இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.9
பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
கொஞ்ச நேரம் பொறுமையாக எனது தந்தையாரின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த எனது தாயார் இறுதியாக "தாசனை(எனது வீட்டுப் பெயர் இதுவாகும்) நான், அம்மா வீட்ட(எனது பேர்த்தியாரின் வீடு) கொண்டுபோய் விட்டுப் படிப்பிக்கப் போறன்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதைக் கேட்ட எனக்கு 'வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல் இருந்தது.
எனக்கு ஏற்பட்ட பயத்திற்குக் காரணம் இந்த உலகத்தில் அப்பா,அம்மா தவிர்ந்த ஏனைய மனிதர்களோடு, வேறொரு வீட்டில் சென்று வாழ்வதென்பது என்னைப்பொறுத்தவரை வேறு ஒரு 'பயங்கரமான' உலகத்தில் வாழ்க்கை நடத்துவதற்கு ஒப்பானது. தவிரவும் எனது பேர்த்தியார் வீடு என்பது எங்கள் 'மண்டைதீவுக்' கிராமத்திற்கு மிக அருகிலிருக்கும் 'அல்லைப்பிட்டி' எனும் கிராமத்தில் அமைந்திருந்தது. இரு கிராமங்களுக்கும் இடையிலான தூரம் அதிகமில்லை. மண்டைதீவையும் அல்லைப்பிட்டியையும் ஒரு கிலோமீட்டர் நீளமான ஆழம் குறைந்த கடலும், மூன்று கிலோ மீட்டர் நீளமான வீதியுமே பிரித்தன. என்னைப்பொறுத்தவரை மண்டைதீவும், அல்லைப்பிட்டியும் வேறு வேறு நாடுகள். எனது அம்மம்மா(பேர்த்தியார்) 'அல்லைப்பிட்டி' எனும் நாட்டில் வசித்து வருகிறார், நாங்கள் 'மண்டைதீவு' எனும் நாட்டில் வசித்து வருகிறோம் என்பதே எனது கற்பனையாகும். இந்த நிலையில் எனது அப்பா, அம்மா, சகோதரங்களைப் பிரிந்து வேறொரு நாடாகிய 'அல்லைப்பிட்டியில்' உள்ள எனது அம்மம்மாவின் வீட்டில் சென்று வாழ்வதென்பது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் என் தாயார் மிகவும் சுலபமாக அந்த முடிவை எடுத்ததும் என்னைத் திகைப்பூட்ட வைத்தது.
என் அம்மாவின் பெரும்பாலான ஆலோசனைகளைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதவராகிய என் அப்பா "ஏதோ உன்ர விருப்பம்போல செய், பொடி(கிராமத்துப் பாசையில் 'சிறுவன்') எங்கயெண்டாலும் படிச்சாச் சரிதானே? என்று கூறித் தன் கடமையிலிருந்து "கழுவிய மீனிலிருந்து நழுவிய மீனாக" நழுவினார். இவர்களுடைய திட்டத்தைச் செவிமடுத்துக்கொண்டிருந்த நான் புதிய ஊரும், புதிய வாழ்வும், புதிய பள்ளிக்கூடமும் எவ்வாறு இருக்குமோ எனப் பயந்ததோடு "புதிய டீச்சர் எப்படி இருப்பாவோ? என்றும் மனதுக்குள் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு, "மூளையைக் கழற்றிவைத்து யோசிக்க ஆரம்பித்தேன்.
நான் கல்வியின் நிமித்தம் 'நாடுகடத்தப்பட உள்ளேன்' என்ற தகவல் என் அண்ணன், மற்றும் என் தம்பி ஆகியோரின் சிறிய 'மூளைகளுக்குள்' புகுந்து கொண்டது. அவர்களுக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. ஏனெனில் இனிமேல் அப்பா யாழ்ப்பாணத்தில் வாங்கிவரும் வடை, வாய்ப்பன்(தமிழ்நாட்டில் 'போண்டா'), பற்றீஸ்,ரொட்டி, ரோஸ்(இறைச்சியைப் பொரித்துக் குழம்பு வைத்தல்) போன்றவைகளுக்குப் போட்டியிடுவதற்கு 'நான்' இருக்க மாட்டேன் அல்லவா? வீட்டில் என்ன நல்லது கிடைத்தாலும் அது அவர்கள் இருவருக்குமிடையில் பங்கிடப்படும் அல்லவா? இதுதான் அவர்களுடைய ஆனந்ததிற்குக் காரணம்.
இவ்விடத்தில் எனது தலைவிதியை அல்லது எதிர்காலத்தை 'மண்டைதீவு' எனும் கிராமத்திலிருந்து 'அல்லைப்பிட்டிக்கு' மாற்றிய பெருமை உடைய 'செல்லி அக்கா' பற்றிய ஒரு வேடிக்கையான தகவலையும் உங்களுக்குக் கூறியே ஆக வேண்டும். அதாவது மேற்படி அவர் எனக்கு 'ஈர்க்குக் கட்டால்' அடித்த சம்பவம் நிகழ்ந்து ஒரு பதினெட்டு வருடங்கள் கழித்து நான் பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது என் பெற்றோர்களைப் பிரிந்து வெகு தொலைவில் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பல்கலைக் கழகப் படிப்பில் எனக்குக் கிடைக்கும் தேர்ச்சி அறிக்கையை(மதிப்பெண் பட்டியல் / marks statement) ஒரு பிரதி எடுத்து நான் என் தாயாருக்குத் தபாலில் அனுப்பி வைப்பது வழக்கம். இதை 'ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் என் தாய்' யாழ் நகரில் வாழ்ந்த காலப்பகுதியில் எங்கள் வீட்டிற்கு வருவோர், போவோரிடமெல்லாம் காட்டுவது வழமை. இதே போலவே 'செல்லி அக்காவிடமும்' என் தாயார் காட்டியிருக்கிறார். அப்போது அதைப் பார்த்த செல்லி அக்கா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "அவன் சரியான கெட்டிக்காரனா வருவான் எண்டு எனக்கு அப்பவே தெரியும், அவன் என்னட்டப் படிச்ச புள்ள, என்னட்டப் படிச்ச புள்ளையளிலேயே என்ர பேரைக் காப்பாற்றுறவன் அவன் மட்டும்தான்" என்று காலத்திற்குத் தகுந்தாற் போல் 'நிறம் மாறிய' பெண்மணியாகத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவரிடம் மூன்றே நாட்கள் மட்டும்தான் கல்வி கற்றேன் என்பதையும், மூன்றாவது நாள் ஈர்க்குக் கட்டால் அடிவாங்கினேன் என்பதையும் தனக்கு வசதியாக 'மறந்துவிட்டார்' இத்தகைய மனிதர்களுக்கு என்னைப்பற்றி 'நற்சாட்சிப் பத்திரம்' வழங்குவதற்கு தகுதி உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
4 கருத்துகள்:
நல்ல தொடர். எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ரொம்ப பிடிக்கும்
நல்ல ரசனையாக எழுதுறீங்க. நல்லா இருக்கிறது.
very nice i like to read too much. all best to your article as
i like this webside do to run and following as good article
கருத்துரையிடுக