சனி, அக்டோபர் 15, 2011

அரை டிக்கட்..!

ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் 
நமது ஆசிய நாடுகளில் பேருந்துப் பயணம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் என நான் கூறினால் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஆனால் இங்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் சில வருடங்களில் பிறக்கப் போகும் அடுத்த தலைமுறைக்கு 'பேருந்து' என்றால் என்ன என்று புகைப் படங்களிலும், காணொளிகளிலும் காண்பித்தே விளக்க வேண்டியிருக்கும் என்பது எனது மதிப்பீடு.
ஐரோப்பாவில் பேருந்துப் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதை நான் வாழும் டென்மார்க்கிலும் என்னால் கண்கூடாகக் காண முடிகிறது. இருப்பினும் புகையிரதங்களில்(ரயில்களில்) பயணிப்போர் தொகை குறைவடைந்ததாகத் தெரியவில்லை. காரணமும் உங்களுக்குத் தெரியும். அதிக தூரத்தைக் குறைந்த செலவில் கடப்பதற்கு புகையிரதத்தைப் போல் மலிவான போக்குவரத்துச் சாதனம் ஏதுமில்லை. ஆகவே புகையிரத சேவை இப்போதைக்கு வழக்கொழிந்து விடப் போவதில்லை. ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்து அகண்ட ஐரோப்பாவாக 'ஐரோப்பிய ஒன்றியம்' அமைக்கப் பட்ட பின்னர் ஏறக்குறைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளையும் இணைப்பதற்கு ரயில்கள் வந்து விட்டன. காலையில் டென்மார்க்கில் ரயிலில் ஏறுபவர் அடுத்த நாட் காலையில் இத்தாலியில் இறங்கும் வசதி வந்து விட்டது. 'பிசாசுகளின் கண்டுபிடிப்பு' என முன்னைய நூற்றாண்டில் வர்ணிக்கப் பட்ட 'புகையிரத சேவை' எந்தவித தங்கு தடையும் இல்லாமல் வளர்ந்து செல்கிறது. இதனிடையே புகையிரத சேவை பற்றிய ஒரு பொது அறிவுத் தகவலையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது உலகிலேயே ஆகக் கூடுதலான பணியாளர்கள் பணியாற்றும் இரண்டாவது பெரிய நிறுவனமாக 'இந்திய புகையிரத சேவை (Indian Railway) திகழ்கிறது.
இந்திய ரயில்வேயில் சுமாராக 14 லட்சம் பணியாளர்கள் பணி புரிகின்றனர். நாளொன்றிற்கு இந்தியா முழுவதும் சுமாராக மூன்று கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். உலகில் ஆகக் கூடுதலான பணியாளர்களுக்கு வேலை வழங்கியுள்ள நிறுவனம் மக் டொனால்ட்ஸ் (Mc Donalds) ஆகும்.
சரி திரும்பவும் நமது பேருந்துப் பயணத்திற்கே வருவோம். ஏழைகளும் பயன்படுத்தும் இந்த 'பேருந்து' என்ற போக்குவரத்துச் சாதனம் தனது செல்வாக்கை இழந்து செல்வதற்கு காரணம்தான் என்ன? எல்லாம் 'உலக மயமாக்கல்' என்ற மந்திரம்தான் காரணம். ஒவ்வொரு நடுத்தர குடிமகனும் தனியாக வாகனம் வைத்திருப்பதற்கு வசதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் அந்த வசதியை முனைந்து ஏற்படுத்தி, ஒரு நடுத்தரக் குடும்பத்து உழைப்பாளியை காலாதி காலத்திற்கும் 'கடனாளியாக' ஆக்கும் கடமையை??? உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான நிதி நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்பேற்றுள்ளன. இவைகள் இருக்கும்வரை சாதாரண, நடுத்தர உழைப்பாளி ஒருவன் சொந்தமாக வாகனம் வைத்திருக்க வேண்டும் என்ற கனவில் மிதப்பதும், அதை அடைவதற்கும், அடைந்தபின் அதை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் "மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து போக வேண்டும்" என்பது எழுதப்படாத விதி.
