து படிப்பவர்கள் சேர்ந்து விளையாடவும் வேண்டும் என்று, குவீனையும், தாமரையையும் நன்கு ஏசினார்கள் ” நீங்கள் இப்படி பேபியை ஒதுக்கக் கூடாது” என்று.  (எனது வீட்டுப் பெயர், பிறந்ததிலிருந்து பெற்றவர், ஊரார் அறிந்திருப்பது Baby தான்.)
எனக்கு அது மகிழ்வாக இருந்தது. மாற்றம் வருமென எதிர்பார்த்தேன், காத்திருந்தேன். ஆனால் அது தொடர் கதையாகவே இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் அம்மாவிடம் இலேசாகக் கூறியிருப்பேன்.  அம்மா,அப்பா ” சமாளித்து நட!”  என்றிருப்பார்கள். (இது எனக்குச் சரியாக நினைவில்லை)
ஒரு சிவராத்திரி வந்தது. அதற்கு நித்திரை விழிப்பது 'சிவ புண்ணியம்' என்பர். அங்கு வரும் பிள்ளைகள் நாங்கள் அதைக் குதூகலமாகக் களிக்க, பாட்டு நாடகம் என்று தயாரிக்கப் பட்டது.
பாக்கியம் ஆசிரியை கோவலன் கண்ணகி நாடகம் போட எங்களைத் தயாரித்தார். எனக்கு கோவலன் வேடம் தரப்பட்டது.
தாமரை மாதவியாக (சபையில் நடனமாட வேண்டும்). குவீனி மாதவிக்கு சாமரம் வீசும் சேடிப் பெண்ணாக. (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)
(மிகுதி அடுத்த அங்கத்தில் தொடரும்)

