சனி, மார்ச் 26, 2016

இன்று நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 26.03.2016 சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 27.03.2016 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது 
என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டுபின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து
வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 13.03.2016 அன்று நிகழ்ந்தமையும், அவுஸ்திரேலியாவில் இந்த நேரமாற்றம்(கோடை காலத்துக்கான நேர மாற்றம்) எதிர்வரும் 03.04.2016 அன்று நிகழ உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை இணையம் 

ஞாயிறு, மார்ச் 20, 2016

சென்று வாருங்கள் பாலா அண்ணே!

இலங்கை யாழ்ப்பாணத்தில் எங்கள் கிராமமாகிய அல்லைப்பிட்டியில் நான் அறிந்தவரை எந்தப் பொது நிகழ்வு ஆனாலும் அதில் அக்கறையோடு
அந்திமாலையின் 'கவி வித்தகர்' விருதினை எமது பிரதிநிதி நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கியபோது.
பங்கெடுக்கும் ஒருவர் என்றால் அது நம் அனைவராலும் 'பாலா அண்ணை' என்றும் 'பாலசிங்கம்' என்றும் அழைக்கப் படும் சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரெட் அவர்கள்தான். அல்லையூரின் மூன்றாம் வட்டாரத்தில் மட்டுமன்றி இரண்டாம் வட்டாரத்திலும் நடக்கும் விழாக்களில் 'நிகழ்ச்சித் தொகுப்பாளர்' அவராகத்தான் இருப்பார்.அல்லைப்பிட்டியின் பிரபல கவிஞர்கள் பண்டிதர்.க.வ.ஆறுமுகம், பா.சத்தியசீலன் ஆகியோருடன் எனக்கு நேரடியாக எந்தவித அறிமுகமும் இல்லை. ஆனால் இவரோடும் இவரது கவிதைகளோடும் எனக்கு என் பத்தாவது வயதில் இருந்தே அறிமுகம். இவர் எங்கள் ஊருக்குள்ளேயே தனது திறமையைக் காட்டியதால் பெரிய அளவில் நாட்டின் ஏனைய பாகங்களில் அறியப்படாத 'குடத்துள் ஏற்றிய விளக்கு' ஆகிப் போனார். ஈழப் போராட்ட வரலாறு பற்றி மட்டுமன்றி எங்கள் 'அல்லைப்பிட்டிக் கிராமத்தின்' வரலாறு பற்றியும் நன்கு அறிந்த ஒரு மனிதர். சகல வரலாற்றுத் தகவல்களும் இவரது விரல் நுனியில் எனலாம்.
ஈழப் போராட்ட இயக்கங்கள் வெளியிட்ட 'புதிய பாதை', 'களத்தில்', 'பொதுமை', 'விடுதலைப் புலிகள்', 'பதாகை' மற்றும் 'தீப்பொறி' ஆகிய பத்திரிகைகளை சேகரித்து வைத்திருந்தமைக்காக 80 களின் இறுதியில் வடக்கு கிழக்கை ஆண்ட குழுவினரால் யாழ்ப்பாணம் 'அசோகா ஹோட்டலுக்கு' அழைக்கப் பட்டு நையப் புடைக்கப் பட்டார். ஒரு சில வாரங்களில் அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து இந்திய ராணுவத்தின் தளபதி ஒருவரும், மேற்படி குழுவின் பொறுப்பாளர் ஒருவரும் இவரிடம் மன்னிப்புக் கோரினர்.
ரூபாய் பத்தாயிரத்துக்கான பணமுடிப்பை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்வரன் சொர்ணலிங்கம் அவர்கள் வழங்கியபோது.
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட ஒரு மனிதன் 40 வருடங்களுக்கு மேலாக கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தும் யாரும் அதனை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவருடைய ஒரு சில கவிதைகள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வந்ததோடு சரி. இது எங்கள் கிராமத்துக் கலைஞனுக்கு செய்யப் படும் அநீதி என்று உணர்ந்தேன். இவரை ஒரு பொழுதேனும் கௌரவிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு ஏற்றாற் போல வாய்ப்புகள் வந்தது 2010 ஆம் ஆண்டில் 'அந்திமாலை' என்ற எங்கள் இணையத்தை தொடங்கியபோது  "இவரைக் கௌரவித்தல் வேண்டும்" என்ற யோசனையை எனது சகோதரன் 'சதீஸ்வரனும் ' முன் மொழிந்தார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் திரு.பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் நாங்கள் ஒரு சிறிய விழாவை நிகழ்த்தி அன்னாருக்கு 'கவி வித்தகர்' என்ற விருதை வழங்கி கௌரவித்தோம். எமது(அந்திமாலை) இணையம் சார்பாக மேற்படி விருதினை எமது பிரதிநிதி.நிமால் கந்தசாமி அவர்கள் வழங்கினார். எம்மால் வழங்கப் பட்ட ரூபாய் பத்தாயிரம் பண முடிப்பினை எமது நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எனது சகோதரர். சதீஸ்வரன் சொர்ணலிங்கம் வழங்கினார்.
பெற்றுக் கொண்ட விருதுடன் அமரர்.சந்தியாப்பிள்ளை வில்பிரெட் சேவியர்(பாலசிங்கம்) அவர்கள்.
என் வாழ்வில் நான் பார்த்து வியந்த ஆளுமைகள் இருவர். ஒருவர் 'மல்லிகை' சஞ்சிகையின் ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா அடுத்தவர் அண்ணன் திரு.பாலசிங்கம் அவர்கள். இருவருடைய கல்விப் பின்னணியும் மிகக் குறைவானது ஆனாலும் இருவரும் தமது எழுத்து ஆற்றலில், ஆளுமையில் சிறந்தே விளங்கினர். நாற்பது வருடங்களாக தனது கவிப் பணியில் இடைவிடாது உழைத்த, தனது மண்ணை கடைசிவரை நேசித்து அந்த மண்ணுடனே உழன்று சகல பொதுப் பணிகளிலும் முன்னின்று உழைத்த ஒரு மனிதனுக்கு அத்தகைய ஒரு சிறு கௌரவத்தையேனும் வழங்காமல் விட்டிருந்தால் எங்கள் ஊரின் வரலாறு என்னைப் பழித்திருக்கும் என்பதே உண்மை.
"வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசி, விதி வந்தால் சாவோம்" என்று வாழ்வது அர்த்தமுள்ள வாழ்க்கை அல்ல என்று அமரர்.பாலா அண்ணை அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் ஒன்று படுகிறோம். அவரிடம் அல்லைப்பிட்டியின் வரலாறு பற்றி செவி வழித் தகவல்களும், ஆதாரங்களும் இருந்தன. அவரை ஊருக்குச் செல்லும்போது சந்தித்துப் பேசி 'காணொளி' ஒன்று தயாரிக்க எண்ணியிருந்தேன். விதி முந்திக் கொண்டது. நாம் நினைக்கின்ற அத்தனையும் நடந்து விடுகிறதா என்ன? இருப்பினும் அந்தக் கலைஞனுக்கு என்னால் முடிந்த
அந்திமாலை இணையத்தால் அமரர்.பாலசிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுக்கான சான்றிதழ்.
ஒரு கௌரவத்தை அவர் வாழும் காலத்திலேயே அளித்துள்ளேன் என்பதில் எனக்கு ஒரு மன நிறைவு. அன்னார் தனது பிற்காலத்தில் எழுதிய ஆக்கங்களை, கவிதைகளை அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட அனைவரும் 'அல்லையூர் இணையத்திலும்', 'அந்திமாலையிலும்' படித்திருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.
சென்று வாருங்கள் பாலா அண்ணே! அல்லைப்பிட்டியின் மண் மறவாத மனிதர்களில் நீங்களும் ஒருவராக என்றென்றைக்கும் இருப்பீர்கள்.
அன்னாருக்கு எனது இதய அஞ்சலிகளைச் சமர்ப்பிப்பதோடு, அவரது பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"சீவியத்தில் என்னை நேசித்தவர்களே; மரணத்திலும் என்னை மறவாதிருங்கள்"

