ஞாயிறு, ஜூலை 03, 2011

யாமறிந்த மொழிகளிலே

ஆக்கம்: சுஜீதா கண்ணன்,
கனடா
தேமதுரத் தமிழோசை

தமிழ்த் திரைப்படப் பாடகர்களில் பலர் வேற்று மொழிக் காரர்களாக இருப்பது நீங்கள் அறிந்தது. இருப்பினும் அவர்கள் தமிழ் மொழியை ஓரளவுக்கேனும் தெளிவாக உச்சரிப்பதற்குக் காரணம் அவர்களது 'மொழி' தமிழ் மொழியுடன் தொடர்புள்ள ஒரு இந்திய மொழியாக இருப்பதுதான். ஆனால் இந்தியர்கள் தவிர்ந்த வேற்று நாட்டவர்கள் எமது மொழியில் பாடினால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்குமல்லாவா
கடந்த வாரம் தமிழ் மொழியைப் பேசத் தெரியாத, 'மலாய்' மொழியை மட்டுமே பேசத் தெரிந்த முதியவர் ஒருவர் தமிழ்ப் பாடல்கள் சிலவற்றை 'மிகத் தெளிவான உச்சரிப்போடு' பாடியதைப் பார்த்து ரசித்தோம். இந்த மலாய் மொழியானது எமது தமிழ் மொழியோடு எந்தவித தொடர்பும் இல்லாத ஒரு மொழியாகும். இன்றைய நிலவரப்படி மலேசியா, சிங்கப்பூர், புரூணை, இந்தோனேசியா, தாய்லாந்து(மலேசிய தாய்லாந்து எல்லையில்) ஆகிய நாடுகளில் மட்டும் பேசப்படும் மொழியாகும். இந்த மொழிக்கு ஒரு காலத்தில் எழுத்து வடிவம் இருந்ததாக நம்பப் படுகிறது. ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னர் இம்மொழியானது தனது எழுத்து வடிவத்தை இழந்தது. தற்போது ஆங்கில அரிச்சுவடியாகிய A B C D  இருபத்தாறு எழுத்துக்களுமே 'மலாய்' மொழியை எழுதுவதற்குப் பயன்படுகிறது.
1978 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த 'ப்ரியா' எனும் தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளியானது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் சிங்கப்பூரில் நடைபெற்றன. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக 'சிங்கப்பூர் ஆஷா' என்பவர் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்ததன் காரணமாகவும், படப்பிடிப்பு சிங்கப்பூரில் நிகழ்ந்ததன் காரணமாகவும், இப்படத்தில் K.J. ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி இணைந்து பாடிய மலாய் + தமிழ் மொழிக் கலப்புப் பாடல் ஒன்று இடம்பெற்ற காரணத்தாலும் இத்திரைப்படம் சிங்கப்பூர், மலேசிய மக்களால் விரும்பிப் பார்க்கப் பட்டது. எம்மவர்கள் இப்பாடலை ஒரு மலையாள மொழிப் பாடல் என்றே எண்ணிக் கொண்டனர். நம்மில் அநேகமானோர் 'மலையாள மொழி' வேறு, 'மலாய்' மொழி வேறு என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. இப்பாடலைப் பாடிய K.J. ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி அந்தோனி ஆகிய இருவருடைய தாய் மொழியும் 'மலையாள மொழியாகும்' ஆனால் இவர்கள் இப்பாடலை 'மலாய்' மொழியில் பாடியிருந்தனர்.
இப்பாடலானது தனியே 'மலாய்' மொழியில் அமைந்திருந்தால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாது எனக் கருதியே பாடலாசிரியரும், இயக்குனரும், இசையமைப்பாளரும், பாடலின் ஒரு பகுதியைத் தமிழிலும், மற்றொரு பகுதியை 'மலாய்' மொழியிலும் அமைத்திருந்தனர். அதிலும் மிகவும் நுட்பமாகப் பாடலின் பல்லவியை நாயகி(பாடகி) 'மலாய்' மொழியில் ஆரம்பிப்பார், ஆனால் அனுபல்லவி, சரணம் போன்றவற்றில் அவர் 'தமிழில்' பாடலைத் தொடர, நாயகன்(பாடகர்) 'மலாய்' மொழியில் பாடுவார். இரு வெவ்வேறு மொழிகளை வைத்துப் பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி ஆகிய ஐந்து பேரும் நிகழ்த்திய ஒரு மிகத் திறமையான 'சாகசம்' இது என்றால் மிகையாகாது.
இவ்வாரம் அப்பாடலைக் கேட்டு ரசியுங்கள்:


காணொளி உதவிக்கு நன்றி: arsara
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

2 கருத்துகள்:

Ragavan UK சொன்னது…

SUPER.

Anu, USA சொன்னது…

Good song

கருத்துரையிடுக