மேலே நான் குறிப்பிட்ட காரணிகளின் தாக்கங்களால் பின்னடைவைச் சந்தித்தது 'பேருந்து சேவை' மட்டுமன்றி சாதாரண ஏழை மக்களும்தான். ஆரம்பத்தில் பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் மக்கள் பேருந்து சேவைகளை தீண்டியும், சீண்டியும்  பார்க்கவில்லையாம். இதனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளை ஆண்ட பிரித்தானியப் பேரரசு இந்நாடுகளில் மிகவும் மலிவான கட்டணத்தில் இச்சேவையை இயக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாம். அதுவே பிற்காலத்தில் சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் அரைக் கட்டணம், மாதம் முழுவதும் பயணம் செய்வோருக்கும், அரசு ஊழியர்களுக்கும் சலுகைக் கட்டணம் என்று பின்னால் வந்த சுதந்திரத்திற்குப் பின்னான அரசுகளின் 'சலுகையாக' விரிவடைந்தது.
நான் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் கல்விகற்கத் தொடங்கிய காலப்பகுதியில் அரசுப் பேருந்தில் தினமும் பயணம் செய்வது வழமையாக இருந்தது. அக்காலத்தில் அரசு அறிவித்திருந்த மாணவர்களுக்கான சலுகைக் கட்டண விலையில் கிடைக்கும் பருவகாலச் சீட்டில்(Season Ticket) பயணம் செய்து வந்தேன். இந்தப் பயணச் சீட்டிற்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். இது ஒரு சிறுவன் சுமாராக 22 நாட்கள் பேருந்திற்குச் செலுத்தும் 'அரைக் கட்டணத்தின்(அரை டிக்கட்) மூன்றிலொரு பகுதி ஆகும். இத்தொகையை மாதாந்தம் பிள்ளைகளுக்கு கொடுத்து உதவ முடியாமல் திண்டாடிய குடும்பங்கள் பல என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. மேற்படி பருவகாலச் சீட்டில் ஒரு குறைபாடு இருந்தது. அதாவது சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைத் தினங்களில் இதனை உபயோகிக்க முடியாது.(தற்போதும் இதே விதிமுறை தானா என்பது எனக்குத் தெரியாது) சனி, ஞாயிறு தினங்களிலோ விடுமுறைத் தினங்களிலோ பயணம் செய்யும் மாணவன் அல்லது மாணவி பேருந்துக் கட்டணமாக அரை டிக்கட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். அதிலும் பதினாறு வயதைத் தொட்டு விட்டால் முழுக் கட்டணம் செலுத்த வேண்டும். 
எனக்குப் பதின்மூன்று வயது ஆகியிருந்த காலம் தொட்டு இவ்வாறு விடுமுறை நாட்களில் எனது அம்மம்மாவின்(பாட்டி) பாய், அல்லது காய்கறியை யாழ்ப்பாண நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. நான் பேருந்தில் எப்போதும் அரை டிக்கட் எடுத்தே பயணம் செய்தேன்.எனக்குப் பதினாறு வயது ஆகியிருந்த காலப் பகுதியிலும் நான் 'அரை டிக்கட்' எடுத்தே பயணம் செய்தேன். எனது உயரம் குறைந்த 'சிறிய உருவம்' மேற்படி அரை டிக்கட் சங்கதிக்கு மிகவும் வாய்ப்பாகப் போய் விட்டது. பேருந்தின் நடத்துனர்கள்(கண்டக்டர்) யாருமே நான் 'முழுக் கட்டண' வயதை எட்டி விட்டேன் என்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ஒருநாள் நான் யாழ் நகரிலிருந்து பேருந்தில் எனது கிராமத்திற்கு திரும்பி வந்துகொண்டிருக்கையில் ஒரு 'விவரமான' நடத்துனர் எனக்கு வயது வந்து விட்டது என்பதைக் கண்டு பிடித்ததும் இல்லாமல், அதைப்பற்றி நாசுக்காக எடுத்துரைத்ததை இப்போதுகூட ஒவ்வொரு தடவையும் பேருந்துகளில் ஏறும்போது நினைத்துக் கொள்வேன். அவர் என்னை பேசியிருந்தால்(திட்டியிருந்தால்) அதை நான் எப்போதோ மறந்திருப்பேன். ஆனால் அவர் என்னிடம் கேட்ட கேள்வியில் 'வெட்கம்' என்னைப் பிடுங்கித் தின்றதை என்னால் மறக்கவே முடியாது.
அவர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் "என்னடா தம்பி, உனக்கு மீசை கூட முளைத்து விட்டது. இன்னமும் அரை டிக்கட்டா கேட்கிறாய்? நீ என்னை ஏமாற்றுகிறாயா? அல்லது CTB யை(இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சுருக்கக் குறியீடு) ஏமாற்றுகிறாயா?"
அன்றிலிருந்து நான் பஸ்ஸில் 'அரை டிக்கட்' வாங்குவதேயில்லை.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல ஆக்கம். வாழ்த்துகள்.

Uthayan சொன்னது…

Good. I like this story

கருத்துரையிடுக