வியாழன், டிசம்பர் 08, 2011

தொலைத்தவை எத்தனையோ - 3


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


கூப்பிடு தூரத்தில் தான் எனது தந்தையின் தாய் தந்தையர், கண்ணாடியப்பா – ஆச்சி, என் மாமிமார் சித்தப்பா பெரியப்பாவை வாழ்ந்தோம்.
மாமிமார் (கடந்த முறை பகுதி 2ல் படங்கள் போட்டிருந்தேன்.) சங்கீதம் படித்தனர். சங்கீதப் பரீட்சையெல்லாம் எழுதினார்கள். பரீட்சை பற்றி கிறேட் வன், ரூ (grade one two) என்று அவர்கள் பேசியது என் காதில் விழுந்துள்ளது. நான் சிறு பிள்ளை (5, 6 வயதிருக்கும்.) அதன் விவரங்கள் புரியவில்லை.
இவர்கள் அரசகுமாரிகள் போலத்தான் வாழ்ந்தார்கள்
சாம்பசிவம் வாத்தியார் என்பவர் சனிக்கிழமைகளில் சைக்கிளில் வீட்டிற்கு வந்து சஙகீதம் சொல்லித் தருவார். என்ன வேலையிருந்தாலும், அம்மா கூப்பிட்டாலும் கேட்காமல் சனிக்கிழமையானால் மாமி வீட்டிற்கு ஓடி விடுவேன். ஒரே வீட்டையே ஆச்சி வீடு, அப்பு வீடு, மாமி வீடு என்று நினைத்த நேரம் நினைத்த மாதிரி பேசுவோம்,
வாத்தியார் வர மாமிமார் வெளி விறாந்தையில் உயரமான திண்ணையில் பாய் கொண்டு வந்து விரிப்பார்கள். பாயின் ஒரு நுனியில் வாத்தியார் இருப்பார். மறு நுனியில் இரண்டு மாமிமாரும் சப்பாணி கொட்டி இருப்பினம். மாமியின் ஆர்மோனியப் பெட்டியுடன் தான் வகுப்பு நடக்கும். நான் மிகச் சிறு பிள்ளை,  ஒரு ஓரமாகச் சப்பாணி கொட்டி முழுப்பாடமும் இமை வெட்டாது கேட்டு ரசிப்பேன்.
வெள்ளிக் கிழமை இருட்டிய மாலை நேரங்களில் ”வா! பேபி! (baby) தேவாரம் படிப்போம்!” என்று மாமி வீட்டில் வந்து தன் வீட்டிற்குக் கூட்டிப் போவா. மாமி ஆர்மோனியம் வாசிக்க நாமிருவரும் மாமியோடு பாடுவோம். சிலவேளைகளில் என் தம்பி, தங்கைகளும் என்னோடு வருவார்கள். மாமி எழுந்து போக நாங்களும் ஆர்மோனியம் வாசிப்போம். இப்படியே என் உடம்பில் இசை ஊறியது. 
நாவலர் பாடசாலையிலும் மங்களேஸ்வரி ஆசிரியர் சங்கீத ஆசிரியையாக இருந்தார். அங்கு படித்தவை மிக பயனள்ளவை மறக்க முடியாதவை.
நான் 5ம் வகுப்பில் (9 வயது) ஸ்கொலர்சிப் சோதனையில் சித்தியடைந்த போது (தந்தையார் என்ன வேலை என்றால் எப்போதுமே அப்பா கமக்காரன் என்றே போடுவார். (ஆட்கள் தான் வயல் செய்வது.) எங்களையும் போடச் சொல்லுவார். அதனால் எனக்கு ஸ்கொலர்சிப் பரீட்சை எழுத முடிந்தது. ஏனப்பா இப்படி செய்கிறீர்கள் என்று அப்பாவோடு வாதாடியது ஒரு புறமான கதை. தான் ஒரு கமக்காரன் என்று கூறுவதை அவர் பெருமையாகக் கருதினார்.)
10வயதில் ஸரான்லிக் கல்லுரியில் விடுதியில் இருந்து படித்தேன்.
எல்லாப் பாடங்களுடன் சங்கீதம், நடனமும் பாடங்களாக இருந்தது.
நடனத்திற்கு பிரபல நடன ஆசிரியர் கொக்குவில் சுப்பையா ஆசிரியர். சங்கீத ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை (சுப்பிரமணியமோ..என்னமோ). நடனம் கும்பலோடு கோவிந்தாவாக பழக்குவார். பாடசாலையில் விழாக்களின் போது பிரபலங்களுக்கு பயிற்சிகளே பெரும்பாலும் நடக்கும். நாங்கள் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.
சங்கீதமும் தவணைப் பரீட்சை நடக்கும்.
இப்படி ஒரு தடவை பரீட்சையின் போது எல்லோரும் தனித்தனியாகப் பாடினோம். புள்ளிகள் வழங்கினார்கள். எனது முறை வந்த போது
” எழுந்தாளே பூங்கோதை,
தீயிலிருந்து எழுந்தாளே சீதை…” எனும் கீர்த்தனம் பாடினேன்.
எனக்கே கூடிய புள்ளி கிடைத்தது. நான் நன்கு பாடியது, கூடிய புள்ளி எடுத்தது சங்கீத, நடன வாத்திமாருக்கு ஒரே ஆச்சரியம்! இந்தப் பாடலை அவர்கள் சொல்லித் தரவும் இல்லை. பின்பு கேட்டார்கள் ” எங்கு வேதா இந்தப் பாடலைப் பழகினீர்?” என்று.
அத்தனையும் என் மாமிமார் வகுப்பில் கேட்டது என்று கூறினேன்.
இசையில் எனக்கு இவ்வளவு ஆர்வம் வந்ததற்கு இந்தச் சிறு வயது அனுபவமும் ஒரு காரணமுமாகும்.
இந்திய இசை விழாக்களிற்கு எனது ஒரு சித்தப்பா திருமணம் புரியும் வரை வருடந் தோறும் செல்வார். வந்து கதை கதையாகக் கூறுவார். இந்தச் சித்தப்பா நாவலர் பாடசாலையில் பயிற்றப் பட்ட ஆசிரியராகிப் பின் பாடசாலை அதிபரும் ஆகி ஓய்வு பெற்றார். இன்று கனடாவில் வசிக்கிறார்.
பெரிய மாமி காலமாகிவிட்டார். சின்ன மாமி சுகயீகமாகி கனடாவில் வசிக்கிறார் பேசவும் முடியாது.
நினைவில் தான் பேச முடியும்.
அந்த இனிய காலங்கள் என் வாழ்விற்கு இனிப்பூட்டிய காலம்.
என் வளர்ச்சிக்கு வேலியான காலம்.
பாசம், நேசமான இனித் திரும்பி வராத காலம்.
அப்படியே காலமும் நாமும் இருந்திருக்கக் கூடதோ என்று ஏங்கும் காலம்.
இவை தொலைத்த காலங்கள் தானே!
அது ஒரு நிலாக் காலம்! 
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!