ஆழ்ந்த இரங்கலுடன்
அல்லையூரின் மைந்தர்களில் ஒருவன்
இரா.சொ.லிங்கதாசன்
டென்மார்க்.

புதன், பிப்ரவரி 24, 2016

சென்று வா நண்பனே!


திரு.குமரையா வித்தியாதரன்
மண்ணில்: 16.05.1956
விண்ணில்: 20.02.2016
கடந்த 20.02.2016 அன்று எம்மை எல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு திடீர் மறைவு எய்திவிட்ட எங்கள் அன்பு நண்பர், எம் உடன் பிறவா சகோதரர் திரு.குமரையா வித்தியாதரன் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகளைச் சமர்ப்பிக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்க முடியாத இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும்தான். நல்ல முறையில் எல்லோருடனும் வேறுபாடு எதுவும் காட்டாது பழகக் கூடிய, உதவும் உள்ளம் கொண்ட, அறிவுசால் ஆளுமை படைத்த ஒரு இனிய நண்பரை இழந்து விட்டோம். அன்னாரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
எந்த அளவுக்கு தனது கொள்கைகளில், கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பாரோ அதே அளவு மென்மையான சுபாவமும், குழந்தை உள்ளமும் கொண்டவர் என்பது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. நல்ல செயல் ஒன்றை செய்ய வேண்டும் என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டக் கூடியவர். துணிச்சல் மிக்கவர். தனது கருத்துக்களை எந்த இடத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இயல்பு கொண்டவர். இதனால் எந்த இழப்பு ஏற்பட்டாலும் அதனை இட்டுக் கவலைப்படும் குணம் அவரிடம் கிடையாது எனலாம். தனது கொள்கைகளை எந்த இடத்திலும், யாருக்காகவும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ அவர் தயாராக இருந்ததில்லை. அவரைப் பொறுத்தவரை சரி என்றால் சரி; தவறு என்றால் தவறு என்று எவரிடத்திலும் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்.  சொல்லிலும், செயலிலும் என்றும் நேர்மையாகவே வாழ்ந்தார். அவரைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவர் ஒரு நல்ல மனிதர். புரிந்து கொள்ளாதோர் அவரை ஒரு 'முரட்டுத் தனமான' மனிதராகவே பார்த்தனர்.
நமது நகரத்தில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்த தமிழர்களில், அறிவாளிகளில் அன்னாரும் முக்கியமான ஒருவர்.விளையாட்டு, பொது அறிவு, அரசியல் என பல துறைகளில் ஆர்வமும் அறிவும் படைத்தவர். அன்னாரின் திடீர் இழப்பு எம்மையெல்லாம் அதிர்ச்சியிலும், ஆறாத் துயரத்திலும் ஆழ்த்தி விட்டது. அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கிறோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)



                                                               இங்ஙனம் 
அன்னாரின் பிரிவால் துயருறும் 
ஃபிரெடெரிக்ஸ்ஹாவன்(Frederikshavan) ஷேபி(Sæby) நகர நட்புகள்.   


முக்கிய குறிப்பு: அன்னாருடைய இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(24.02.2016) டென்மார்க், ஃபிரெடெரிக்ஸ்ஹாவன் நகரத்தில் இலக்கம் 160,  Brønderslevvej , 9900 Frederikshavn இல் உள்ள Gærum Kirke தேவாலயத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணிவரை நடைபெற்று பூதவுடல் Hjørring நகரத்தில் உள்ள மின்னணு மயானத்தில் தகனம் செய்யப் படும் என அவரது குடும்பத்தினர் அறியத் தந்துள்ளனர். 

வெள்ளி, ஜனவரி 15, 2016

தைத்திருநாள் வாழ்த்துகள்



எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இந்தப் பொங்கல் திருநாளும் இனிவரும் நாட்களும் உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என வாழ்த்துகிறோம்.
"ஒன்றுபட்டு உயர்வோம்"

மிக்க அன்புடன் 
ஆசிரியர் 

-அந்திமாலை- 

ஞாயிறு, ஜனவரி 10, 2016

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல்

கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. (1264)   

பொருள்: பிரிந்து சென்ற எனது காதலர் அன்போடு திரும்பி வருவார் என்று நினைத்து என் நெஞ்சம் மரக்கிளைகள் தோறும் ஏறிப் பார்க்கிறது.


சனி, ஜனவரி 09, 2016

கவியரசு கண்ணதாசன் பார்வையில் 'காதல்'

தாய்மையின் குழைவும் தந்தையின் பரிவும் பூமியின் பொறுமையும் பொறுப்புள்ள புன்னகையும் துணை வாடத் தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!

காமம் முன்னால் தள்ள, நாணம் பின்னால் இழுக்கும் நாடகமே காதலில் சுவை.

இளமைக் காதலுக்கு இதயமில்லை. நடுப்பருவக் காதலுக்கு இதயமே தலைவன்.

காதல் உன்னதமானதென்று முதன் முதலில் சொன்னவனே, அதில் தோல்வி கண்டவனாகத்தான் இருந்திருப்பான்!


அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, சிலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்... நிறையபேர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

தன்னைப் பார்ப்பதற்காக மனிதன் கண்ணாடியைப் படைக்காமலிருந்தால், உலகத்தில் காதலில் பாதி குறைந்திருக்கும்.
கண்ணையே படைக்காமல் இருந்திருந்தால், காதல் எவ்வளவு புனிதமாக இருந்திருக்கும்!

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன. மனமும் மனமும் நினைக்கின்றன. உடலும் உடலும் துடிக்கின்றன. இது காதல்!

இளமையிலே காதல்தான் ஒவ்வோர் உயிருக்கும் முதற்கொள்கை.

சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க்களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.

நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது. தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு
இது தலைமை வகிக்கிறது.

படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது. அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப்
பத்திரிகைககளின் மூலம் இது பெறுகிறது.

இது காதல்!
காதல் இரண்டு வகைப்படும். ஒன்று, தோல்வியுறுவது! மற்றொன்று, முப்பது வயதுக்கு மேல் வருவது!

இயற்கையை முறியடிக்க, எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள், காதலையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடும், அவர்களுக்கு காதல் இல்லாமலிருந்தால்!

கைகோர்த்துக்கொண்டு, கடற்கரைக்குப் போகும் காதல் நாகரிகம், வெகு விரைவில் காதலைக் கசப்பாக்கிவிடுகிறது.


நாம் மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். தாழிட்ட கதவும் தடைப்பட்ட காதலுமாகத் தலைவனும் தலைவியும் போராடும் இலக்கியச் சுவைக்குத் திரும்பியாக வேண்டும்.

'காதல் கவி' கண்ணதாசன் பற்றிய சில குறிப்புகள்:

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி(சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு)

பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

நன்றி: ஃபாத்திமா, இலங்கை.