வியாழன், நவம்பர் 24, 2011

தொலைத்தவை எத்தனையோ! - 2


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
நேரம் மாலை ஏழு மணியிருக்கும். இருட்டி விட்டது. அப்பா என்னைக் கூப்பிட்டு ”..அப்பப்பா வீட்டில் இன்றைய வீரகேசரியை எடுத்து வா!..வெளிச்சம் எடுத்துக் கொண்டு போ! (லன்ரன் அல்லது ரோச் லைட்)..”…என்பார். சாதாரணமாக ஒரு எழுபது மீட்டர் தூரமிருக்கும், கூப்பிடு தொலைவில் தான் ஆச்சி அப்பு வீடு உள்ளது.    ( ஆச்சி அப்பு )
இருட்டில் போவதென்றால் எனக்குப் பொல்லாத பயம். ஒளிக் கருவியை எடுத்துக் கொண்டு வீட்டுப் படிக்கட்டால் மண் நிலத்தில் கால் வைக்கும் போது..”தோடுடைய செவியன்..”….என்று தேவாரம் பாடத் தொடங்கி, அங்கு இங்கு  திரும்பிப் பார்க்காது, (அது தான் சுற்றி வர இருட்டே!) பாதையை மட்டும் பார்த்த படி, வேக வேகமாக நடந்து, (சில சமயம் ஓடுவதும் உண்டு,) அப்பு ஆச்சி வீட்டுப் படியேற..”பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே..” என்று தேவாரம் முடியும்.
” என்ன பிள்ளை தனியாகவா வந்தாய்?..” என்பினம்.  ”..ஓ!… தேவாரம் பாடிய படி வந்தேன் ..” என்பேன். அப்பு சாய்மானக் கதிரையில் படுத்திருப்பார். தலைவாசல் மேசையில் விளக்கெரியும். ”..அப்பு பேப்பர் வாசித்து விட்டீர்களா?..”..என்பேன். பிறகு பத்திரிகையை ” அப்பாக்கு கொண்டு போகிறேன்…”…என்று கூறி எடுத்துச் செல்வேன்.
”…தனிய பயமில்லாமல் போவாயா?. நான் கூட்டிக் கொண்டு போய் விடட்டா..?”… என்பார் ஆச்சி. ”..இல்லையாச்சி!… நான் தனியப் போவேன்..” என்று கூறி..மறுபடி மண் நிலத்தில் கால் பதிக்கும் போது ஒரு தேவாரம், அது சொற்றுணை வேதியனாகவும் இருக்கும். வீடு போய்ச் சேர்ந்திடுவேன்…சில வேளை குடல் தெறிக்கும் ஓட்டம் தான்.
ஒரு நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியப்பாவின் வீடு. அவர்கள் பத்திரிகை வாங்கிப் படித்து விட்டு, அப்புவிற்குக் கொண்டு வந்து தருவார்கள். நாங்களும் அதைப் பகிர்வோம். (அப்பா,பெரியப்பா)
நான் இறுதிப் பக்க வலது மூலையில் வரும் சினிமாச் செய்தியைத் தவறாது வாசிப்பேன். அப்பா யாழ்பாணப் பட்டினத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தார். தினமனி, தமிழ்நாடு போன்ற பத்திரிகைகள் அப்பா கொண்டு வருவார். பெரிய கொட்டை எழுத்தில் உள்ள தலைப்புகள் பார்த்து, பிடித்தமானதை வாசிப்பேன். இந்தியப் பத்திரிகைகளாதலால் நிறைய சினிமா செய்திகள் அழகழகான படங்களுடன் வரும், ஆவலாகப் பார்ப்பேன்.
அப்போது தான் கல்கி வாசிக்கப் பழகினேன். பாப்பா மலர், வாண்டு மாமா சிறு கதைகள், அதற்கு வரும் படங்கள் என்று ரசிக்கத் தொடங்கினேன் .
ஓவியர் லதா, மணியன் கீறும் அழகிய படங்களை அப்படியே பார்த்துக் கீறத் தொடங்கினேன். மாமிமார் இருவர் நான் கீறுவதைப் பார்த்து வடிவாக இருக்கு என்பார்கள். எனக்கே எனக்காகப், படம் வரையும் வரைதல் கொப்பி வைத்து, கீறிய படங்களை அலுப்பு வரும் நேரங்களில் நானே பார்த்து ரசிப்பேன்.
பாடசாலையில் நிறப் பென்சில்கள், தண்ணிரில் கரைக்கும் நிறங்கள் என்று, வகுப்பு வளர்ச்சியின் படி வளர்ந்தது எனது இந்த ஆர்வம்.
எனக்கு நல்ல ஞாபகம் சக்கரவர்த்தித் திருமகள், அலையோசை, குறிஞ்சி மலர் கதைகள் வந்;தன. மாமிமார் அவைகளை வாசிக்க,  நான் பாப்பா மலர் வாசிக்க, வீரவிஜயன் சித்திரத் தொடர் பார்க்க என்று குறிப்பிட்ட நாளில் படலையடியில் அப்பாவிற்காக  காத்திருப்போம்.
அப்பா துவிச் சக்கர வண்டியில் பட்டினத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு வருவார். சொல்லப் போனால் மாமிமாருக்கும் எனக்கும் போட்டி தான். நான் முந்தினால் ” ஓ!…எடுத்திட்டாயா!..” என்று மாமி சிரிப்பார். நான் வாசிக்கும் வரை காத்திருந்து அவர்கள் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அதே போன்று அவர்கள் முந்தினாலும் நான் பொறுமையுடன் காத்திருப்பேன். அப்பு ஆச்சி வீட்டில் அவர்கள் வசித்தனர்…(  மாமிமார் ) 
தனித் தனி வீடுகளில் வாழ்ந்தாலும் ஓரளவு கூட்டுக் குடும்பம் போன்ற வாழ்வில் பலவற்றை கண்ணுக்குத் தெரியாத மாதிரியே நாங்கள் பயின்றோம். இவைகளைத் தானே இன்றைய பிள்ளைகள் இங்கு தொலைத்து…..
அது ஒரு நிலாக் காலம்! 
அது ஒரு கனாக் காலம்!
புது தேன் சிந்திய காலம்!
தொடரும்.